பயணிகளின் கனிவான கவனத்திற்கு: இது ‘மேரேஜ் ஆஃப் ஈக்வல்ஸ்’

பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் நிறைந்த இணை அமைந்தால், கனவு மெய்ப்படும் என்பதை உறுதி செய்கிறார்கள் 'சூரரைப் போற்று' பொம்மியும் மாறனும்.

பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் நிறைந்த இணை அமைந்தால், கனவு மெய்ப்படும் என்பதை உறுதி செய்கிறார்கள் ‘சூரரைப் போற்று’ பொம்மியும் மாறனும்.

முதலில், ‘முடியவே முடியாது’ என்று மூடிய கதவுகளை உடைத்துக் கிளம்பிய விமானத்தில் நம்மையும் இட்டுச் சென்ற இயக்குனர் சுதா கொங்காராவிற்கு ஆயிரம் பூச்செண்டுகளை கொண்டு சேர்க்க வேண்டும்!

சில திரைப்படங்களை, சில கதை மாந்தர்களை பார்க்கையில் அவர்களுக்கு நடுவில் திரையில் இருக்கும் ஒரு ‘equation’ ஒரு புதிய பரிமாணத்தை, புத்துணர்ச்சியை அளிக்கும். அது போன்ற ஒரு உணர்வையே சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் வரும் நெடுமாறனும்(சூர்யா) பொம்மியும் (அபர்ணா பாலமுரளி) அளிக்கிறார்கள்.

நெடுமாறனுக்கும் பொம்மிக்கும் இடையான உறவையும் புரிதலையும் பற்றிய படமாகவும் ‘சூரரைப் போற்று’ மிளிர்கிறது.

வெளிநாட்டுக் கனவு லொகேஷனில் ஆடும் பாடல்கள், தாலி சென்டிமென்ட் என வழக்கமான ஃபார்முலா எதுவும் இல்லை. மாறாக, வெகு இயல்பாக, சுயசார்புடைய, எல்லா வகையிலும் ஒருவருக்கு ஒருவர் சரிசமமாக இருக்கும் இருவர், திருமணத்தில் இணைவதை கொண்டாடும் படமாக, இதை எடுத்திருக்கிறார், இயக்குனர் சுதா கொங்காரா.

மாறன் என்றொரு சூரியன்

மாறனின் ‘இது தான் எனக்கு பிடிக்கும். இது என் கனவு, என் லட்சியம். இதைத் தான் நான் செய்வேன்’, என்ற குணம் புரியாதவர்களுக்கு பிடிவாதம்; புரிந்தவர்களுக்கு வைராக்கியம். இது தொழில் முனைவோர், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கே உரித்தான ஒரு தனிப்பண்பு, ஒருவித தகிக்கும் தைரியம்.

ஒரு நொடி மகாகவி பாரதியை எண்ணிப் பாருங்கள் – வறுமையில் உழன்ற போதும் அந்த மிடுக்கும் கம்பீரமும் தமிழும் நம்பிக்கையும் – அது தான் அந்த தைரியம்.

அது தான் மாறனையும் இயக்கி அவனது இலட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. பொம்மிக்கு மாறனை தனக்கேற்ற இணையாக சுட்டிக் காட்டுவதும் இந்த தைரியம் தான்.

பொம்மி என்றொரு வானம்

பெண் என்பவளின் உச்சக் கட்ட லட்சியமே திருமணம் தான், பதி சேவை தான்’ என்று நம்பும் குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், ‘எனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது’ என்று படம் நெடுக தக்க வைத்து லாபமும் வெற்றியும் காணும் பொம்மியை வைத்தே ஒரு தனி திரைப்படம் எடுக்கலாம். அவ்வளவு ‘layered’ பாத்திரம், பொம்மி!

தன்னைப் போன்ற ஒருவனைக் கண்டு காதல் மலர்ந்தும், உடனே திருமணத்திற்கு தலையாட்டாமல், தைரியத்துடன், ‘எனக்கும் இலட்சியங்கள் இருக்கிறது. முதலில் அதைப் பார்ப்போம்’ என்று சொல்வதில் ஒளிர்கிறது பொம்மியின் தெளிவு.

