தீர்ப்புகள் திருத்தப்படலாம்: பம்பாய் போக்சோ வழக்கு

பம்பாய் போக்சோ வழக்கின் சர்ச்சைக்குரிய தீர்ப்பின் பிண்ணனியில் "பெண்ணை பெரிய பதவியில் அமர்த்தினால் இப்படித் தான்" என்ற பேச்சுகள் ஒழியுமா?

பம்பாய் போக்சோ வழக்கின் சர்ச்சைக்குரிய தீர்ப்பின் பிண்ணனியில் “பெண்ணை பெரிய பதவியில் அமர்த்தினால் இப்படித் தான்” என்ற பேச்சுகள் ஒழியுமா?

கடந்த ஜனவரி மாதம் நாட்டையே உலுக்கிய தீர்ப்பு ஒன்றினை வெளியிட்டது பம்பாய் உயர் நீதிமன்றம்.

“மேனிக்கு மேனி (அதாவது ஸ்கின்-டு-ஸ்கின்) தொடர்பில்லாத பட்சத்தில், 18 வயதின் கீழ் உள்ள பிள்ளையை தகாத நோக்குடன் அத்துமீறித் தொட்டாலும் அதற்கு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கமுடியாது” என்று பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பு அளித்திருந்தார்.

ஆபாசமாக பேசிச் சிறாரை துன்புறுத்தல் மற்றும் நேரடியாக ‘ஸ்கின்-டு-ஸ்கின்’ அதாவது மேனிக்கு மேல் நேரடியாகத் தொடாமல், துணியை விலக்காமல் ஆபாசமாக தீண்டி துன்புறுத்துவது போன்ற சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும் என சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள், சட்ட வல்லுநர்கள் ஆகிய பல தரப்புகளில் இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து எதிர்ப்பு எழுந்தது.

இந்தத் தீர்ப்பு ஒரு மோசமான முன்னுதாரணம்: கே.கே. வேணுகோபால்

நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்து, நீதிபதி புஷ்பா கனேடிவாலாவின்.தீர்ப்பினை திருத்தி அமைக்கக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்தார், அட்டர்னி ஜெனரல் (எ) மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவர்கள்.

அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் அவர்கள்.

இது குறித்து வாதாடுகையில், இந்தத் தீர்ப்பு ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும் அபாயத்தை சுட்டிக் காட்டினார், தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவர்கள்.

இதில் உள்ள உண்மையையும் இந்தத் தீர்ப்பு இனி நிகழப் போகும் இம்மாதிரி குற்றங்களுக்கு ஒரு தவறான மேற்கோளாக அமையும் சூழலையும் கருதி, பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்தது, அதாவது ‘ஸ்டே’ உத்தரவு பிறப்பித்தது, உச்ச நீதிமன்றம்.

இத்துடன் பம்பாய் உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யவும் திரு.கே.கே.வேணுகோபால் அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

தொடர்ந்து அதிர்ச்சியூட்டிய தீர்ப்புகள்

முன்னதாக 2021ஆம் வருடம் ஜனவரி 14, 15 தேதிகளில் அடிப்படையில் இதே போன்று இரு வேறு சிறாரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது சார்ந்த இரண்டு வழக்குகளிலும் பாதிக்கப் பட்டவர் தரப்பில் போதுமான சாட்சியம் இல்லை என்று கூறி, சிறுவர் மீது வன்முறை நிகழ்த்திய இரு வேறு ஆட்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தார் நீதிபதி கனேடிவாலா.

நீதிபதி கனேடிவாலா

ஒரு நீதிபதியாக, இம்மாதிரி தீர்ப்புகளின் பின்விளைவுகள் குறித்தும், பின்னாளில் தவறு செய்பவர்கள் இந்த தீர்ப்புகளையே மேற்கோள் காட்டி தண்டனையில் இருந்து தப்பித்து செல்ல இயலும் என்பது குறித்தும் நீதிபதி கனேடிவாலா யோசிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்தது.

வேலியே பயிரை மேய்ந்தால்..வேலி வெட்டப்படும்

நடந்த சம்பவங்களின் எதிரொலியாக, நீதிபதி கனேடிவாலாவின் பணிக்கால நீட்டிப்பு இரண்டு வருடங்களில் இருந்து ஒரு வருடமாக குறைக்கப் பட்டுள்ளது.

முன்னதாக, நீதிபதி கனேடிவாலாவை பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்றத்தின் காலேஜியம் (Supreme Court Collegium) பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரையும் தற்சமயம் பின்வாங்கப் பட்டுவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

தவறு செய்தவரை ‘பெண்’ என்று சுட்டிக்காட்டாத நிலை வருமா?

பெண்கள் பெரும்பதவி அடைய ஒவ்வொரு கட்டத்திலும் போராடி மேலேறிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த சம்பவத்தின் பின்னணியில் “பெண்ணை பெரிய பதவியில் அமர்த்தினால் இப்படித் தான்” என்ற பேச்சுகளுக்கும் குறைவில்லை.

எந்த ஒரு ஆண் அதிகாரியும் அதிகாரியாகவே பார்க்கப் படுகிறார்; ஆனால் ஒரு பெண் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும், பெண்ணாக மட்டுமே பார்க்கப் பட்டு, “இவள் பெண், இந்த மாதிரி பதவிக்கோ பொறுப்பிற்கோ இவளுக்கு தகுதி இல்லை” என்று மிகச் சுலபமாக சொல்லப்பட்டு விடுகிறது.

ஆணோ, பெண்ணோ, நீதி தவறினால், தான் ஏற்ற அதிகாரத்தை மக்கள் நன்மைக்காக பயன்படுத்தாமல் போனால் அதன் விளைவுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற உலகநியதி பொதுவானது.

இதில் தவறு செய்தவரை ‘பெண்’ என்று யாரும் சுட்டிக்காட்டாத நிலை ஒரு நாள் வரும் என்று நம்புவோமாக.

அத்துடன், இவ்வழியே நம் நாட்டின் நீதித்துறை நடுநிலை தவறாமல், விழிப்புடன் செயல்பட்டு, நம் நாட்டின் இறையாண்மை எல்லா சூழல்களிலும் தொடர்ந்து காப்பாற்றப்படும் என நம்புவோமாக.

வாய்மையும் சமத்துவமும் நீதியும் ஓங்குக.

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 68,395 Views
All Categories