வரனே அவசியமுண்டு, ஒரு மாறுபட்ட மலையாள திரைப்படம், ஒரு அழகான காதல் கதை

வரனே அவசியமுண்டு நெட்ஃபிளிக்ஸில் சமீபத்தில் வெளியான ஒரு மாறுபட்ட மலையாள காதல் படம். மற்ற வகை காதல்களிலிருந்து வயது முதிர்ந்தவர்களின் காதலை அழகாக வெளிப்படுத்திய கதை.

வரனே அவசியமுண்டு நெட்ஃபிளிக்ஸில் சமீபத்தில் வெளியான ஒரு மாறுபட்ட மலையாள காதல் படம். மற்ற வகை காதல்களிலிருந்து வயது முதிர்ந்தவர்களின் காதலை அழகாக வெளிப்படுத்திய கதை.

மொழிபெயர்த்தவர் அகிலா ஜ்வாலா

ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வரனே அவசியமுண்டு கதையின் நாயகி நிகிதா (கல்யாணி பிரியதர்ஷன்) வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்யும் அவள் நட்பிற்கு உதவுவதாக ஆரம்பித்ததும். 

உனக்கும் அந்த எண்ணம் இருக்கிறதா என அவளிடம் கேட்கப்பட “இல்ல நான் டீசண்ட், எனக்கு அரேஞ்டு மேரேஜ் தான்” எனும்அவளின் பதில் “என்ன பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்? மீண்டும் ஒரு ரொமண்டிக் காமெடி  படமா?” என என்னை  பயமுறுத்தியபோதும், முடிவில் என்னை நேசித்த அன்பு செலுத்திய அத்தனை மனிதர்களையும் உற்சாகத்தோடும் நன்றியோடும் நினைக்கவைத்தது இப்படம்.

இதுவரை இப்படத்தை பார்க்காதவர்கள், கதையின் முக்கிய அம்சங்கள் இங்கு வெளிப்படுத்தப்படும் எனும் எச்சரிக்கையுடன் விமர்சனத்தை படிக்கலாம்.

ஒரு முதிர் பெண்ணின் மனம்

பொதுவாக திரைப்படங்களில் காதலை மையமாகக்கொண்ட கதைகள் என்றாலே வழக்கமாக இளம் ஜோடிகளை மையப்படுத்தியதாகவே இருக்கும். வரனே அவசியமுண்டு –வில் நிகிதா எனும் இளம்பெண்ணிற்கு காதலில் அதிக விருப்பமில்லை  நம்பகமும் ஸ்திரத்தன்மையுமான உறவுகளே அவளின் எதிர்பார்ப்புகள்.

நிகிதாவின் தாய் நீனா (அற்புதமான ஷோபனாவின் கதாபாத்திரம்) காதல் உணர்வுகள் நிறைந்த துடிப்பான பெண்மணி. ஒரு சில திரைப்படங்களே முதிர் பெண்களின் இதயத்தை இத்தனை மகிழ்வாய் எந்த ஒரு தீர்ப்புகள், முன் தீர்மானங்கள் இன்றி சுதந்திரமாக வெளிக்காட்டுகின்றன.

நீனா பல காதல்களை சந்தித்து,ஒரு தவறான நபரை திருமணம் செய்து அத்திருமணத்தில் தோல்வி கண்டு தனியாக தன் பெண்ணை வளர்ப்பவள் (single mother) தன் தோற்றத்திலும் சாதனைகளிலும் பெருமை கொண்ட பெண்ணான நீனா காதலை தானே தேடாத போதும் தன்னை நோக்கி காதல் வரும்போது இந்த வயதில் எனக்கு காதலா, இது நமக்கு தேவையா என வெட்கி குழம்பும் ரகமும் அல்ல., தனக்கும் மகளுக்குமான உறவில் அதனால் விரிசல் நேர்ந்த போதும் அதை ஒட்ட வைக்க தன் மகிழ்ச்சிகளை தியாகம் செய்யும் சலித்து போன வழக்கமான கேரக்டரும் இல்லை அவள்.