இருவரும் திருமணத்தில் இணைந்த பின்னும் ‘மாறன் தனக்கு தாலி கட்டியவன்’ என்பதற்காக அவள் அவனைத் தாங்கவில்லை – மாறன் தனது காதலுக்கு தகுதி ஆனவன் என்பதாலேயே அவனைத் தாங்கிக் கொள்கிறாள்.

பொம்மிக்கு பிரசவ வலி வரும் அந்த காட்சியில் நேரத்தில் ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்வதில் இருக்கும் மிடுக்கும் ஆழமும் சொல்லும்: இது ‘marriage of equals‘ என்பதை.

மாறன் என்ற சூரியனை பிரதிபலிக்கும் நிலவல்ல, பொம்மி. அவள் அந்த சூரியன் தங்கி உறையும் வான்வெளி.

“என்னிடம் கேட்பதில் என்ன கவுரவம்?”

எனக்கு தெரிந்தவர் ஒருவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருந்த சமயம், அவரிடம் எனக்கு தெரிந்த மிக நல்ல பெண்ணைப் பற்றிக் கூறினேன். அவள் மிக நல்ல பணியில் இருப்பதையும், சுயசார்புடைய, தெளிவான பெண் என்றும் கூறியவுடன், அவளை வேண்டாம் என்று கூறி விட்டார் அந்த நபர். ஏன் என்று கேட்டதற்கு, “கையில் காசு பார்த்த பெண் தன்னையும் தன் பெற்றோரையும் மதித்து அனுசரித்து வாழ மாட்டாள்- சமத்துவம், உரிமை, சட்டம் என்று பேசியே வாழ்க்கை தீர்ந்து விடும்” என்று சொல்லிவிட்டு அதிரடியாக சிரிக்கவும் செய்தார்.

இது வெகு சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். இப்படி பட்டவர்கள் உலகை பின்னிழுக்கும் இந்த காலகட்டத்தில், ‘திருமணத்திற்கு பின்னும் பொருளாதார ரீதியாக சுதந்திரமுள்ள பெண்’ என்பதற்கு ஒரு படி மேல் சென்று “என்னிடம் உதவி கேட்பதில் என்ன தயக்கம், கவுரவம்?” என்று மாறனின் கனவுக்கு உயிரளிக்கும் பொம்மி, ‘கணவனின் நிழலில் வாழ்பவளே பத்தினி’ என்ற சிந்தனைக்கு ஒரு அழகிய முற்றுப்புள்ளி!

வெற்றிபெற்ற ஆணிற்கு பின்னால் அல்ல, இணையாக

உடலியற் தேவைகள், பாதுகாப்பு, பணம், சமூக அங்கீகாரம், சுய கௌரவம் ஆகிய தேடல்களை தாண்டி ‘சுயஇயல்பு உணர்தல்’ (அ) ‘சுயதிறன் புரிதல்‘ (எ) Self actualization தேவை ஒன்று இருக்கிறது. அந்த வைராக்கியத் தேடலில் இறங்கியவர்கள் காம்ப்ரமைஸ் செய்து அறியாதவர்கள்.

மாறனிடமும் பொம்மியிடமும் இருக்கும் இந்த வைராக்கியம் நம்மிலும் பலருக்கு இருக்கிறது. வெறுமனே பணத்தையும் புகழையும் நோக்கி அல்ல – self actualization என்ற இலக்கை நோக்கி நம்மில் பலர் முன்னேறிக் கொண்டிருக்கிறோம், அல்லது முன்னேற விழைகிறோம்.

பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் நிறைந்த சரியான இணை அமைந்தால், அந்த வைராக்கியத்தில் விளைந்த கனவு எளிதில் மெய்ப்படும்.

கணவன் மனைவியை மதிக்கும்போது, லட்சியங்களில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் இல்லை. பேக்கரியும் ஏர்லைன்ஸும் தோள் உரச நின்று கொள்ளும். அது தனது ஆற்றலின் உச்சவரம்பை எட்டித் தொடும்வரை ஓயாது.

ஆகவே மாறன் என்ற சூரனை மட்டும் அல்ல – பொம்மி, மாறன் என்ற இரு இணைகளையும் போற்றுக. சூரரைப் போற்றுக.

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 68,438 Views
All Categories