Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
நாம் நாமாகவே இருப்போம் - இந்த வீடியோவில் கொரானா நம்மை முடக்கிப்போட்டாலும், தன்னம்பிக்கையுடன் வாழ குயர் சென்னை க்ரோனிக்கள் குழம உறுப்பினர்களின் குரல் ஆழமாய் நம்முள் ஊடுருவி ஒலிக்கிறது
நாம் நாமாகவே இருப்போம் – இந்த வீடியோவில் கொரானா நம்மை முடக்கிப்போட்டாலும், தன்னம்பிக்கையுடன் வாழ குயர் சென்னை க்ரோனிக்கல்ஸ் குழம உறுப்பினர்களின் குரல் ஆழமாய் நம்முள் ஊடுருவி ஒலிக்கிறது
“நாம் நாமாக இருப்போம்” எனும் தலைப்பில் வீடியோ ஒன்றை யூட்யூபில் பார்க்க நேர்ந்தது. கொரொனாவில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள, கொரொனாவால் ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்புகளிலிருந்து நம்மை ஆசுவாசப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ள இந்த வீடியோ சிந்திக்கத்தூண்டியது.
பல விஷயங்களை மிக அழகான ஆழமான வார்த்தைகளோடு புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் விதம் சிந்தனையைத்தூண்டும் விதம் இருந்தது.
நீங்க பதட்டமாயிருந்தா,
பயந்துபோயிருந்தா,
கோபமா இருந்தா,
இல்ல பாதுகாப்பில்லாம உணர்ந்தா
உங்களுக்கு நாங்க சொல்ல நினைக்குறது,
“இப்போ நீங்க தனியா இல்ல”
எனத்துவங்கும் இந்த வீடியோ நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. குறிப்பாக
நம்மோட அடையாளங்களை,
நம்மோட பாலீர்ப்பை,
நம்மோட பாலினத்தை
மறைச்சு வாழுற நிலைக்கு நிறையபேர் தள்ளப்பட்டிருப்போம்.
மேற்கண்ட வரிகள் வலிகளை வென்று வாழும் மனிதர்களின் குரலாய் ஒலித்தது. இந்த குயர் சென்னை க்ரோனிக்கல்ஸ் குழுமத்தை குறித்த விவரங்களைத்திரட்டினோம்.
சென்னை பால்புதுமையினர் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் இவர்களினைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக.
பால்புதுமையினர் – இந்த வார்த்தையின் அர்த்தம் எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்த வார்த்தைகளே புரியாத நிலையில் இருக்கும் நமக்கு இவ்வார்த்தைக்குள் அடைந்து போயிருக்கும் நம் சக மனிதர்களின் வலிகள் எப்படி புரியக்கூடும்?
நம் சமூகம் பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கியது. சாதி, இனம், மொழி, பாலியல் கொடுமைகள் என பிரிவினைகளை, பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம் நாம்.
மூன்றாம் பாலினத்தார், ஓரினச்சேர்க்கையாளர்கள் என பலரை இச்சமூகம் வெறும் இந்த பெயர்களாலேயே தனிமைப்படுத்துகிறது. உடல் மற்றும் மனரீதியான இந்த அடையாளங்கள் தாண்டி இவர்கள் குரலை அங்கீகரீத்து பொதுவெளியில் ஒலிக்கச்செய்வதற்கான சிறு முயற்சியே குயர் சென்னை க்ரோனிக்கல்ஸ்.
குயர் சென்னை க்ரோனிக்கல்ஸ் என்பது ஒரு தனிப்பட்ட பிரசுர தளம். தமிழில் புதுமை வாய்ந்த, பால்புதுமையினர் சார்ந்தவர்களின் வாழ்வியலை எழுத்தாக பதிவு செய்யும்நோக்கில் துவக்கப்பட்டது.
இவர்களின் இம்முயற்சிக்கு குறிப்பிட்ட பார்வையாளர்களை இவர்கள் வரையறுக்கவில்லை. அனைவருக்கும் பொதுவான இத்தளம் மட்டுமல்ல இவர்களின் இலக்கியம் சார்ந்த முயற்சிகளும் பாராட்டத்தக்கவையே.
கொரோனா போன்ற நோய்த்தொற்றின் காலகட்டமான இந்நேரத்தில் மனிதாபிமானத்தின் பல்வகை பரிமாணங்களை பிறருக்கு உதவும் பல்வேறு அமைப்பினர் உணரவைத்தனர். வாழ்க்கை என்பது மதம், இனம் தாண்டியது என்பதையும் மனிதன் மட்டுமே மனிதனை வாழவைக்கும் மகத்துவம் பெற்ற ஒன்று என்பதை பலதரப்பினரை உணர வைத்துள்ளது கொரோனா.
இயற்கையின் மகத்துவம் உணரும் இவ்வேளையில் சக மனிதர்களாய், மனிதர்களுக்குள் ஏற்படும் உளவியல் மற்றும் உடல் ரீதியான மாறுபாடுகளை இயல்பாய், இயற்கையின் கூறாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மிடையே ஏற்படுவது அவசியம்.
அது மட்டுமன்றி, அவர்களின் இம்மாறுபாடுகளை உற்று நோக்காமல் அவர்களினிடமிருந்து கிடைக்கும் இலக்கியம் சார்ந்த மற்றும் அவரது குரல்களை விரிவாக அரசியல், பொருளாதாரம், சக உரிமை சார்ந்து எல்லாவற்றிலும் ஆழ்ந்து பதிக்க நட்புடன் கைகோர்ப்போம் அவர்களுடன்.
நாம் நாமாகவே இருப்போம் – இந்த வீடியோவில் கொரானா நம்மை முடக்கிப்போட்டாலும், அடையாளங்களால் ஒதுங்காமல், நம்மை முடக்கிக்கொள்ளாமல், தன்னம்பிக்கையுடன் வாழ குயர் சென்னை க்ரோனிக்கள் குழம உறுப்பினர்களின் குரல் ஆழமாய் நம்முள் ஊடுருவி ஒலிக்கிறது.
இலக்கியத்தில் கால்பதித்து, தங்கள் குரலாய் ஒலிக்க ஆரம்பித்திருக்கும் அவர்களின் வெளியிடான ‘விடுபட்டவை’ எனும், கிரீஷ் என்பவரின் கவிதை நூல் வரிகள் உங்கள் பார்வைக்கு. கொரோனாவால் அடைபட்டிருக்கும் நமக்கும், பால்புதுமையினராய் நம்முடன் வாழும் நண்பர்களுக்கும் பொதுவான இவ்வரிகள் அடைந்துகிடக்கும் உணர்வின் வலிகளை நமக்கு உணர்த்தும்.
“யட்சிகளுக்கு மட்டுமே தெரியும்,
குப்பிகளில் அடைபடுவதன் வலி.”
அடைபட்டிருக்கும் நாட்கள் முடிந்து வெற்றிகரமாய் வெளிவருவோம் இந்த கொரோனோ யுத்தத்திலும். அதுவரையில் பாதுகாப்பாய் இருப்போம், வீட்டில் இருப்போம்!
writer , poetess, educationist and social activist read more...
Please enter your email address