பெண்ணே, நீ நலமா? போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்: சில குறிப்புகள்

புதிய தாய்மார்கள் பேறுகாலம் முழுமையடைந்து, குழந்தை பிறந்த பின்னே மகிழ்ச்சியாக உணர வேண்டும், இல்லாவிட்டால் தாயின் மனநிலை பிள்ளையையும் தாய்ப்பாலின் தன்மையையும் பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

புதிய தாய்மார்கள் பேறுகாலம் முழுமையடைந்து, குழந்தை பிறந்த பின்னே மகிழ்ச்சியாக உணர வேண்டும், இல்லாவிட்டால் தாயின் மனநிலை பிள்ளையையும் தாய்ப்பாலின் தன்மையையும் பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் உள்ள 22% பெண்கள் மகப்பேறு அடைந்த ஒரு சில நாட்கள் தொடங்கியே ‘பிரசவத்துக்குப் பின்னர் ஏற்படும் மன அழுத்தம்’ என்று சொல்லப்படும் Postpartum depression (PPD)-ஆல் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அறிவீர்களா?

இந்த PPD காரணமாக பரவசநிலை முதல் பதட்டம், கோபம் மற்றும் பற்றின்மை போன்ற மாறுபட்ட பல நிலையற்ற உணர்ச்சிகளால் உந்தப்பட்டு தாய்மார்கள் அவதிக்குள்ளாக்கப் படுகின்றனர்.

நிமா பக்தாவின் உலுக்கும் வார்த்தைகள்

“இந்திய சமூகம் PPD எனப்படுகிற இந்த மனச்சோர்வை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை; நீங்கள் யாரும் இதை புரிந்து கொள்ள மாட்டீர்கள்”.

2020 ஜூலை மாதம் சோகமாக தனது உயிரை மாய்த்துக் கொண்ட 31 வயதான நிமா பக்தாவின் இறுதி வார்த்தைகள் இவை. PPD காரணமாக தனது ஏழு மாத வயது மகன் கேசவை விட்டு ஒரு தாய் உயிர்நீத்த துயரத்தின் உச்சம் இந்த நிகழ்வு.

அமெரிக்காவில் அவர் இறந்து இரண்டு மாதங்களுக்கு மேலானாலும், அதன் அதிர்ச்சி அலைகள் உலகளவில் தெற்காசிய சமூகம் முழுவதும் இன்னும் தொடர்ந்து எதிரொலித்து கொண்டிருக்கின்றன.

PPD புள்ளிவிபரம்

முன்னணி மருத்துவ இதழான லான்செட் (Lancet) பத்திரிக்கை, இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 10 பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும், உலகளாவிய தரவரிசையில் இந்த வகை உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்றும் வெளியிட்டுள்ளது.

இது நமது  நாட்டில் புதிய தாய்மார்களின் போராட்டங்கள் மற்றும் அதைப் பற்றிய முறையான புரிதல் இல்லாமை ஆகியவற்றை சுட்டிக் காட்டுகின்றன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, உலகளவில் புதிய தாய்மார்களில் 13% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும், இந்தியாவில் இந்த எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாகவும் நாம் அறிகிறோம். ஆம்,  இங்கு சராசரியாக 22% புதிய தாய்மார்கள் PPDயால் பாதிக்கப்படுகின்றனர். இதன் பின்னணி என்ன?

‘தாய்மையின் பேரின்பம்’ யாதெனில்…?

தங்களது பிரசவம் நிறைவேறி குழந்தை பெற்றெடுத்த இந்தியத் தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும், அதைத் தொடர்ந்து, மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருந்தாக வேண்டும் என்று ஒரு பெரிய கட்டாயம் உள்ளது.

ஆனால் என்னுடைய சொந்த அனுபவத்திலேயே நான் கண்டு, உணர்ந்தது என்னவென்றால், தாய்மை எய்துதல் என்கிற பெருநிகழ்வின் கூடவே பரபரப்பான உணர்ச்சிகள் பல இயல்பாகவே ஏற்படக் கூடும் என்பதே. இந்நிலையில் பரவசம், பதட்டம், கோபம் வரை மற்றும் பற்றின்மை என மாறுபட்ட, முரண்பட்ட உணர்ச்சிகள் பல தோன்றுவது இயற்கையே.

பிள்ளை பெற்ற மறுகணமே தியாக சொரூபங்களாக, சாந்தமும் மென்மையுமாக தாய்மார்கள் மாறிவிட வேண்டும் என்றெல்லாம் சமூகம் தங்கள் மீது சுமத்தும் பல பொறுப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் PPDயால் பாதிக்கப்பட்ட இளம் தாய்மார்களால் பூர்த்தி செய்ய முடிவதில்லை.

இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறும் போது அந்த பெண்களின் மனதில் ஒருவித மோசமான உணர்வு சுழற்சி தூண்டப் படுகிறது.

உண்மையில், இந்தியாவில் ஐந்தில் ஒரு தாய்மார் PPDயால்  பாதிக்கப்படுகிறார். ஆயினும், உளவியல் மற்றும் மனநலம் குறித்த சரியான புரிதலும் தெளிவும் நமது சமூகத்தில் மிகக் குறைவாக உள்ளதாலும், அது  தொடர்புடைய களங்கம் குறித்த அச்சம் காரணமாகவும், பல தாய்மார்களுடைய PPD கண்டறியப்படாமலே போகிறது.

ஆனால், சரியாக கண்டறியப்படாத PPD சில சந்தர்ப்பங்களில் தற்கொலையில் கூட முடியும் அபாயம் உள்ளது. இவ்வகை உயிரிழப்புகள் சார்ந்த வழக்குகள் பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலேயே போவதும் சோகமான உண்மை.

நிபுணர் பார்வை

​​கலிபோர்னியாவில் உள்ள ‘சக்தி தெரபி அண்ட் ஹீலிங்’ மையத்தை நடத்தி வரும் உளவியல் நிபுணரான ஏக்தா அகர்வால் என்னிடம் கூறியதாவது, “தெற்காசிய சமூகங்களுக்குள், குறிப்பாக பெண்கள் மத்தியில்… அவர்களது உள்ளத்து  உணர்ச்சிகளை வெளிப்படுத்த பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.”

“Self-denial எனப்படும் ‘தன் சொந்த விருப்பங்களைக் கை விடுதல்’ என்பது காரணமாகவே பல பெண்கள் தங்களது மனச்சோர்வையோ இன்னபிற உளவியல் பிரச்னைகளையோ பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். நாளடைவில் இந்த நலக்கேடுகள் மனதைத் தாண்டி உடலளவிலும் பிரச்சனைகளாக வேரூன்றும் போது உடலளவில் மட்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டு பிரச்சனைக்கு முழுமையான தீர்வைப் பெறாமலே விட்டுவிடுகின்றனர்.”

“தங்களது மன அளவில் தங்களுக்கு நிகழ்வது என்ன என்பதைக் குறித்த எவ்விதமான புரிதலும் இல்லாமலேயே தாங்கள் நலமாக இருப்பதாகவே எண்ணிக் கொண்டு பல பெண்கள் இருந்துவிடுகிறார்கள். இது குறித்த ஆரோக்கியமான உரையாடல்களை எப்படி துவங்குவது என்று அறிந்துக்கொள்ளாமலேயே இதற்கான சரியான மருத்துவ உதவியை பெறாமலேயே விட்டுவிடுகின்றனர்.”

தன்னிடம் சிகிச்சை பெறும் அமெரிக்கவாழ் இந்தியர்களுடனான அவரது அனுபவத்தில், உளவியல் ஆரோக்கியத்தைப் பற்றிய புரிதல் மற்றும் stigma எனப்படும் ஒருவித ‘நற்பெயர்கெடு’, தெற்காசிய சமூகத்திற்குள் பெருமளவு வேரூன்றி இருப்பதை தான் உணர்ந்திருப்பதாக சொல்கிறார், ஏக்தா.

தயக்கமின்றி பேச ஒரு தளம்

“எங்கள் தெற்காசிய சமூகத்தில் நிச்சயமாக உளவியல் ரீதியான பிரச்சனைகள் சார்ந்த ஒரு களங்க உணர்வு/stigma இருப்பதாகவும், வெறும் வெளித்தோற்றங்களை மட்டுமே எங்கள் சமூகம் பார்க்கிறது என்றும் எனக்கு தோன்றுகிறது. நாம் சந்தோஷமாக, சிறப்பாக இருப்பது போன்ற தோற்றதிற்கு மட்டுமே இங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.”

“இந்த நிலையில் தாய்மை மற்றும் அது சார்ந்த உளவியல் மற்றும் நடைமுறை சார்ந்த பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதும், உண்மையான தாய்மை மற்றும் அதன் போராட்டங்களை உள்ளபடி வெளிப்படுத்துவதும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். இதற்காகவே பெண்களுக்கு அவர்களது உணர்வுகளைப் பற்றி வெளிப்படையாக தயக்கமின்றி பேச ஒரு பாதுகாப்பான தளம் அவசியம் என்று நான் நம்புகிறேன்” என்று கூறுகிறார், பங்களாதேஷிய-கனேடிய பதிவர்/blogger ஃபரா நதாஷா.

இதில் கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரத்துக்குள் ஏற்படும் லேசான வகை மன அழுத்தமான `பேபி புளூஸ்’ (Baby Blues) மற்றும் PPD ஆகிய இரண்டும் ஒன்றல்ல, மாறுபட்ட இரு வேறு பிரச்சனைகள் என்பதாகும்.

