பிற்போக்கான டிரான்ஸ்ஃபோபியா வழக்கங்களை மாற்றிக் கொள்வோம்!

டிரான்ஸ்ஃபோபியா, சாதீயம், இனவாதம், ஓரினச்சேர்க்கை ஆகியவை குறித்த புரிதலை, பகுத்தறிவை, பள்ளிகள் ஏன் கற்பிப்பதில்லை?'

‘அதிகாலையில் எழுந்து சீக்கிரம் தூங்கியவரெல்லாம் ‘நல்ல மனிதர்’ என்று கற்பிக்கும் பள்ளிகள், டிரான்ஸ்ஃபோபியா, சாதீயம், இனவாதம், ஓரினச்சேர்க்கை ஆகியவை குறித்த புரிதலை, பகுத்தறிவை, ஏன் கற்பிப்பதில்லை?’

“அப்பா!! நான் தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் இரவு 9 மணிக்கு கிளம்பறேன்!” சீதா அலைபேசியில் தன் செல்லமான அப்பாவுக்கு பதிலளித்தாள். வார இறுதியில் வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்த தருணத்தில் சீதா பயணத்திற்கு தயாரா என்று தெரிந்து கொள்ள அவளை அலைபேசியில் அழைத்திருந்தார், அப்பா.

Original in English | மொழி பெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி

எப்போதும் போல், தனது 23 வயது செல்வ மகளுக்கு அப்பா சகல அறிவுரைகளையும் அளித்துக் கொண்டிருந்தார். ரயிலில் தனியாகப் பயணிக்கப் போகும் சீதாவிடம், தூங்கும்போது தன்னை போர்வையால் நன்றாக மூடிக்கொள்ளவும், அந்நியர்களுடன் பேசாமலும் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

பொதுவாக அதிகம் பேசாதவர்கள் கூட நீண்ட ரயில் பயணங்களில் உடன் வருபவர்களிடம் மனம்விட்டு பேசக்கூடும். ரயில் பயணங்களின் அலாதி மேஜிக் அல்லவே அது! அப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட
தன்னைப் பற்றிய எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் சீதாவிடம் அறிவுறுத்தினார், அப்பா.

அப்பாவுடனான உரையாடலுக்கு பின் சீதா தனது ரயில் வரும் வரை காத்திருக்க பிளாட்பார்ம் மேடையில் இருந்த ஒரு பெஞ்ச்-இல் அமர்ந்தாள். 8:55 மணிக்கு, ரயில் வருவதை கண்டவளுக்கு, முதல்முறையாக, அவளுடைய ரயில் சரியான நேரத்தில் வருவது போல் தோன்றியது. சீதா மகிழ்ச்சியுடன் ரயிலுக்குள் நுழைந்து தன் இருக்கையைத் தேடினாள்.
அது ஒரு ‘சைடு பெர்த்’ என்று தெரிந்ததும், “ஆஹா! ரயில் சரியான நேரத்தில் வந்தது மட்டுமின்றி எனக்கு ஒரு சைடு பெர்த்தும் கிடைத்து விட்டது. நிச்சயமாக இன்றிரவு நான் நிம்மதியாக உறங்கப் போகிறேன்!” என்று சிலாகித்துக் கொண்டே, ரயிலில் பத்திரமாக ஏறிவிட்டதாக தன் அப்பாவுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தாள். பின்பு ரயில் மெதுவாக வேகம் எடுக்க, தன் போர்வையை விரித்து போர்த்திக்கொண்டு , காதுகளில் ஹெட்-ஃபோன் மாட்டி சில பாப் பாடல்களைக் கேட்டபடியே கால்களை நீட்டி நன்கு உறங்கிப் போனாள்.

திடீரென…

நள்ளிரவில் திடீரென விழிப்பு வந்தது – தன் அருகில் யாரோ அமர்ந்திருப்பதை அவள் உணர்ந்தாள்.
யாரோ, எதுவோ அவள் கால்களில் பட்டதை உணர்ந்தபோது பயந்தவள் இன்னும் உறக்கம் கலையாத கண்களால், தன் பெர்த்தின் விளிம்பில் யாரோ ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

பளிச்சென்ற சிவப்பு நிறத்தில் புடவை உடுத்தியிருந்த அந்த உருவம், குளிர்க்காற்று காதுகளுக்குள் நுழைவதைத் தடுக்க, தலையை புடவையின் தலைப்பால் மூடி அமர்ந்து இருந்தது. திடீரென சீதா ஒன்றைக் கண்டால் – புடவை அணிந்திருந்தாலும் அதில் ஏதோ ஒரு வித்தியாசம் இருந்தது. ஆம், திகைப்பும் திகிலும் மேலிட அந்த நபர் ஒரு பெண் அல்ல, ஒரு திருநங்கை என்பதை உணர்ந்தாள்.

