Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
அரசுப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வரும் எனக்கு தற்போது கொரொனா ஏற்படுத்தியுள்ள இத்தகைய அசாதாராண தருணங்கள் கனவிலும் நினையாத ஒன்று.
துள்ளித்திரிந்த பள்ளி மைதானங்கள் வெறிச்சோடி இருக்கின்றன. காலை முதல் மாலை வரை, மாணவர்களின் மிஸ், சார் எனும் சத்தத்தை மொத்தமாக மிஸ் செய்வது ஆசிரியர்கள் மட்டுமல்ல பள்ளிகளின் வகுப்பறைகளும் கூட.
அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பள்ளி என்பது வெறும் கல்வி பயிலும் இடம் அல்ல; எந்த பள்ளி மாணவருக்கும் பள்ளி என்பது மகிழ்ச்சியின் வாசல். வீடுகளை விட பள்ளியை விரும்பும் குழந்தைகள். ‘லீவுன்னாலே போர் மிஸ்’ என புலம்புபவர்கள், இங்கே அரசுப்பள்ளிகளில் மாணவ ஆசிரியர் உறவை இதுவரை எந்த ஊடகங்களும் முழுமையாக பதிய வைத்ததில்லை. அத்தனை அழகும் ஆழமும் நிறைந்த உறவு.
சின்ன முகவாட்டமானாலும் மாணவரின் வீட்டில் ஏதோ சரியில்லை இன்று என புரிந்து கொள்ளும் ஆசிரியரும், ஆசிரியர் என்னதான் தன் பிரச்சனைகளை மறந்து பாடம் எடுத்தாலும் இன்னைக்கு என்ன ஒரு மாதிரியா இருக்கீங்க மிஸ்? என புரிந்து கேட்கும் மாணவர்களும்…
கனவிலும் நினையாத கொரொனா இன்று வாழ்க்கையின் இந்த அழகான உறவினை பிரித்திருக்கிறது. மனதளவில் மிகுந்த சோர்வடைந்திருக்கிறார்கள் மாணவர்களும் ஆசிரியர்களும்.
கடந்த 15 ஆண்டுகளாக, அரசுப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வரும் எனக்கு தற்போது கொரொனா ஏற்படுத்தியுள்ள இத்தகைய அசாதாராண தருணங்கள் கனவிலும் நினையாத ஒன்று.
பொதுத்தேர்வுக்கான ஆயத்தம் என அடுத்தடுத்த பணிகளில் மூழ்கிக்கிடந்தோம் நாங்கள். இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு முடிகிறது என 12 ஆம் வகுப்பு மாணவர்களும் இதோ ஆரம்பிக்கப்போகிறது என 10 ஆம் வகுப்பு மாணவர்களும் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த அந்நேரத்தில் கொரொனா இந்தியாவிலும் தன் விளையாட்டை ஆரம்பித்திருந்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 24 ஆம் தேதியுடன் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் 11 ஆம் வகுப்புக்கு கடைசி தேர்வு நடத்தப்படாமலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டும் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உடல் மற்றும் மனரீதியாக பல வேறுபாடுகள் உண்டு. அப்பாவும் அம்மாவும் கூலி வேலை செய்து இரவு திரும்ப எங்கள் மாணவிகள் மட்டுமல்ல இங்கு மாணவர்களுக்கும் வீட்டை சுத்தம் செய்வது சமைப்பது என பல வேலைகள் அத்துப்படி.
பொருளாதார அளவில் பின் தங்கி இருந்தாலும் சிறந்த தற்சார்பு குணம் கொண்ட இவர்களுக்கு படிப்பில் மட்டுமே, முழு கவனம் செலுத்தும் சூழல் பெரும்பாலும் இல்லை. ஆனாலும் சகலகலா வல்லவர்கள்.
