Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
எந்த வகையிலோ இன்னொருவரின் நலத்திற்கான பொறுப்பை ஏற்றவர், மனிதம் வளர்ப்பதால் அவரே உலகின் நம்பிக்கை என்கிறார், கல்பனா.
“எந்த வகையிலோ இன்னொருவரின் நலத்திற்கான பொறுப்பை ஏற்றவர் நீங்கள் என்றால், மனிதம் வளர்ப்பதால் இந்த உலகின் நம்பிக்கை நீங்கள் தான்!” என்கிறார், கல்பனா.
வணக்கம்! “என்னது கடவுளா?! இந்த தேர்தல் அலை வந்தாலும் வந்தது, அவர் படும் பாடு, ரொம்ப பாவம்… விட்டுவிடம்மா!” என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. அட, அந்த மாதிரி எதுவுமே இல்லைங்க! இது ஒரு ஷொட்டு, ஒரு கைத்தட்டு, லேசான குட்டு , அவ்ளோ தாங்க!
என் அருமை தெய்வத் துகள்களே! நேரம் பாய்ச்சி மனிதம் வளர்க்கும் மாமனிதர்களே! உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
“யாருப்பா அவங்க?”ன்னு கேட்பவர்களுக்கு: “வேறு ஒரு மனிதரைப் பேணிப் பாதுகாக்கும் உண்மை மனிதர்கள்”.
உங்களைச் சார்ந்து உங்கள் அம்மாவோ, அப்பாவோ, மாமியாரோ, மாமனாரோ, அக்காவோ, தம்பியோ , பிள்ளையோ, பெண்ணோ இன்னும் என்ன உறவோ, உறவில்லையோ – எவரோ இருக்கிறாரா?இருக்கிறார் எனில், நீங்கள் தான் அது!
காரணம் எதுவாகவும் இருக்கலாம்; மூப்பு, முடியாமை, இன்னும் ஏதோ உடல், மனம் என்று எந்த வகையிலோ நலம் குறைந்தவரின் பொறுப்பை ஏற்றவர், அவரைப் பேணிக் காப்பவர் நீங்கள் என்றால் கண்டிப்பாக, இந்த கலிகாலத்திலும் உலகின் நம்பிக்கை நீங்கள் தான்!
பெரும்பாலும் வலைத்தளங்களில் மட்டுமே காணப்படும் மனிதநேயம், நிஜத்தில் நீங்கள் தான்! கடவுளின் கரங்கள் நீங்கள். மறுபடி ஒரு முறை உங்களுக்கு உளமார்ந்த வணக்கம்.உங்கள் அன்பு போற்றுதலுக்கு உரியது, அரிதானது, மரியாதைக்குரியது.அன்றாடம் அவரவர் வேலையைப் பார்க்கவே பெரும் திண்டாட்டமான காலகட்டம் இது. இதில் இன்னொருவரின் ஒரு முழு நாள் உங்கள் தலையில்!
ஆறிப் போன பல கோப்பை தேநீர்கள், போக முடியாத, தொலைபேசி வழியாக மட்டுமே வாழ்த்திய விழாக்கள் என எத்தனையோ!
இதையும் தாண்டி, என்றைக்கு விடியும் என்றே தெரியாமல், ஆனால் ஒவ்வொரு நாளும் அதே அக்கறையும் அதே நம்பிக்கையும் கொஞ்சம் கூட மாறாமல் சேவையைத் தொடரும் நீங்கள் மனிதத்தின் ஊற்றுக்கள்.
ஆயிரம் பேர் பத்தாயிரம் சொன்னாலும் சந்தேகமே வேண்டாம், கடவுளின் துளி உங்களில் உண்டு. புன்னகை சூட்டிக்கொள்ளுங்கள். பெருமிதத்துடன் தொடருங்கள். கம்பீரமாக நடந்து செல்லுங்கள். உங்கள் பொருட்டே எல்லார்க்கும் மழை!
இந்த மகத்தான மனிதர்களை மனதாலும் உணர்வாலும் நன்கு புரிந்து கொண்டு அனுசரித்துப் போகும் அவர்களின் சுற்றம்.