கலாச்சார ரீதியான சவால்கள்

PPDயால் பாதிக்கப் பட்ட தாயானவள் அதீத கவலை, அதிக சோகம், தூக்கமின்மை அல்லது சோம்பல் ஆகியவற்றை உணரக்கூடும்; ஏன், தனது குழந்தையுடன் அன்புடன் உறவாடவும் கூட சிரமப் படலாம் – இதற்கு முழு காரணம் PPD மட்டுமே.  சொல்லப்போனால் சில சந்தர்ப்பங்களில் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல், அல்லது தற்கொலைக்கு முயல்வது கூட நடக்கலாம்.

இது இந்தியா அல்லது தெற்காசிய சமூகங்களுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய ஒரு பிரச்சினை ஆகும்.

ஆனால் தெற்காசிய நாடுகளில், PPDயால் பாதிக்கப் பட்ட ஒரு பெண், ஒரு மோசமான மனைவியாகவோ மருமகளாகவோ அடையாளப்படுத்தப் படாமல் தனது நிலையை வெளிப்படுத்துவதில் கலாச்சார ரீதியான சவால்கள் பல உள்ளன. இது பிரச்சனைகளை மேலும் அதிகமாக்குகிறது.

உண்மையில், பல ஆய்வுகளும் கருத்துகளும் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவில் நிகழும் குடும்ப வன்முறை, ‘bullying’  சார்ந்த கொடுமைகள், அவமானங்கள், குழந்தை பருவத்தில் நிகழ்ந்த ஆழ்ந்த அதிர்ச்சி (trauma), பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு, வாழ்க்கைத் துணை அல்லது குடும்பத்தின் ஆதரவு கிட்டாத நிலை, வறுமை போன்ற சில எதிர்மறையான அனுபவங்கள் புதிய தாய்மார்களுக்கு ‘triggers’ எனப்படும் ‘தொடக்கி’ அல்லது ‘வித்துக்களாக’ செயல்பட்டு பல பெண்களை PPDக்கு எளிய இலக்குகளாக்கி விடுகின்றன.

ஒரு தாயின் உண்மைக்கதை

ஹைதராபாத்தைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் சபிஹா அஞ்சும் தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு இதயப்பூர்வமான பதிவில், இந்தியாவில் பொதுவாக நிலவும் பெண் குழந்தைக்கு எதிரான பாகுபாடு தனது PPDயை பெரிதும் அதிகப் படுத்தியது என்பதை பகிர்ந்து கொண்டுள்ளார்:

“ஒரு உயர்மட்டத்து நடுத்தர குடும்பத்தில் மூன்று மகள்களில் மூத்தவளாகப் பிறந்து வளர்ந்த எனக்கு, எனது வளர்ப்பு குறித்த எந்தக் குறையும் இல்லை. ஆனால் என்னுடைய குடும்பத்தினர் எப்போதுமே ஒரு மகனுக்காக ஏங்கியிருக்கிறார்கள். அது என்னை அதிகமாக பாதித்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு ஒரு மகன் பிறந்த பிறகு, சபிஹா தனது மகளை ‘வெறுக்க’ ஆரம்பித்திருக்கிறார். “ஏன் என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால் என் மூத்த மகள் மீது எனக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டது” என்று அவர் வெளிப்படையாக எழுதி இருக்கிறார். “அவள் என்னை அன்பாக, ஆறுதலாக அணுகிய வேளைகளிலும், நான் கோபத்தில் கூச்சலிட்டு விடுவேன்; சில சமயங்களில் அழுது விடுவேன். இதனால் என் குழந்தைகள் மிகவும் பயந்து போயினர்.”

“எப்போதும் பெண்ணியத்தை ஆதரித்த நான் இது போன்று நடந்து கொண்டது என்னுடைய சித்தாந்தத்தையும் இலட்சியங்களையும் சிதைத்து விட்டதைப் போல உணர்ந்தேன்.”

மகள்களை மட்டுமே பெற்றெடுத்ததற்காக தனது தாய் எதிர்கொண்ட பாகுபாடுகள் யாவும் தன் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை டாக்டர் சபிஹா விரைவில் உணர்ந்தார்.

