பிபிசி 100 பெண்கள் பட்டியல் 2020: இடம்பெற்ற நான்கு இந்திய பெண்கள் யார்?

2020ஆம் ஆண்டிற்கான பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அற்புதமான இந்திய பெண்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்!

2020ஆம் ஆண்டிற்கான பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நான்கு எழுச்சியூட்டும், அற்புதமான இந்திய பெண்களைப் பற்றி தெரிந்து கொள்வோம், வாருங்கள்!

2020ஆம் ஆண்டு என்றவுடன் கொரோனா தொற்றுநோய், லாக்டவுன், நிவர் புயல் என பெரும்பாலும் எதிர்மறையான விஷயங்கள் தான் நினைவுக்கு வருகிறது. ஆனாலும், “உண்மையில் உலகத்தை இயக்குவது பெண்கள் தான்” என்று பிரபல அமெரிக்கப் பாடகி பியோன்சே கூறியது எவ்வளவு சரியானது என்பதையும் பலவிதமாக நாம் உணர்ந்த ஆண்டும் இதுவே என்று கூறுவது மிகையல்ல.

Original in English | மொழி பெயர்ப்பு சிந்து பிரியதர்ஷினி

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் அவர்களும், நியூசிலாந்தின் பிரதமராக, இரண்டாவது முறையாக ஜசிந்தா ஆர்டெர்னும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஒருவித நிறைவை அளிக்கிறது.

இத்துடன் நம்ம சென்னையில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணனும் நியூசிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியில் வந்த முதல் அமைச்சராக இடம்பெற்று அசத்தியுள்ளார்! பெண்கள் உண்மையிலேயே தங்கள் சக்தியையும் நமக்கு இந்த ஆண்டில் காட்டியுள்ளனர்.

இந்நிலையில், நவம்பர் மாதத்தில், பிபிசி தனது ‘பிபிசி 100 பெண்கள்‘ பட்டியலை வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும், பிபிசி உலகம் முழுவதிலுமிருந்து 100 பெண்களை அறிவு, தலைமை, படைப்பாற்றல் மற்றும் அடையாளம் ஆகிய நான்கு பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக கௌரவிக்கிறது. இந்த ஆண்டும் அந்த பட்டியலில் சில அற்புதமான பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

அங்கீகரிக்கப் படாத ‘அன்சங் ஹீரோ’

இதில் என்னை நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடையச் செய்தது என்ன என்றால், பட்டியலில் முதலாவதாக இடம்பெற்ற நபர் தான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போன உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற பெண்களின் பிரதி அம்சமே இந்த அங்கீகரிக்கப் படாத ‘அன்சங் ஹீரோ’ (Unsung Hero) ஆவார்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முன்னணியில் இருந்த ஒவ்வொரு டாக்டரும் ‘அன்சங் ஹீரோ’. இன்னும் நம்மால் அதிகமாக அறிந்துகொள்ள முடியாத ஒரு வைரஸுக்கு அஞ்சாமல் தன்னை சேவையில் அர்பணித்துக் கொண்ட ஒவ்வொரு மருத்துவமனையிலும் உள்ள ஒவ்வொரு நர்ஸும் நிச்சயமாக ‘அன்சங் ஹீரோ’ தான். இரவும் பகலும் வேலை செய்து, அவர்களின் பராமரிப்பில் இருந்த நோயாளிகளின் நலத்தை மட்டுமே முன்னிறுத்திய, இந்தச் சூழலிலும் எழுந்து நின்று தனது பங்கிற்கு சேவை செய்ய முடிவு செய்த ஒவ்வொரு பெண்ணும் ‘அன்சங் ஹீரோ’!

