பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு: இது கச்சேரி சீசன்!

"வருடம் தோறும் சென்னை கச்சேரி சீசனில்  மூழ்கித் திளைப்பதை குடும்ப வழக்கமாக வைத்திருந்தோம்",  என்று தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் நம் வாசகி.

“வருடம் தோறும் சென்னை கச்சேரி சீசனில்  மூழ்கித் திளைப்பதை குடும்ப வழக்கமாக வைத்திருந்தோம்”,  என்று தன் அனுபவங்களை லயமாக, ஹாஸ்யமாக பகிர்ந்து கொள்கிறார் நம் வாசகி, பார்வதி விஸ்வநாதன்!

வருடம் தோறும் டிசம்பர் மாதம் ஒரு வாரமாவது சென்னை இசை விழா கச்சேரி சீசனில்  மூழ்கித் திளைப்பதை குடும்ப வழக்கமாக வைத்திருந்தோம் – 2019 வரை.  மற்ற மாதங்களில் சென்னையில் வியர்வையில்தான் திளைக்க வேண்டும்!

சில வருடங்களுக்கு முன்பு, வழக்கமான கச்சேரிகளுக்கு நடுவில் புதிய தலைமுறை அமைப்பான மாட்ரசனா (MadRasana) காலை நேர கச்சேரிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள் – சத்யம் தியேட்டரில்! சென்னைவாழ் பெருமக்கள் குளிர்கால உறக்கத்தை அனுபவிக்கையில் நான் பாப்கார்ன் சகிதம் கச்சேரி கேட்க போவேன்.  ஒரு கச்சேரியில் பாடகர்  “பயப்பட வேண்டாம். சண்டைக் காட்சி எதுவும் கிடையாது“ என்று ஆரம்பித்தார். பத்து மணிக்கு பளீரென்ற வெயில் கண்ணைக் கூச வெளியில் வந்தால், தனுஷ் படம் காலைக் காட்சிக்கு க்யூ ஆரம்பித்திருந்தது. அடுத்த வெளிவாயிலில் பாடகர் அங்கவஸ்திரம் புரள, தம்புராவை குழந்தை போல் தூக்கிக் கொண்டு, காரில் ஏறிக்கொண்டிருந்தார். சென்னையில் மட்டுமே காணக்கிடைக்கும் இந்த அரிய காட்சிக்காகவே, எனக்கு சென்னை மிகவும் பிடித்த நகரம். (டிசம்பரில் மட்டும்!)

கச்சேரி அட்டவணை!

டிசம்பர் முதல் வாரத்திலிருந்தே கச்சேரி அட்டவணை போடும் வேலை தொடங்கும். அது ஒன்றும் சாதாரண வேலை இல்லை. ஒரே சபாவில் சீசன் டிக்கட் வாங்குவதா அல்லது தனித்தனியாகவா? இலவச கச்சேரிகள் எந்த சபாக்களில் என்பதான நிதித்துறை முடிவுகளைத் தாண்டி, யாருடைய கச்சேரிக்கு போவது, யாரை விடுவது என்பது அடுத்த குழப்பம். ஓரளவுக்கு எங்கள் ரசனை ஒத்துப்போனாலும் , சில சங்கீத விவகாரங்களில் எனக்கும் கணவருக்கும் பெரும் கொள்கை முரண்பாடுகள் உண்டு. “என் உயிரே போனாலும் அந்த பாடகர் கச்சேரிக்கு வரமாட்டேன்” என்பது போன்ற அறிக்கைகளும் விடப்படும். பிடித்தமான பாடகர்கள் சிலர் பெங்களூரில் அடிக்கடி கச்சேரி பாடுபவர்களாக இருந்தால், அவர்களை கழற்றி விட்டுவிட்டு, அத்திபூத்தாற்போல் கிடைக்கும் பாடகர்களின் கச்சேரிக்கு முதலிடம் வழங்கப்படும். அதேபோல் அபிமான பாடகி, தெரிந்த ஒரு பத்து பாட்டுக்களையே கடந்த இரண்டு கச்சேரிகளாக அரைத்துக் கொண்டிருந்தால் , அவர்களும் அட்டவணையிலிருந்து தயவு தாட்சணியம் இன்றி நீக்கப்படுவர். எந்தவித முன்னறிவிப்பில்லாமல் ஒரு போனவருடப் புதுமுகம் இந்த வருடம் இசைவானின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி விடுவார். மயிலாப்பூரில் கரகரப்ரியா கேட்டுக்கொண்டிருக்கும் போது, பக்கத்து இருக்கை மாமி, திடீரென்று காதில் உளவுத்துறை போல் சங்கேத மொழி சொல்வார் – “பைரவி பாக்யநாதன் தான் இப்போ டாப். நாளைக்கு மூணு மணிக்கு பாரதீய வித்யாபவனில் பாடறா. நீங்க டிக்கட் வாங்கலையா?”