“என்ன இது?! என்னிடம் கேட்காமல் அவர் எதற்காக என் பெர்த்தில் அமர்ந்திருக்கிறார்? நான் என்ன செய்வது? நான் அவரை வெளியேறச் சொல்லலாமா? ” என்றெல்லாம் பதட்டத்தில் ஏதேதோ மனதிற்குள் இரைந்தாலும் ஒரு வார்த்தை கூட அவள் வாயிலிருந்து வெளிப்படவில்லை.

ஆணாகப் பிறந்து பிறகு பெண்ணாக தன்னை அலங்கரித்துக் கொள்ளும் நபர்களைப் பற்றி சீதா தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து நிறைய கதைகளைக் கேள்விப்பட்டிருந்தாள். “அவர்கள் சபிக்கப்பட்டவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பிச்சை எடுப்பவர்கள்; அவர்கள் குழந்தைகளை கடத்திச் சென்று விடுவார்கள் என்றும், ‘வித்தியாசமான பிறப்புறுப்புகள்’ உடையவர்களாகவும் ஏதேதோ சொல்லக் கேட்டிருக்கிறாள். அவர்கள் கேட்கும் போது பணம் கொடுக்காமல் மறுத்தால், மறுக்கும் நபரை குழுக்களாக சூழ்ந்துகொண்டு அந்த நபரை தகாத முறையில் தொடுவார்கள் என்றும் அவள் கேள்விப்பட்டிருக்கிறாள்.

இந்நிலையில் என்ன பேச வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை.

அதே நொடி அந்த திருநங்கை, சீதாவின் கண்களை தன் மீது ஊர்வதை உணர்ந்தவராய், அவள் பக்கம் திரும்பினார். புன்னகையுடன், ‘உங்களைக் கேட்காமல் உங்கள் இருக்கையில் அமர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்!’ என்று கேட்டபோது நிஜமாகவே அவர் அவளிடம் மன்னிப்பு கேட்பதாக அவளுக்கு தோன்றியது. சீதா எதையும் சொல்வதற்கு முன்பு, அந்த நபர் சரளமான ஆங்கிலத்தில் தொடர்ந்தார், “என் பெர்த்திற்கு அடுத்த பெர்த்தில் இருந்த நபர்கள் முரட்டுத்தனமாக, மோசமாகப் பேசி என்னைச் சீண்டிக் கொண்டிருந்தனர். என் பார்வைக்கு எட்டிய வரையில் ஒரே பெண் நீங்கள் தான்; அதனால் நான் இங்கு வந்து அமர்ந்து விட்டேன். நான் உங்களை எழுப்ப முயற்சித்தேன், ஆனால் நீங்கள் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தீர்கள். எனவே, நான் இங்கே அமர்ந்தேன்.” என்று சொல்லி முடித்தார்.

அவர் பேசியதை கேட்டு சற்றே நிதானம் அடைந்தாலும், அந்த நபர் அவளுடன் உட்கார்ந்து பயணிக்கப் போவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சீதா பணிவுடன் பேசலானாள்: “சார், எனக்கு புரிகிறது ஆனால்…”

அவள் மேலே தொடரும் முன், அந்த திருநங்கையிடம் இருந்து மென்மையான, தெளிவும் உறுதியும் கொண்ட பதில் வந்தது. “இல்லை! நான் உங்களைப் போலவே ஒரு பெண் தான்! என்னை சார் என்று அழைப்பதன் மூலம் நீங்கள் எனக்கு மரியாதை அளிக்கிறீர்கள் என்று உணர்கிறேன். ஆனால் நான் ஒரு பெண். என்னை நீங்கள் ஒரு பெண்ணாக உணர்ந்து உரையாட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார், அந்தத் திருநங்கை.

“ஆனால்… நீங்கள் ஒரு ஆண்; ஒரு பெண் போல உடையணிந்தவர் மட்டுமே!” என்று ஒரு வேகத்துடன் பதிலளித்தாள், சீதா.

