குழந்தைகளுக்கான இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் எளிதாக முயற்சிக்கலாம்!

உங்களுக்காகவே குழந்தைகளுக்கான சத்தான உணவு ரெசிப்பிகள் இதோ! குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப சத்தான மற்றும் சுவையான உணவுகளை எளிய வழியில் செய்து கொடுத்து மகிழத் தயார் ஆகுங்கள்!

குழந்தைகளுக்கான பிரத்யேகமான சத்தான உணவு ரெசிப்பிகள்/செய்முறைகள் சிலவற்றை உங்களுக்காகவே இங்கு பகிர்ந்திருக்கிறோம். பச்சிளம் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப சத்தான மற்றும் சுவையான உணவுகளை எளிய வழியில் செய்து கொடுத்து மகிழத் தயார் ஆகுங்கள்!

பெற்றோர்களின் தீராத தேடல்

நீங்கள் சமீபத்தில் தாய்மை அடைந்தவரா? அல்லது உங்கள் குடும்பத்திலோ நட்பு வட்டத்திலோ சமீபத்தில் குழந்தை பெற்ற புதிய தாய்மார்கள் இருக்கிறார்களா? ஆமென்றால், இந்த பதிவு உங்களுக்கானது!

பெற்றவர்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு வேளை தவறாமல் ஆரோக்கியமான உணவை அளித்து விட வேண்டும் என்ற அக்கறையும் கவனமும் எப்பொழுதும் உண்டு.

குழந்தை பிறந்து, மெல்ல வளர்ந்து தாய்ப்பால் தவிர்த்த முதல் ஆகாரத்தை உண்ணும் பருவத்தை அடையும் போது, ​​எல்லா பக்கங்களில் இருந்தும் குவியும் எண்ணற்ற பரிந்துரைகளும், குழந்தைகளுக்கான பிரத்யேக உணவுகளுக்கான செய்முறை புத்தகங்களுமாக ஒரு சிறிய போராட்டமே  நடந்து விடுகிறது.

குழந்தைகளுக்கான சத்தான உணவுக்கான தேடலில் இறங்கும் பெற்றோர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று, ‘​​growth milestones’ எனப்படும் ‘வளர்ச்சியின் ஒவ்வொரு குறிப்பிட்ட கட்ட’த்திற்கும் ஏற்ற சரியான உணவு எது என்று கண்டறிந்து கொள்வது.

குழந்தைகள் விரும்பும் சத்தான உணவு ரெசிப்பிகளை தேடிப் பிடிப்பது சுலபமான காரியம் அல்ல; சமயத்தில் இது பெற்றோர்களை பெரும் அல்லலிலும் குழப்பத்திலும் ஆழ்த்தி விடக் கூடும்!

எந்த உணவை, எப்போது, ​​எவ்வளவு வழங்குவது என்பதே வாழ்க்கையின் தீராத கேள்வியாக தோன்றும்!

கவலை வேண்டாம். இந்த இடுகையை முழுமையாக படியுங்கள் – சத்தான, குழந்தைகள் விரும்பும் உணவு ரெசிப்பிகள் துணை நிற்க, ஆரோக்கியமான ஒரு பாதையில் உங்கள் குழந்தையை அழைத்துச் செல்ல நீங்கள் முழுமையாக தயாராகி விடுவீர்கள்!

உங்கள் குழந்தையின் முகத்தில் புன்னகையை வரவழையுங்கள்!

குழந்தைகளின் உணவுத் தேவைகள் மற்றும் உட்கொள்ளும் முறைகள் பருவத்திற்கேற்ப மாறும் என்பது நாம் அறிந்ததே. அதே போல் அவர்களின் சுவை சார்ந்த விருப்பங்களும் பருவத்திற்கேற்ப மாறுகிறது என்பதும் நிதர்சனம். முன்பு அவர்களுக்கு விருப்பமான உணவகத் தோன்றியது ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு அறவே பிடிக்காமல் போய்விடுகிறது.

இவ்வாறாக குழந்தைகள் தாய்ப்பால் மட்டுமே அருந்தும் பருவம் தொடங்கி குறுநடை போடும் பருவம் வரை அவர்களது உணவு சார்ந்த விருப்பங்கள் மாறிக்கொண்டே இருந்து விடுகின்றன.

இருப்பினும், அவர்களது விருப்பத்தின் போக்கைக் கண்டுபிடிப்பது காலத்திற்கும் மர்மமாகவே இருந்து விடப் போவதில்லை. பெற்றோர்களாக நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில் அவர்கள் வழியிலேயே சென்று அவர்களை மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமே.