பாட்டுக் கச்சேரி நெளிவு சுளிவுகள் ஒரு விதமாக வசப்பட்ட போது, மகள் பரதநாட்டியம் பயில ஆரம்பித்தாள். அவளைத் தரமான நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதை பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் தலையாய கடமையாகக் கொண்டு, அந்த ஆராய்ச்சியிலும் இறங்கினோம். இதற்கும் மேல், சில தவிர்க்க முடியாத அன்புத்தொல்லைகள் வேறு – பெரியம்மாவின் அமெரிக்கா-வாழ் பேத்தியின் கச்சேரி, அலுவலகத்தில் மேலாளரின் கொழுந்தனார் பையனின் கச்சேரி என்று.

புடவை ஏற்பாடுகள்!

என்னுடைய மனதிற்குப் பிடித்த ஏற்பாடு, எந்த புடவைகளை எடுத்து செல்வது என்பதுதான். “காலையில் அணியும் நிறம் என்னவோ?” “மாலையில் பொருந்தும் பட்டு என்னவோ?” என்று கையில் ஒரு ப்ரிண்ட் அவுட்டை வைத்துக் கொண்டு , ஒரு புடவைக்குன்றுக்கு நடுவே திணறிக்கொண்டிருந்த என்னைப் பார்த்து கணவர் கேட்டார் – “கச்சேரி பாடப்போறியா , கேட்கப்போறியா?” . அவருக்கு என்ன தெரியும், வருடாவருடம் அதே அறிவுஜீவி ஜிப்பா இருந்தால் போதும் ! சென்னை மாதர்களும், அமெரிக்காவிலிருந்து “சீசனுக்கு” வந்த பெண்டிரும், தங்கள் பனாரஸ் புடவைகளிலும் , காஞ்சிப்பட்டிலும் ஜொலிக்கும் போது, நான் பெங்களூர் ரசிகைகள் சார்பாக இது கூட செய்யாமல் முடியுமா?

எந்த சபா? யார் பாடறா?

ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்து இசை விழா ஆரம்பித்தால், நேரம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும். நாலரை டு ஏழு – ம்யூசிக் அகாடமியில் ரஞ்சனி-காயத்ரி, ஏழிலிருந்து ஒன்பது பார்த்தசாரதி ஸ்வாமி சங்கீத சபாவில் சஞ்சய் சுப்பிரமணியம் என்று ரயில் அட்டவணை போல் பயங்கர கெடுபிடியாக இருக்கும். இரண்டு சபாக்களுக்கும் இடையேயான தூரம், ஊபர்/ஒலா  கிடைக்கும் சாத்தியக்கூறு என்று வானிலை ஆராய்ச்சி மையமே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு புள்ளி விவரங்களுடன் திட்டமிடல் நடக்கும். இதற்கு நடுவில் சபா கேன்டீனில் அடை-அவியல் நப்பாசை வந்துவிட்டாலோ போச்சு! மனதிற்குள் மிருதங்க வித்வானிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு , தனியாவர்த்தனத்தின் போது அடை-அவியல்-காசி அல்வா-காபி முடித்து, சென்னை ஆட்டோ ஓட்டும் அன்பரிடம் கெஞ்சி அடுத்த கச்சேரிக்குப் போய் சேர்ந்தால், அங்கும் பாடகர் முதல் கச்சேரியில் கேட்ட அதே கல்யாணி ராக கீர்த்தனையை பாட ஆரம்பிப்பார்!

டிக்கட் வாங்குவதும் பெரிய சோதனைதான். சில பாடகர்களின் கச்சேரி டிக்கட் க்யூ, அமெரிக்க தூதரக விசா நேர்காணல் வரிசையைவிட நீளமாக இருக்கும். போனவருடம் நான் ஒரு சபாவை தொலைபேசியில் அழைத்து “சார்.. ஆன்லைன்-ல உங்க சபா கச்சேரி டிக்கட் வாங்க முடியுமா?” என்று பவ்யமாகத்தான் கேட்டேன். சபா செக்ரெடரிக்கு பெரும் கோபம் வந்துவிட்டது. “மேடம், அந்த வசதியெல்லாம் கிடையாது. நேரில் வந்து கௌண்டரில் டிக்கட் வாங்கிக்கோங்கோ. வேணும்னா, க்ரெடிட் கார்ட்-ல பணம் செலுத்தலாம்” என்றார்!

