பாவக் கதைகளின் ‘வான்மகள்’ நமக்கு சொல்லுவது?

"சிறு பிள்ளைகளை சீரழிக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும், குழந்தையின் மனதில் அந்நிகழ்வு ஆறாத ரணமாகி விடுகிறது" என்கிறார், ரம்யா.

“‘வான்மகள் கதையில் வருவது போல், சிறு பிள்ளைகளை ஓர் இருட்டுலகில் தள்ளி,  உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும், அந்தக் குழந்தையின் மனதில் அந்நிகழ்வு ஆறாத ரணமாக தங்கிவிடுகிறது” என்று எழுதுகிறார், ரம்யா.

நெட்ஃப்ளிக்ஸ் என்னும் ஓ.டி.டி(OTT) தளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத் தொகுப்பு, பாவக் கதைகள். அதில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இடம்பெற்றுள்ள அத்தியாயம், வான்மகள்.

ஆறாத ரணம்

இரு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் மகன் என அழகிய, அமைதியான குடும்பம். இதில் பெரியவள் பூப்படையும் நிகழ்வு ஆடம்பரமாக நடத்தப்படுகிறது. அதற்கு பின் ‘உன்னை நீ பார்த்து கொள்ள வேண்டும்’ என அம்மா கூறும் அறிவுரை சிறப்பு.

அவளுக்கு ஏதோ கூடாத ஒன்று நடக்க போகிறது என்று பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துவிட்டு, வருகிறது திருப்புமுனை. அவளது தங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். அதன் பின் அவள் தாயின் தவிப்பு, தந்தையின் தயக்கம் என இயல்பாய் விரிகிறது திரைக்கதை. அவர்களின் மகன் பாவம் செய்தவனுக்கு தண்டனை கொடுத்து விடுகிறான். நியாயம் கிடைத்து விட்டாலும் அந்த குழந்தையின் வலியும் அக்குடும்பத்தின் வேதனையும் மறையவும் மாறவும் போவதில்லை என்ற நிதர்சனமும் நமக்கு விளங்கி விடுகிறது.

இதை உறுத்தும் உண்மை என்னவென்றால், இது எங்கோ நடக்கும் ஒரு சம்பவம் அல்ல. அனுதினம் செய்திகளில் காணும் நிகழ்வாகவே இது மாறிவிட்டது.

குறையாத குற்றங்கள்

எங்கோ ஒரு தாயின் கண்ணீரும் ஒரு குழந்தையின் அலறல் சத்தமும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் குற்றங்கள் குறையவில்லை. இதற்கிடையில் சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றம் இது போன்ற ஒரு நிகழ்வில் அளித்த தீர்ப்பு வேறு நமது நம்பிக்கையை இன்னும் சிதைக்கிறது.

ஒரு தவறு அரங்கேறிய பிறகு தண்டனை அளிப்பது மற்ற குற்றங்களுக்கு பொருந்தலாம். ஆனால் சிறு பிள்ளைகளை,  நினைத்து கூட பார்க்க முடியாத ஓர் இருட்டுலகில் தள்ளி உடல் அளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிப்படைய செய்யும் கொடூரங்களுக்கு பொருந்தாது. காரணம்? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும் அந்தக் குழந்தையின் மனதில் அந்நிகழ்வு ஆறாத ரணமாக தங்கிவிடுவதால்.

இன்று நாம் காணும் அவலங்களை பார்க்கும் பொழுது ஒரு கவிஞனின் வரிகள் நினைவிற்கு வருகிறது:
“மனிதனின் இந்த செயல்களால் , கர்ப்பகிரகத்தில் வீற்றிருக்கும் பெண் தெய்வங்கள் கூட பாதுகாப்பிற்காக, காவல் தெய்வங்களான அய்யனாரையும் கருப்பண்ண சாமியைம் தேடி செல்லும் நிலை வந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்.” 

இருந்தும்…ஏன்?

நம் நாட்டில் பெரும்பாலான நதிகளுக்கு பெண்களின் பெயரைத் தான் சூட்டினார்கள். பண்டைக் காலம் தொட்டே தமிழகத்தில் வழிபடும் தெய்வங்களில் பெண் தெய்வங்களுக்கும் இடம் உண்டு. பல கவிதைகளில் பெண்களை பூவிற்கும் நிலவிற்கு ஒப்பிட்டு வரிகள் அமைகிறது. இது அனைத்தும் எதற்காக? ‘பெண்களை மதிக்க வேண்டும்’, என்பதற்கே.

‘…இருந்தும் தவறுகள் எப்படி நிகழ்கின்றன? ஏன் பெண் பிள்ளைகளை காமக்கண்ணோடு பார்க்கின்றனர்?’ என்கிற கேள்விகள் ஒரு பக்கம் இருக்கின்றன. இதில் நாம் என்ன செய்தால் இதைத் தடுக்க முடியும் என்ற கேள்விக்கு விடை இங்கே:

கவனம் தேவை!

பெற்றோர்கள் இனி இதை இன்னும் கவனமாகக் கையாள வேண்டும். தன் மகன் என்ன செய்கிறான், கைபேசியிலோ அல்லது மடி கணினியிலோ எந்த இணைய தளத்தை பார்த்து கொண்டிருக்கிறான் என்ற கவனம் பெற்றோர்களுக்கு தேவை. பெண்களை, சிறுமிகளை, சக உயிர்களாக, குழந்தைகளாக பார்க்க அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். பெண்களின் முக்கியத்துவம் சிறு வயது முதலே அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பிறரின் தொடுதலில் நல்லது எது கேட்டது எது என்று சொல்லித்தரும் நாம், பெண் பிள்ளைகளை அணுகும் முறையையும் சொல்லி தருவது அவசியம். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி அடைந்து நம் பிள்ளைகளின் மனதில் தேவையற்ற சிந்தனைகளை விதைத்தாலும், ஒரு தாயின் அரவணைப்பும் அக்கறையும் அதனை மாற்றும் வலிமை கொண்டது.

சரி, பெற்றோர் இல்லாமல் ஆதரவற்ற ஆசிரமங்களில் தங்கி இருக்கும் சிறுவர்களின் நிலை?

நம்மில் பலர் இவ்விடங்களுக்கு பணமாகவோ  பொருளாகவோ நன்கொடை வழங்கி வருகிறோம். இன்னும் ஒரு படி மேல் சென்று, அந்நிறுவனர்களின் ஒப்புதலோடு சில நேரம் செலவிட்டு அவர்களுக்கு நல்லுரைகளை வழங்கலாம்.

பெண்களின் கண்ணீருக்கு அதிக பலன் உண்டு என்று உணரவைத்து, இச்சமூகத்திற்கு பெண்களால் சிறுமிகளுக்கு ஏற்படும் குற்றங்களை தடுக்கும் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்று உணர வைப்போம்.

சபதம் எடுப்போம். சாதித்து காட்டுவோம்.

பட ஆதாரம்: பாவக் கதைகள், வான்மகள்.

About the Author

13 Posts | 18,404 Views
All Categories