தனது தாயைப் போலவே, சபிஹாவும் பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்கக் கூடும் என்ற பயத்திலேயே, பல திருமண வரன்கள் தன்னை நிராகரித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

அதே போல், தான் இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தபோது, ‘மூத்த மகளின் மீது அதிக பாசம் காட்டக்கூடாது, அது எப்படியாவது வயிற்றில் இருக்கும் இரண்டாவது குழந்தையின் பாலினத்தை பாதித்து விடும்’ என்று யாரோ ஒருவர் மூடநம்பிக்கையுடன் தூண்டிய ஒரு சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்,

இந்நிலையில் ஆறுதலுக்காகவும் அரவணைத்து வழிகாட்டுவார்கள் என்று எண்ணியும் சபிஹா தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றபோது, ​​அவருடைய தாய் சபிஹாவின் மனநிலையை நிராகரித்தாள். ஒரு நல்ல தாயாக இருக்க முடியாத சபிஹாவின் இயலாமை குறித்து கடிந்து கொண்டார். “இப்படியும் ஒரு தாயா” என்று நம்பமுடியாத தன்மையை வெளிப்படுத்தினார். சபிஹாவை ஒரு ‘மோசமான தாய்’ என்று முத்திரை குத்தினார். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில், சபிஹாவின் தந்தை, தன மகளுக்கு ஆதரவாக நின்றார். மேற்கொண்டு சபிஹா உரிய மருத்துவ உதவி, தெரபி போன்றவற்றை நாடிய சமயங்களில் தனது பேரக் குழந்தைகளை கவனித்து கொள்வதிலும் உதவினார்.

சபிஹா தனது இடுகையில், ​​“நான் முழுமையாக குணமாகிவிட்டேன் என்று கூறமாட்டேன். எனக்கு இன்னும் நேரம் தேவை. ஆனால் நான் முன்னைவிட சிறப்பாகச் செயல்படுகிறேன் என்பதை உறுதியாக உணர்கிறேன். இப்பொழுது என் குழந்தைகள் என்னைப் பார்த்து பயப்படுவதில்லை. என் மகள் திடீர் அணைப்புகளையும் முத்தங்களையும் எனக்கு வாரித் தருகிறாள். ஒரு டாக்டராக, எனக்கே இது கடினமாக இருந்தபோது, ​​பிற தாய்மார்களுக்கு இது இன்னும் எவ்வளவு கடினமானது என்று எண்ணும் போது எனக்கு வியப்பாக இருக்கிறது.” என்று பதிவிட்டிருக்கிறார்.

PPD குறித்த விழிப்புணர்வு அவசியம்!

டாக்டர் சபிஹாவின் கதை மன ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வின் அவசியத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

பொதுவாக, சமூக ஊடகங்கள் எண்ணற்ற தீங்குகளுடன் தொடர்புடையது என்ற கருத்து இருந்தாலும், அவற்றையே விழிப்புணர்வுக்கான சிறந்த களமாகவும் பயன்படுத்த முடியும் என்பது இங்கே உறுதி ஆகிறது. மேலும் தாய்மார்களை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாகவும் சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும்.

ஃபரா நடாஷா மேலும் கூறுகிறார், “சமூக ஊடகங்களில் காணப்படும் ஒரு சில பக்கங்கள் தாய்மையைப் பற்றிய நிதர்சனத்திற்கு மாறான ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றன.
ஆனால் பெரும்பாலான சமூக ஊடக தளங்கள் மெய்யாகவே பெண்களுக்கான ஒரு பாதுகாப்பான இடமாக மாறி வருகின்றன. அங்கே பெண்கள் அவர்களது உண்மையான கதைகளைச் சொல்கிறார்கள்; நம்மை நாமே கருணையுடனும் கனிவுடனும் அணுகுதலின் அவசியத்தை கற்றுத் தருகிறார்கள். உண்மையில் இது எனது மனச்சோர்வில் ஒருபோதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை; நான் எனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தை ஒரு வகையான சிகிச்சையாகவே பயன்படுத்தினேன். எனது பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது முதல், நான் தனித்து விடப்படவில்லை என்பதையும், நாம் அனைவரும் நமது வாழ்க்கை அனுபவங்களைப் புரிந்துகொள்ள, அதனின்று கற்றுக்கொள்ள சக மனிதர்களோடு பழகி, அவர்களது பரிமாணத்தில் இருந்து கண்டு உணர்வது அவசியம் என்பதையும் உணர உதவியது. ”

ஏக்தா அகர்வால் மேலும் கூறுவதாவது, “மனநோய்க்கான அடிப்படையான, வெளிப்படையாகப் புலப்படாத மூலக் கூறுகளையும் அறிகுறிகளை தேடிக் கண்டறிய நாம் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு முதற்கட்டமாக நாம் அதைப் பற்றி விரிவாகவும் ஆழ்ந்தும் உரையாட வேண்டும். இதனால் நாம் தனிமனித அளவில் தொடங்கி வாழும் சமூகம் வரை அணைத்து நிலைகளிலும் சீரிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.”

About the Author

Sushmita Chatterjee

Sushmita Chatterjee is a trained journalist and a photographer, who is starting out as a freelance writer after a decade of parenting. She writes about feminism, mental health, sustainability and social justice. Living in the read more...

1 Posts | 2,414 Views
All Categories