அறியாமை மட்டுமே நிறைந்த பெற்றோர்கள், சில குடித்து விட்டு சண்டை போடும் குடும்பத்தலைவர்கள், தனித்து வளர்க்கும் தாய் அல்லது தந்தை அத்தனை மனச்சுமைகளையும் தாண்டி துவண்டு விடாமல் அங்கிருந்து வந்தும் முதல் ரேங்க் எடுக்கும் அபூர்வ சிந்தாமணிகளும் இங்கே அதிகமே. இதை உணர்ந்ததாலேயே இரு பள்ளிகளையும் ஓப்பீடு செய்து தொலைக்காட்சி சேனல்களில் விவாதங்கள் நடைபெறும்போது வெறும் நகைப்போடு கடந்து போக முடிகிறது அரசுப்பள்ளி ஆசிரியர்களால்.
மாணவர்கள் சிலர் நாள் முழுதும் வீட்டிலேயே அடைந்திருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அது அவர்களூக்கு சிறிதும் வழக்கமற்ற ஒன்று. மொபைல் கொடுத்தாலும் அதிக பட்சம் ஒரு மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்து விளையாட பேச முடியாது அவர்களால். சைக்கிள் எடுத்துகொண்டு நண்பர்கள் வீட்டில் சென்று அவர்களையும் அழைத்துக்கொண்டு ஒன்றாக விளையாடவேண்டும் அவர்களுக்கு. இப்போது எதுவும் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளே கிடப்பது அவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
கூலி வேலை செய்யும் அப்பா அம்மா இருவருக்கும் வேலை இல்லாததால் ஒருவேளை உணவுடன் காலம் ஓட்டும் மாணவர்களும் உண்டு. சிலர் பிழைப்புக்கு வழி இல்லை என தீர்மானமாக தெரிந்த பின் சொந்த ஊருக்கு போனால்தான் உறவுகளுடன் சேர்ந்து கொஞ்சமாவது சமாளிக்க முடியும் என கிளம்பியவர்கள்.
நான் மாணவர்களுடன் பேசியபோது ஊருக்கு போய் உறவுகளோடு வாழும் குழந்தைகளின் உற்சாகம் இங்கே வீட்டிலேயே அடைபட்டு கிடப்பதில் இல்லை என தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது.
நகரங்களுக்கு வந்தால்தான் பிழைப்பு என்பது ஏட்டுச்சுரைக்காய் வார்த்தைகள் தானோ? பிழைப்பு வேறு வாழ்க்கை வேறு!
இங்கே நகரங்களில் பிழைத்து கிடக்கலாம். ஆனால் வாழவேண்டும் என்றால் அதற்கு சொந்த ஊர்தான் சாஸ்வதம். (நாடு விட்டு நாடு சென்றவர்களும் இந்த வைரஸ் பரவல் தேசங்களில் இந்த உண்மையை உணர்ந்திருப்பார்கள்).
மொத்தத்தில் மாணவர்களுக்கு நோயின் தீவிரத்தைப் பற்றிய உணர்வும் புரிதலும் குறைவே. ஒரு மாணவன், நன்றாக படிப்பவனும் கூட அவனை கால் செய்து எப்படியிருக்கிறாய் என கேட்டபோது,
“மிஸ் லீவ் சொன்னதுமே நான் எங்க ஊருக்கு வந்துட்டேன்” என்றான்.
அப்போ சமத்தா வீட்டில் இருக்கிறாயா என்றேன்.
“மிஸ் வீட்டிலேயே எப்படி? சாயங்காலம் ஆனா மாடு மேய்க்க கிளம்பிடுவேன் ஜாலியா இருக்கேன்…”
“சரிமா இப்போ எக்ஸாம் வரப்போகுது, படி சரியா சீக்கிரம் வந்திடு.”
“அப்பப்போ படிக்கிறேன் மிஸ், ஆனா பஸ் இல்லாம எப்படி மிஸ்?”
பஸ் வந்தாதான் வரமுடியும்” என்றான் தெளிவாக.