இதற்கு, உங்கள் குழந்தையின் வளர்ச்சியின் கட்டங்களை உன்னிப்பாகக் கவனிப்பது மிகவும் அவசியம் ஆகிறது.

உங்கள் குழந்தை திட உணவுகளுக்குத் தயாராகும் போது, பெற்றோராக, சில குறிப்புக்களின் மூலம் நீங்கள் அதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தை சமிக்ஞை மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் சில ரகசிய குறியீடுகளின் அர்த்தத்தை அறிந்து கொள்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் கற்றுக் கொள்ளுங்கள். (இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வயது/பருவம் குழந்தைக்கு குழந்தை மாறுபடலாம்.)

4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான குழந்தைகளுக்கான உணவு

இந்த கட்டத்தில் உங்கள் குழந்தைக்கு

  • மூச்சுத் திணறல் இன்றி, சிறிய அளவிலான திட(solid) உணவை எடுத்துக் கொள்ளும் திறன்
  • குறைந்தபட்ச உதவியுடன் தனது தலையை நகர்த்தும் திறன்

ஆகியவை கிடைத்துவிடுகிறது. உங்கள் குழந்தைக்கு cereals வகை தானிய உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் இது.

இந்த புதிய உணவுமுறையை மெதுவாக, சீராகக் கையாளுங்கள். இந்த பருவம் தொட்டு குழந்தையின் இரும்பு ஊட்டச்சத்திற்கான தேவை (nutritional iron requirements) அதிகரிக்கத் தொடங்குகிறது.

ஆரம்பத்தில் நன்றாக வேக வைத்த கஞ்சி பதத்திலும், குழந்தை அந்த உணவிற்கு பழகப் பழக சற்றே இறுகிய கூழ் பதத்திலும் குழந்தைக்கு புகட்ட வேண்டும். படிப்படியாக குழந்தை சிறிது கடிய, பெரிய உணவுத் துகள்களையும் வாயில் மென்று விழுங்கப் பழக வேண்டியது அவசியம் (introducing bite and chew).

ஓட்ஸ், கோதுமை, பார்லி என்று நாளொரு கஞ்சியையோ கூழையோ வகைவகையாக செய்து கொடுங்கள், குழந்தைகளுக்கு சுவையின் பல வகைகளை காட்டுங்கள். இப்படி செய்வதன் மூலம் ஒரே வகையான உணவு அல்லது ஒரே சுவையை மட்டுமே குழந்தை தொடர்ந்து விரும்பி உண்ணும் பழக்கத்தை (அ) பிடிவாதத்தை தவிர்க்கலாம்.

முதலில் சிறிய அளவில் தொடங்கி பின்னர் நாட்கள் செல்லச் செல்ல உணவின் அளவை மெல்லக் கூட்டிப் பாருங்கள். ஏதேனும் உணவு-சார் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்று கவனத்துடன் பார்த்துக் கொள்வதும் மிக அவசியமாகும்.

இந்த பருவத்தில் குழந்தைக்கு அளிக்கக் கூடிய உணவு வகைகள்:

  • தாய்ப்பால் / ஃபார்முலா
  • அரிசி போன்ற தானிய வகை உணவுகள் (cereals)
  • பருப்பு சூப்

6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையான குழந்தைகளுக்கான உணவு

உங்கள் குழந்தை இப்போது

  • ஃபேமிலி மீல் டைம் நேரங்களில் குடும்பத்தினர் அனைவரோடும் சேர்ந்து ஒன்றாக உணவு அருந்துவதில் ஆர்வம்
  • புதிய உணவு வகைகளை ருசிப்பதில் உற்சாகம்
  • வீடு முழுவதும் ஊர்ந்து செல்வது
  • கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தித் தானே பொருட்களை எடுப்பது

போன்ற சமிக்ஞைகள் மூலம், சத்தான மற்றும் சுவையான உணவுகளை ஆராயவும் உண்ணவும் அதீத ஆர்வத்துடன் தான் இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறது.