தினமும் இட்லி போதும் என்று சொல்லும் மகளோ, ‘ரெண்டு மணி நேரம் நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போய்ட்டு வா’, என்று சொல்லும் பக்கத்துக்கு வீட்டு அம்மாவோ, ஏதோ உங்களால் முடிந்த பங்களிப்பைத் தரும் அனைவருமே அருமையான மனிதப் பிறவிகள் தாம்! உங்கள் அன்பு, அவர்களுக்குத் தெம்பு!
பிறருக்காகவே வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு, உங்களால் முடிந்த உதவி செய்வதோடு நில்லாமல், ஆறுதலாய் நாலு வார்த்தை பேசுங்கள். ஒரு சூடான காபி, ஒரு நாள் சமையலில் உதவி, அவர் வீட்டு தேவைகள், தின்பண்டங்கள் என… சின்னச் சின்னதனாலும் கணக்கில் வரும். ஆதரவுக் கரங்களை நீட்டுங்கள்.
விழித்துக் கொள்ளுங்கள். இது யாருக்கு? முதலில் சொன்ன அந்த தெய்வப் பிறவிகளுக்கு. எதுக்கு? நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு? ஒரு நிமிடம்.இந்த நீண்ட நெடிய பயணத்தில் நீங்கள் உங்களைப் புறக்கணித்து விடவில்லையே?
நாளை இந்த நிலைமை நீங்கி விடும் போது உங்களுக்கான வாழ்வை முழு நேரமும் நிறைவோடும் நிம்மதியுடனும் உடல் நலத்துடனும் தொடர நீங்கள் தயாரா?
மேலும் எல்லாவற்றையும் உங்கள் தலை மேலே நீங்களே போட்டுக்கொள்ளாமல், சிந்தித்து செயல் படுங்கள். உதவி கோருங்கள்; கிடைக்கும் பட்சத்தில் மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்!
உங்களைப் பார்த்து பலரும் நல்வழிப்பட வழிவகை செய்யுங்கள். நீங்களும் நன்றாக இருந்தால் தான் பலரும் முன்வருவார்கள். உங்களின் நல்வாழ்வும் நிறைவும் கண்டிப்பாக பலரின் உந்து சக்தி ஆகும்.உங்களைப் பார்த்து, “இவங்கள நான் பாத்துப்பேன், அவங்க ஆறு வருசமா அம்மாவை பாத்துக்கிட்டாங்களே, என்ன கொறஞ்சு போய்ட்டாங்க?” என்று இன்னுமொரு கடவுளின் கரம் தயாராகும்!
நிறைவாக, பார்வையாளர்களாக இருப்பவர்களுக்கு: நாலு விதமாக பேசும் நாலு பேரில் ஒருவராக மாறி விடாதீர்கள்!
“நானா இருந்தா இப்படி பார்த்துக்கொண்டு இருப்பேன்… இவளுக்கு எல்லாம் இது வேணும்! இதெல்லாம் செஞ்சு என்ன ஆக போறது…” என்று ஒருவர் தன்னால் இயன்றதை செய்து, பின்னால் ஏதோ ஒரு சூழலால் ஆரோக்கியமோ, வேலையில் ப்ரோமொஷனோ, நேரமோ இழக்கும்போது, அதை பார்த்து எதையோ பேசுவதற்கு முன், கண்ணாடி முன் நின்று உங்களிடமே நீங்கள் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்போதும் உங்களின் பார்வையில் நீங்கள் சரியென்றால், சரி.இல்லையென்றால் உங்களுக்கும் கடவுளின் கரங்கள் தேவைப்படலாம்! ஜாக்கிரதை!பிறர் நலம் பேணும் பெருங்குணத்தால் மனிதம் வளர்ப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். முடியாவிட்டால், செய்பவரை செய்ய விடுங்கள். அவ்வளவே!
தலையங்கப் பட ஆதாரம்: YouTube | ‘அன்பே சிவம்’ திரைப்படம்
read more...
Please enter your email address