பட்டியலில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பாராட்டத்தக்கவர்களே, தனித்துவம் பெற்றவர்களே. என்றாலும், பட்டியலில் உள்ள நான்கு இந்திய பெண்களைப் பற்றி உங்களுக்குடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பில்கிஸ் பானோ

‘ஷாஹீன் பாக் கி தாதி’ (பாட்டி) என்றழைக்கப் படும் 82 வயதான பில்கிஸ் பானோ, டெல்லியில் சி.ஏ.ஏ மசோதாவை அகிம்சை வழியில் அமைதியாக எதிர்த்த பெண்களில் ஒருவராக பலருக்கு பரிச்சயமானவர். ஒரு கட்டத்தில் சி.ஏ.ஏ விற்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகவே அறியப்பட்டார்.

டைம் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில், பத்திரிகையாளர் ராணா அயூப் அவர்களால் ‘ஓடுக்கப் பட்டவர்களின் குரல்’ என்று குறிப்பிடப்பட்ட பெருமைக்கு உரியவர் இவர். இத்துடன், 2020 ஆம் ஆண்டின் TIME இதழின் 100 மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் இடம்பெற்ற ஒரே இந்திய பெண்மணியும் இவரே ஆவார்.

இசைவாணி

தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்‘ எனப்படுகிற சாதி எதிர்ப்பு உணர்வுக்கு அர்பணித்துக் கொண்ட இசைக்குழுவின் ஒரே பெண் உறுப்பினரான இசைவாணி, இந்த பிபிசி பட்டியலில் இடம்பெற்ற அடுத்த இந்தியர் ஆவார். இந்திய நாட்டின் மிகச் சில கானா பாடகர்களில் ஒருவராவார் இவர். கானா இசை என்பது வட சென்னை சமூகத்தின் வேர்களிலிருந்து வெளிப்பட்ட கலைகளில் ஒன்று.

இன்று வரை ஆண்கள் மட்டுமே பெரும் ஆதிக்கம் செலுத்தும் களமாகவே கானா இருக்கிறது. ‘தி நியூஸ் மினிட்’ வெளியிட்ட செய்தியின்படி, “இந்த பிபிசி பட்டியலில் இடம்பெற்றது பார்த்து கானா இசைக் களத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க உதவும் என்று நம்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் இசைவாணி.

மானசி ஜோஷி

தற்போதைய ‘உலக பாரா-பேட்மின்டன் சாம்பியன்’ என்ற பெருமையை உடைய பாரா-இந்திய விளையாட்டு வீரராவார், மானசி ஜோஷி. பொறியியலாளரான இவருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தைத் தொடர்ந்து, கால் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு பின் பேட்மின்டன் மட்டுமே அவரது வாழ்வாகி போனது. இன்று அவர் உலக பாரா-பேட்மின்டன் சாம்பியன் என்பதுடன், அக்டோபர் மாதத்தில் தன்னை மாதிரியாகக் கொண்டு ‘பார்பி’ பொம்மை வடிவமைக்கப்பட்ட ஒரே இந்திய பாரா-தடகள வீரராகவும் ஆகியிருக்கிறார், ஜோஷி!

ரித்திமா பாண்டே

12 வயது ரித்திமா பாண்டேவிற்கு உலகத்தை உலுக்கிவரும் தட்பவெப்ப நிலை மாற்றம் பற்றியும், அதைச் சீரமைக்க என்ன செய்ய வேண்டும் என்று உங்களையும் என்னையும் விட அதிகம் தெரியும்! 2019 ஆம் ஆண்டு ஐ.நா.வின் மாறிவரும் தட்பவெப்ப நிலைக்கான உச்சி மாநாட்டில், பருவநிலை மாற்றம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து புகார் அளித்த 16 குழந்தைகளில் இவரும் ஒருவர். 2017 ஆம் ஆண்டில், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததற்காக அரசாங்கத்திற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தன் சார்பில் மனுவை தாக்கல் செய்தவரும் இவரே.

இந்த பட்டியலை பார்க்கையில், 2020 அப்படி ஓன்றும் மோசமாக இருக்கவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

(புகைப்படங்கள்: பிபிசி)

About the Author

Madhur Dave

A journalist by profession, I have a keen interest in gender issues, social issues, wildlife, and the environment. I am often found in bookstores, talking to random strangers or in a corner of my house read more...

1 Posts | 1,442 Views
All Categories