பெண்கள் ஆண்களுக்கு புனர்வாழ்வு தரவேண்டியவர்கள் இல்லை

நீனாவின் காதல் மேஜர் உன்னிகிருஷ்ணன், (சுரேஷ் கோபி)  பெண்களிடம் சகஜமாக பேசக்கூட தெரியாத அதை கம்பீரம் ஆண்மை என எண்ணும்  கதாபாத்திரத்திற்கான சரியான உதாரணம். மேஜர் சமூகத்தால் தனித்து விடப்பட்டு கோபத்தை கையாளத்தெரியாத ஒரு தனி மனிதன்.

இது புத்திசாலித்தனமான, வித்தியாசமான ஒரு திரைப்படம், படத்தை எடுத்தவர்கள் ஆணின் வாழ்வை புனரமைத்து மறுவாழ்வு தருபவர்களாக 

பெண்ணை சித்தரிக்கும் சராசரி படங்களில் இருந்து விலகி, அந்த பாரத்தை தொழில்முறையில் ஆலோசனை வழங்கும் ஒருவரிடம் கொடுத்துள்ளார்கள். அந்த தொழில்முறை ஆலோசகரும் ஒரு நகைச்சுவை கேரக்டராக அமைந்திருப்பதும் அவர் கூடுதலாக ஒரு எடை குறைப்பு சென்டரை நடத்துவதும் கொஞ்சம் என்னை சிறிது ஆயசப்படுத்தியது என்றாலும் இறுதியில் அந்த ஆலோசனையின் முடிவில் அவர் கொடுக்கும் சிகிச்சை நகைப்புக்குரியது இல்லை, அது மேஜர் சமூகத்தில் ஒரு பயனுள்ள பிரஜையாக மாற உதவுகிறது.

தோற்றத்திற்கு அப்பால்

உண்மையில் இந்த படம் நம்மை தோற்றத்திற்கு பின்னால் பார்க்கும் நிலையில் தள்ளுகிறது. பிபேஷ் (துல்கர் சல்மான்) மற்றும் அவனது தம்பி (சரவஜித் சந்தோஷ் சிவன்) இடையேயான சகோதரச் சண்டைகள் அதன்பின் இருக்கும் ஒரு துயர கதையை சொல்கிறது. அவர்களுடன் வாழும், KPAC லலிதா அந்த இரு சகோதரர்களுக்கும் அவருக்குமான பிணைப்பும் கூட ஒரு எதிர்பாரா பின்கதையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படம், பல குடும்பத்தினர் வாழும் ஒரு அபார்ட்மெண்ட் பின்னணியுடன் மிகச்சாதாரணமாக மாறிவிட்டிருக்கலாம் . ஆனால் அதிலும் பல அழகான ஆச்சர்யங்கள் உதாரணமாக, அந்த இந்து பிராமணரான வீட்டின் உரிமையாளர், மனைவியின் முன்னால் வீட்டில் பீஃப் சமைக்கக்கூடாது என பிபேஷிடம் சொல்லிவிட்டு அவள் கவனியாத சமயத்தில் சமைத்தால் பீஃப் தனக்கும் கொடுக்கும்படி கூறுவது.. 

கொஞ்சம் நம்பமுடியாத தேவதைக் கதையைப்போல தோன்றினாலும் , நம் விரிசல்களுடைய சமூக வாழ்வின் உண்மை வாழ்க்கையியலில் இருந்து  ஒரு தப்புவித்தலும் சில நேரங்களில் தேவையே.

நுணுக்கமான இயல்பான இயக்கம்

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில்  எந்த ஒரு கதாபாத்திரமும் நான் என்னை சரி செய்து கொண்டு விட்டேன்  இப்படி மாற்றிக்கொண்டு விட்டேன் எனும் செயற்கத்தன்மையில் இருந்து விலகி, அந்த மாற்றம் மறைமுகமாய் உள்ளுக்குள் நிகழ்கிறது. நாடகத்தன்மை இல்லாமல் அழகாக பயணிக்கும் இந்த திரைக்கதை அழுத்தமாக அதே நேரத்தில்  புரிதலுடனும், உணர்வுப்பூர்வமாக நகர்ந்தாலும் , நேர்மறை எண்ணங்களுடனும் நம்பிக்கையுடனும் பயணிக்கிறது.