கொரோனா வந்தாலும், கச்சேரி கேட்போம் – ஆன்லைனில்!

யாராவது நினைத்திருப்போமா? இந்த வருடம் கொரோனா புண்ணியத்தால், எல்லா சபாக்களும் வலைத்தளத்தில் இசைவிழா. கலாகேந்த்ரா – நகர சபாக்களின் குழுமம் , சங்கீத வித்வத் சபை, இன்னும் சில அமைப்புகள் முதிர் மற்றும் இளம் கலைஞர்களின் பேராதரவுடன், அட்டகாசமாக இசைவிழா களை கட்டிவிட்டது. “அடாது கொரோனா வந்தாலும், விடாது கச்சேரி கேட்போம்” என்று நாங்களும் அட்டவணை போட்டு விட்டோம்.  சீசன் டிக்கட்கும் வாங்கியாயிற்று. நாங்க ரெடி!

என்ன, ஒரே குறை? கேன்டீன் இல்லை, முருங்கை இலை அடை இல்லை. ஊபர் (Uber) ஓட்டம் இல்லை . எல்லாவற்றுக்கும் மேல், புதிதாய் வாங்கிய பட்டுப்புடவைகளை ரிலீஸ் பண்ண முடியவில்லை!

எட்டு மணிக்கு இரவு உணவை முடித்துவிட்டு மடிக்கணினியிலிருந்து தொலைக்காட்சியின் பெரிய திரைக்கு கனெக்ஷன் கொடுத்துவிட்டு கச்சேரிக்கு உட்கார்ந்தோம். திருச்சூர் சகோதரர்கள் பாட்டு இன்றைக்கு. மேடை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது, வாணி மஹாலாக இருக்கலாம். துல்லியமான ஒலி/ஒளி தொழில்நுட்பம், அற்புதமான வடிவமைப்பு.

விறுவிறுப்பான வர்ணம் முடிந்ததும், வழக்கமான அதிரடி கைதட்டலுக்கு பதிலாக வெறும் அமைதி . தம்புராவின் நாதம் மட்டும் அலை அலையாய். சகோதரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை புரிந்துகொண்டனர்.  ரசிகர்களின் கைதட்டல்தானே கலைஞனுக்கு ஊக்கம்? எனக்கும் ஏதோ ஒரு சொல்லத்தெரியாத வெறுமை. கழுத்தை எக்கி தெரிந்தவர்கள் யாராவது அரங்கத்தில் தென்படுகிறார்களா என்று பார்க்கமுடியாமல், உருக்கமான சங்கதியை முகம் தெரியாத பக்கத்து இருக்கை ரசிகரோடு “ப்ச் அடடா” என்று பகிர முடியாமல் இது என்ன இசைவிழா? என்று தோன்றியது . திரையில், பாடகர்களும் , பக்கவாத்தியக் கலைஞர்களும் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டும் , “சபாஷ் பலே பலே” போட்டுக் கொண்டும் இதுவும் இசைவிழாதான் என்று நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

பழமையில் ஊறியதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த இசை உலகம், புதுமையை அரவணைப்பதை பார்த்து நெகிழ்ச்சியாக இருந்தது. நாளைக்கு, குமாரி. கன்யாகுமாரி அவர்களின் வயலின் இசை. கேன்டீன் இல்லாத குறையை மாற்ற , ஸ்விக்கியில் முந்திரி ரவா தோசை வரவழைக்கலாம் என்று இருக்கிறேன்.  ஒரு நல்ல சந்தேரி புடவையைக் கூட கட்டிக் கொண்டு கச்சேரி கேட்கலாம் என்று தோன்றியது. ஏன் கூடாது? நாங்கள் டிஜிட்டல் ரசிகர்கள்!

கட்டுரை முதலில் இங்கே வெளியிடப்பட்டது.
பார்வதி விஸ்வநாதன், இளம் இசைக்கலைஞர்களையும் புதுமையான முயற்சிகளையும் ஊக்குவிக்கும் தளமான ‘தி மியூசிக் மூவ்மென்ட்‘ அமைப்பின் இணை நிறுவனர் ஆவார்.

பட ஆதாரம்: YouTube | ‘சர்வம் தாளமயம்’ திரைப்படம்

About the Author

Parvathi Viswanathan

Parvathi Viswanathan is a seasoned business leader with more than 25 years of impactful presence in the Indian IT industry. She has had significant stints as Vice President leading Financial Services Market Units at Capgemini read more...

1 Posts | 1,928 Views
All Categories