“நீங்க சமைப்பீங்களா?” “இதை ஏன் நீங்க எந்த ஆண்கள் கிட்டையும் கேக்கறதில்ல?”

கனிமொழி அவர்களை ஒருவர், 'நீங்க சமைப்பீங்களா' என்று வினவ, "இதை ஏன் நீங்க ஆண்கள் கிட்ட கேக்கறதில்ல?" என்று புன்னகையுடன் பதில் வந்தது.

சமீபத்தில் கனிமொழி எம்.பி அவர்களை நேர்காணல் கண்ட சகோதரர் ஒருவர், ‘நீங்க சமைப்பீங்களாஎன்று அவரிடம் வினவ, “இதை ஏன் நீங்க எந்த ஆண்கள் கிட்டையும்  கேக்கறதில்ல?” என்று புன்னகையுடன் பதில் வந்தது.

முதலில் ஒரு முக்கியமான விஷயம்! எந்த கட்சியையும் முன்னிலைப் படுத்துவது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. இது  பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதை மட்டுமே எடுத்துச் சொல்லும் சிறு முயற்சி.

அது என்ன கேள்வி? சிவாஜி படத்தில் ஸ்ரேயா வீட்டுக்கு ‘வாக்காள அடையாள அட்டை’ ஆஃபீசர்களாக சூப்பர் ஸ்டாரும் விவேக் அவர்களும் போய் கேட்பார்களே…”சமைக்கத் தெரியுமா? குடல் குழம்பு வைக்கத் தெரியுமா” என்று? அந்த மாதிரி அல்லவா இருக்கிறது!

ஏன் ‘சமைப்பீங்களா’ கேள்வி பரபரப்பாகப் பேசப்படுகிறது?

தேர்தல் மும்முரத்தில் சுழலும் அரசியல்வாதியிடம் கேட்க ஆயிரம் கேள்வி இருக்கிறது. இதே சகோதரர் கனிமொழி அவர்களால் “முன்பு போல் நிறைய வாசிக்க முடிகிறதா, அதற்கு நேரம் இருக்கிறதா” என்றும் கேட்டார். 

அப்படி இருக்கும்போது ஏன் ‘சமைப்பீங்களா’ கேள்வி மட்டும்  பரபரப்பாகப் பேசப்படுகிறது?

ஏனென்றால், இந்தக் கேள்வியின் அடித்தளத்தில் நம் மண்டைகளில் ஊறிப் போன ஒரு விஷயம் இருக்கிறது: ‘பெண் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்’ என்ற ஒரு வட்டம்.
எவ்வளவு நாள் தான் அதற்குள்ளேயே குதிரை ஓட்டுவது? 

சமையல் ஒரு அடிப்படை அறிவு

இது எப்படி இருக்கிறதென்றால், “பெண்ணுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம்” என்று சொல்வது போல்.

“பின்ன..இல்லையா?” என்று உங்கள் மூக்கின் மேல் கோபம் உட்கார்வதற்கு முன் சொல்லிவிடுகிறேன்:

மனித இனத்தில் பிறந்த அனைவருக்குமே ஒழுக்கம் இன்றியமையாதது. ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என்ற பேதம் கடந்த ஒன்று, ஒழுக்கம். 

அப்படித் தான் சமையல் கலையும். அது அடிப்படை அறிவு. உயிர் வாழ உணவு முக்கியமெனில், உணவு சமைக்க அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் – லாஜிக் சரி தானே?

ஆண்கள் சமைப்பது புதுசு இல்லையே!

“பெண்ணுக்கு தான் சமையல் செய்வதற்கான உள்ளுணர்வு இயற்கையிலேயே அதிகம் – அதனால் தான் உங்களுக்கு அந்தப் பணி வகுக்கப் பட்டிருக்கிறது” என்று சொல்வது கேட்கிறது.

ஆனால் எந்த ஆணுக்கும் அந்த உள்ளுணர்வு கிடையாது என்றோ எல்லாப் பெண்களுக்கும் அது அப்படித் தான் இருக்கும் என்றோ அடித்து சொல்ல முடியாது. விதிவிலக்கு என்பது உலக நியதி அல்லவா?

பீம பாகம், நள பாகம் என்று தொன்றுதொட்டு சொல்லிவருகிறோம். ஆக ஆண்கள் சமைப்பது ஒன்றும் புது விஷயம் இல்லையே. ஏன் இப்போ ட்ரெண்ட்-இல் உள்ள நம்ம குக்-வித்-கோமாளி அஷ்வின் இல்லையா? 

இன்னும் செஃப் தாமு, ‘டாடி’ ஆறுமுகம், வெங்கடேஷ் பட் என்று நீளுமே இந்த லிஸ்ட்! அவர்களது சமையலும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்து தானே இருக்கிறது?

இதையும் தாண்டி ஒரு பெண்ணுக்கு, சுய-இயல்பு காரணமாகவோ, சூழ்நிலை காரணமாகவோ சமைக்க முடியாமல் போனாலோ, சமைக்கப் பிடிக்காமல் போனாலோ, அது பெரிய கொலைக் குற்றமில்லை.

பெண்களுக்கு அடுப்படியை தாண்டிய உலகமும் இருக்கிறது. அதையும் பார்க்கலாமே!

பட ஆதாரம்: ‘குக்-வித்-கோமாளி நிகழ்ச்சி’| நன்றி: விஜய் டிவி மற்றும் hotstar

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 68,404 Views
All Categories