இந்த கட்டத்தில் குழந்தைக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை அறிமுகப் படுத்துங்கள். வேக வைத்து மேஷ் செய்யப்பட்ட காய்கறிகள் போன்ற செமி-சாலிட் வகை திட உணவுகளை இப்போது புகட்ட தொடங்கலாம். நாட்கள் போகப்போக, மெதுவாக உணவின் அளவை அதிகரிக்கவும். ஆனால், உங்கள் குழந்தையை கட்டாயப்படுத்தி இன்னும் கொஞ்சம் சாப்பிடும்படி நெருக்கடி அளிக்க வேண்டாம். அவர்கள் போக்கில் விட்டால் உணவின் அளவு இயல்பாகவே படிப்படியாக அதிகரிக்கும்.

இந்த பருவத்தில் குழந்தைக்கு அளிக்கக் கூடிய உணவு வகைகள்:

  • தாய்ப்பால் / ஃபார்முலா
  • பழம் / காய்கறி – வேகவைத்து அரைக்கப்பட்ட ‘பியூரி’ வடிவில் (fruit/vegetable puree) வாழைப்பழம், பீச், பேரிக்காய், பிளம், கேரட், ஸ்குவாஷ், பீன்ஸ் போன்றவை
  • பருப்பு சூப்
  • வேகவைத்த அரிசித் தண்ணீர்

7 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரையான குழந்தைகளுக்கான உணவு

இந்த பருவத்தில் உங்கள் குழந்தை உங்கள் தட்டில் இருந்து உணவுப் பொருட்களை எடுக்கத் தொடங்கியிருந்தால், உணவு உண்பதற்கான அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டதற்கான தெளிவான அறிகுறி என்று புரிந்துகொள்ளுங்கள். அதே நேரத்தில் அவர்கள் உணவு உண்ணும்போது வேறு எதையாவது பார்ப்பதிலோ சொந்தமாக புதிய விஷயங்களை முயற்சிப்பதிலோ எளிதில் திசைமாறி சாப்பிடுவதில் ஆர்வமின்றி இருப்பது போல் காட்டிக் கொள்ளக் கூடும்.

வழக்கத்தை விட நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இந்த கட்டத்தில் குழந்தை புரதம் மற்றும் இரும்பு நிறைந்த சப்ளிமெண்டரி ஆகாரங்களைத் தேடும்.

இந்தக் கட்டத்தில் பிசைந்த/மசித்த உணவு உருண்டைகளை/கவளங்களை குழந்தை விழுங்க மறுப்பதை நீங்கள் எதிர்கொண்டால், விட்டு விடுங்கள். குழந்தைக்கு மீண்டும் மீண்டும் அந்த வகை உணவை காட்டியும் ஊக்குவித்தும் மெல்ல அதை உண்பதற்கு பழக்கலாம் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

இந்த பருவத்தில் குழந்தைக்கு அளிக்கக் கூடிய உணவு வகைகள்:

  • தாய்ப்பால் / ஃபார்முலா
  • அரிசி போன்ற தானிய உணவுகள் மற்றும் தினை போன்ற சிறுதானிய உணவுகள்
  • பழங்கள் – பிசைந்தோ  / சிறிய துண்டுகளாக நறுக்கியோ கொடுக்கலாம்
  • காய்கறிகள் – சமைத்தோ / வேகவைத்தோ கொடுக்கலாம்

நினைவு கொள்ளுங்கள்

‘First foods’ எனப்படும் குழந்தைக்கு புகட்டப்படும் ‘முதல் உணவுகள்’ பாரம்பரியம் சார்ந்து நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு வேறுபடுகின்றன. இருப்பினும், எல்லா வீடுகளுக்கும் பொதுவான குறிக்கோள் ஒன்று தான், அதாவது, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நல்ல உணவைக் கொடுப்பது. எனவே நேர்த்தியான ஒரு உணவு மெனுவை தயார் செய்து, குழந்தை உணவருந்தும் நேரங்களை ஒரு நிதானமான மற்றும் இனிமையான அனுபவமாக அமைத்துக் கொள்ளுங்கள்!

பின்குறிப்பு: உங்கள் குழந்தைக்கு உணவு புகட்டும் பாதை உங்களுக்கு சற்றே கடினமானதாக அமைந்தால், கவலை வேண்டாம்; நிதானம் கொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது, அதன் போக்கில், அது உரிய நேரத்தில் அடைய வேண்டிய முன்னேற்றங்களை அடையும்.

About the Author

Bharathi Yegnanarayanan

Big on sharing, but not the fries. Frequent doodler. Crazy, with a purpose. Passionately curious (mostly about everything that interests me). I have done my Masters in Journalism and Mass Communication and have 6 yrs read more...

1 Posts | 1,793 Views
All Categories