இதில் ஆன்லைன் வகுப்புகளில் எங்கள் மாணவர்கள் தனி விதம். ஜூம் app கூகுள் டீம் – அதை தரவிறக்கம் செய் , இதை இன்ஸ்டால் செய் என ஏதாவது சொன்னால் இருக்கும் வாட்ஸ் ஆப்பில் இருந்தும் அவர்கள் திடீரென வெளியேறி விடும் அபாயமும் ஏற்படுவதால் பெரும்பாலும் மாணவர்களுக்கு அதிகம் அறிமுகமான வாட்ஸ் ஆப் மூலமாகவே ஆன்லைன் வகுப்புகள்.
மாணவிகள் மட்டுமே ஓரளவு ஆர்வத்துடன் கொடுக்கும் வேலையை செய்வது வீட்டுப்பாடங்கள் முடிப்பது எல்லாம். மாணவர்கள் டேக் இட் ஈஸி பாலிஸிதான்!
“மிஸ் என் மொபைலில் கேமரா ரிப்பேர் ஆடியோ வேலை செய்யல”
“எங்க ஊர்ல சிக்னல் சரியில்ல”
“அப்பா மொபைல் எடுத்துட்டு போயிட்டார்” என சிலர் சொல்வதில் உண்மை இருந்தாலும் அழகாய் ஆயிரம் கதைகள் சொல்லும் குறும்புக்கார மாணவர்களும் உண்டு. .நம்பும்படியாக நடித்தே ஆகவேண்டும் நாமும்.
முதலில் 10 ஆம் வகுப்பு தேர்வு ஜீன் 3 ஆம் வாரத்திற்கு தள்ளி வைத்த அரசு பின் ஜீன் முதல் தேதியே தேர்வுகள் ஆரம்பம் என அறிவிக்க மாணவர்கள் 10 சதவீதத்திற்கும் மேல் வெளியூரில் இருக்கிறார்கள் என்பதை அறியமுடிந்தது.
இ பாஸ் தந்தாலும் வாகனங்களை தானே ஏற்பாடு செய்துகொள்ளும் நிலையில் இல்லாத அரசுப்பள்ளி மாணவர்கள் பாடு திண்டாட்டமே. தற்போது அரசு மேலும் 15 நாட்களுக்கு தள்ளி வைத்த போதிலும் மாணவர்கள் எப்போது எப்படி வரமுடியும். வந்த உடன் சிறிதும் திருப்புதல் கூட இல்லாமல் நேரடியாக தேர்வு எழுதும் மாணவர்களால் நட த்திய பாடங்களை நினைவு கொண்டு எழுத முடியுமா எனும் கேள்விகள் எழுவதை தவிர்க்க இயலவில்லை.
சமூக இடைவெளி பின்பற்ற தெரியாத இக்குழந்தைகள் உடல் நலத்துடன் இந்த தேர்வை கடக்க வேண்டுமே எனும் கவலையுடன் காத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள்.
தொலைக்காட்சி சேனல்களும், பத்திரிக்கைகளும் நாள்தோறும் தேர்வு சார்ந்த விவாதங்களை முன்வைத்துக்கொண்டிருக்கின்றன. சமூக ஆர்வலர்களும் , கல்வியாளர்களும் சிறந்த ஆசிரியர்களும் அக்கறை கொண்ட பெற்றோர்களும் விரும்புவது ஒன்றுதான் மாணவர்களின் உடல் நலமும் , மனநலமும் மட்டுமே இதில் முக்கியம். இது அசாதாரண சூழல். இந்த சூழலில் நம் சின்ன அலட்சியத்தால் கூட மாணவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது அதுவே மதிப்பெண்ணை விட மிக முக்கியம் என்பதே.
மேலே உபயோகப்பட்டிருக்கும் படம் Nithi anandக்கு சொந்தமானது. Creative Commons License-இல் உபயோகிக்கப்பட்டது
writer , poetess, educationist and social activist read more...
Please enter your email address