“ஆம், நான் ஒரு ஆணாகப் பிறந்தேன். ஆனால் நான் ஒரு பெண்ணாக வாழ விரும்பி இந்த வாழ்கையைத் தேர்வுசெய்திருக்கிறேன். எதுவாக நான் எப்போதும் உணர்ந்தேனோ, அந்தப் பெண்மையை நான் இப்போது முழுமையாக ஏற்று வாழ்கிறேன்” என்று மென்மையாக, உறுதியாக பதிலளித்தார் திருநங்கை.

“உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டாள் சீதா.

“சியாமா” என்று வந்தது பதில்.

தன் தவறை உணர்ந்தாள், சீதா

இப்போது நன்றாக விழிப்பு வந்துவிட, சீதாவால் சியாமாவை நன்றாக பார்க்க முடிந்தது. சியாமா எல்லா வகையிலும் ஒரு சாதாரண பெண்ணைப் போலவே தோற்றமளித்தாள். தான் கேள்விப்பட்டிருந்த வதந்திகளில் ஒன்று கூட சியாமாவிற்கு பொருந்தும்படி இல்லை என்று உணர்ந்தாள்.

சீதா தனது தலையைத் திருப்பி அடுத்த கம்பார்ட்மெண்டை பார்க்க, அங்கு ஆண்கள் சிரிப்பதைக் கண்டாள். அவர்கள் சியாமாவை அருவருப்பான பெயர்களைக் கொண்டு அழைத்தார்கள். சியாமாவின் கண்களில் வெறுப்பு, பயம், கோபம் மற்றும் கதியற்ற நிலை மிளிரக் கண்டாள்.

ஒரு கேள்வி

அந்தக் கணம், அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தது:

‘அதிகாலையில் எழுந்து சீக்கிரம் தூங்கியவரெல்லாம் ‘நல்ல மனிதர்’ என்று கற்றுத் தந்த பாடங்களுடன், மூன்றாம் பாலினம் பற்றிய அச்சம் (எ) டிரான்ஸ்ஃபோபியா, சாதீயம், இனவாதம், ஓரினச்சேர்க்கை பற்றிய அச்சம், அருவருப்பு ஆகியவற்றை சரிவர புரிந்து கொண்டு, அவற்றை புறந்தள்ள உதவும் பாடங்களை பள்ளிகள் ஏன் கற்பிப்பதில்லை?’
இவை மிக முக்கியமானவை அல்லவா?’

இப்போது அந்த திருநங்கையின் நிலையை முழுமையாக உணர்ந்தவளாய், சியாமாவிடம் திரும்பினாள், சீதா.
“தயவுசெய்து நன்றாக உட்கார்ந்து கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால், என்னிடம் இருக்கும் இந்த துப்பட்டாவால் உங்களை மூடிக் கொள்ளுங்கள்.” என்று கூறி, சியாமாவிடம் தன் துப்பட்டாவை நீட்டினாள். சியாமா அன்பும் நன்றியும் பொங்க அதை எடுத்துக் கொண்டாள்.

அங்கே அந்த இரு பெண்களும் ஒரு நிறைவான மௌனத்தில் அமர்ந்திருந்தனர். சற்றுநேரத்தில் சீதா உறங்கிப் போனாள்.

அவள் விழித்தபோது, ​​சியாமா போய் விட்டிருந்ததை மெலிதான ஆச்சரியத்துடன் உணர்ந்தாள்.

“ஏதோ ஒரு ரயில் நிறுத்தத்தில் அவள் இறங்கியிருக்க வேண்டும்” என்று எண்ணியவள் கண்ணில் அழகாக மடிக்கப்பட்டு, தன் கால்களுக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த தன் துப்பட்டா பட்டது.

சீதாவின் பயணம் தொடர்ந்தது. ரயில் நகர்ந்தாலும், அந்த சம்பவம் அவள் மனதில் ஆழப் பதிந்து நின்றுகொண்டது.

தலையங்கப் படத்தில் இருப்பவர்: பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை, நர்த்தகி நடராஜ்
பட ஆதாரம்: YouTube

About the Author

Swetha P

An enthusiast in all sorts that gives meaning or happiness.A reader, a software engineer, who can write now and then and want to make this world a better place for women. Want a hand read more...

1 Posts | 1,128 Views
All Categories