தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த பழமொழியாகும். இதற்கு மூன்று வகையான விளக்கங்களை  முன்வைக்கிறார் நம் வாசகி ரம்யா!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த பழமொழியாகும். இதற்கு மூன்று வகையான விளக்கங்களை முன்வைக்கிறார் நம் வாசகி ரம்யா!

தைத்திருநாளாம் முதல் நாள் பொங்கல்

உழவர் பெருமக்களின் கடின உழைப்பால் கதிர்கள் அனைத்தும் செழித்து வளர்ந்தோங்கி அறுவடைக்காக நிற்கின்ற நேரமே தை மாதம்!

முதலாவதாக, தை மாதம் தமிழ் மாதங்களில் பத்தாவது மாதமாகிறது. அதிலும் தைத்திருநாளாம் முதல் நாள் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறோம். பல நாட்களின் கடின உழைப்பால் கதிர்கள் அனைத்தும் வளர்ந்தோங்கி அறுவடைக்காக நிற்கிற நேரமே தை மாதம். இந்த அறுவடைக்கு பிறகே வயல்  வெளிகளின் பாதை கண்களுக்கு புலப்படும். மற்றும் விவசாயிகள் தங்கள் கடன்களை நிறைவு செய்து சூரியனுக்கு தங்கள் நன்றிகளை தெரிவிப்பார்கள்.

உத்தராயண காலம்

இரண்டாவதாக, தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். இந்துக்களின் நம்பிக்கைப்படி மனிதர்களின் இந்த ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலங்களில் உத்தராயணம் மிகவும் புனிதமான காலமாக போற்றப்படுகிறது. எல்லா நன்மைகளும் இக்காலத்தில் சிறந்தோங்கும் என்பதே இந்து மக்களின் நம்பிக்கை.

விவசாயிகளின் போராட்டம்

மூன்றாவதாக சரித்திரத்தில் இடம் பிடிக்க போகும் நிகழ்வு இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆம்! நம் நாட்டின் தலை நகரமாக விளங்கும் புது டில்லியில் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து பல மாநிலங்களில் இருந்து வந்து போராடி கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் தான் அது.

அரசால் நிறைவேற்றப்படும் சட்டங்களை பற்றி அந்தந்த துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதன் நன்மையும் தீமையும் விளங்கும். இந்த சட்டங்களை மாற்றி அமைக்கலாமா அல்லது ரத்து செய்ய வேண்டுமா என்பது நம்முடைய எண்ணஓட்டம் கிடையாது. ஆனால் கொரோனா அச்சுறுத்தும் இந்த காலத்தில் கடும் குளிரால் அங்கே பலர் உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றன என்பது உண்மை.

இவ்விதம் போராடும் விவசாயிகள் யாரோ அல்ல. யாரோ ஒருவருக்கு ஒரு தந்தையாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக, கணவராக அவர்களை பாருங்கள். அவர்களை நம்பி சில உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் போராட்டம் தன்னலம் அற்றது. ஒட்டு மொத்த இந்தியாவின் வாழ்வாதாரத்திற்கு நன்மை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.

அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த செல்லும் போது அவர்களுக்கு தரப்பட்ட உணவை ஏற்று கொள்ளாமல் தாங்கள் சமைத்த உணவை எடுத்து சென்று அங்கே சிறிதும் தயக்கமின்றி தரையில் உட்கார்ந்து சாப்பிட்டது அவர்களின் உண்மையான உணர்வை காட்டுகிறது.

நம்மால் என்ன செய்ய முடியும்?

போதிய உணவு இன்றி, சரியான தங்கும் வசதி இன்றி பலர் அங்கே தவித்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் தங்கள் போராட்டத்தை கை விடவில்லை. மேலும், பார்க்கும் பொழுது பலர் வயதானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு அங்கு இருப்பது போராட்டம் மட்டும் அல்ல, மிகப்பெரிய தியாகம். திடீரென பெய்யும் மழையில், வேறு வழி இன்றி நிழல் குடைகளை தேடி ஓடும் காட்சிகள் நம்மை பதற வைக்கின்றன.

அவர்களுக்கு நம் ஆதரவு தேவை. எங்கோ தங்கி இருக்கும் நம்மால் என்ன செய்ய முடியும்? அங்கே நேரில் செல்வது கடினம். சமூக வலைதளங்களின் மூலமாக நம்மால் இயன்ற வரை அவர்களை ஆதரித்து செய்திகளை பதிவு செய்வோம். சிறு துளி பெரு வெள்ளம். நாம் ஒவ்வொருவரும் செய்யும் ஒரு கிளிக் மட்டும் ஒரு ஷாரினால் அவர்களுக்கு ஆதரவு பெருகட்டும்.

தை மாதம் பிறக்க போகும் நாட்களில் அவர்களுக்கு வழி பிறக்கட்டும். மூடப்பட்டிருக்கும் சாலைகள் திறக்கட்டும். ஜெய் ஹிந்த்!

பட ஆதாரம்: ‘மருது’ திரைப்படம்

About the Author

13 Posts | 18,399 Views
All Categories