பெண்களுக்கிடையேயான உறவுமுறைகளையும் அழகாக வெளிப்படுத்தும் இந்த படம்அம்மா மகள் (நீனா – நிகிதா) இடையேயான மோதல்கள் நிஜத்தன்மையுடன் அழகாக காட்டப்பட்டுள்ளது ஊர்வசியின் கதாபாத்திரத்திற்கும் நிகிதாவிற்கும் இடையேயான உறவுமுறையும் வித்தியாசமாக  அழகாக பின்னப்பட்டுள்ளது.

மகன்களைக்கொண்டாடும் தாயிலிருந்து மாற்றம்

படம் முடிந்த பின்னும் என் மனதில் எப்போதும் நிற்கும் காட்சி ஊர்வசியின் நிகிதாவிற்கிடையே ஆன காட்சி. ஊர்வசி, நிகிதா திருமணம் செய்து கொள்ள நினைத்த ஒரு ஆணின் தாய், நிகிதா, தன் தாய்  காதலில் இருப்பதாகவும்  மறுதிருமணம் செய்யும் முடிவில் இருக்கிறாள் என்பதை சொன்னதும் நிகிதாவுடனான உறவினையே முறித்துக்கொள்ள முடிவு செய்கிறான் அந்த ஆண். அதையும் தானே சொல்லாமல் தன் தாயிடம் அந்த பொறுப்பை விடுகிறான். 

ஊர்வசி நிகிதாவிடம் தன் மகனை அவள் திருமணம் செய்யவில்லை எனில் நான் உன்னை மிஸ் செய்வேன் எனச் சொல்லும் அதே நேரம் , நீ என் மகனை திருமணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் நீ மகிழ்ச்சியாக இருக்க முடியாது எனும்போது.

மகனை ராஜா எனக்கொண்டாடும், தாய் மகன் உறவை துதிபாடும் ஒரு கலாச்சாரத்தில் தன்மகனின் குறைகளை புரிந்து தனக்கு உறவில்லாத இன்னொரு பெண்ணை தன் மகனுக்கு எதிராகவே எச்சரிக்கும் தாயாக ஊர்வசி எனும் அந்த திறமை வாய்ந்த பல்திற நடிகையின் நடிப்பு இந்த குறிப்பிட்ட காட்சியில் ஒரு (மரு)மகளை இழக்கப்போகும் தாயின் கோபமும் வலியும் அருமையாக வெளிப்பட்டுள்ளது.

தவிர்த்திருக்க வேண்டிய அம்சங்கள்

இந்த படத்தில் குறைகளுக்கான அம்சங்களே இல்லை என சொல்ல முடியாது , குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், இரு காட்சிகளில்,  நகைச்சுவையாக காட்டப்பட்டிருக்கின்றன. கணநேரத்தில் கடந்து போகும் காட்சியான போதும் அவை இருப்பது உறுத்தலே.

அதே நேரம் ஒரு ஆண் மனதை வெல்ல உடல் எடை குறைப்பு தேவையில்லை எனும் நல்ல மெசெஜையும் சொல்கிறது  ஆனாலும் ஒரு குறிப்பிட்ட ஆடையை அணிய தன் எடையை குறைப்பதாக ஒரு பெண் சொல்வதும் குண்டான பெண்கள் சில உடைகளை அணியக்கூடாது எனும் பிற்போக்குத்தனமே.

சேத்னா கபூர், எனும் பெண் பத்திரிக்கையாளர் தன் படங்களை தன் அனுமதி இல்லாமல் துல்கர் சல்மான் இப்படத்தில் உபயோகித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். துல்கர் அதற்காக மன்னிப்பு கோர, அதை சேத்னா ஏற்றபோதும் இந்நிகழ்வை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் வரனே அவசியமுண்டு , குறைகளே இல்லாத திரைப்படம் இல்லை என்றபோதும் .  குறைகள் நிறைந்த மலிவான பாலின நகைச்சுவைகள் நிறைந்த இந்த பிரபஞ்சத்தில் தன் தனித்தன்மையான பரந்த இதயத்தோடு இப்படம் தனித்தே நிற்கிறது (மனதிலும்).

About the Author

1 Posts | 2,348 Views
All Categories