என்று முடியும் இந்த அவலம்? உசிலையில் மீண்டும் பெண் சிசுக்கொலை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நிகழ்ந்த ஏழு நாள் பெண் குழந்தையின் மரணம், சிசுக்கொலை என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நிகழ்ந்த ஏழு நாள் பெண் குழந்தையின் மரணம், சிசுக்கொலை என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முன்னறிவிப்பு/ எச்சரிக்கை: இந்தப் பதிவில் வன்முறை பற்றிய குறிப்புகள் உள்ளன. உங்கள் மனநிலையை இது எந்த வகையிலேனும் பாதிக்குமெனில், இந்தப் பதிவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

உசிலம்பட்டியில் பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று இறந்ததாக அறியப்பட்ட பெண் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்படவே, குழந்தையின் பெற்றோர்களை கைது செய்து காவல் துறை விசாரித்ததில், நடந்தது பெண் சிசுக்கொலை என்று தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனை அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் குழந்தையின் வெறும் வயிற்றில் இருந்து, ஒரு நாளுக்கேனும் குழந்தையை பட்டினி போட்டிருக்கலாம் என்றும், குழந்தையின் முகத்தில் காயங்கள் தென்பட்டதாகவும் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரங்கள் சந்தேகத்தைத் தூண்டவே, முதலில் குழந்தையின் பெற்றோரை கைது செய்த போலீசார், தற்சமயம் குழந்தையின் பாட்டியையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் கண்டறிந்த பின்னணி

குழந்தையின் பெற்றோரான உசிலம்பட்டி கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி – சிவப்பிரியங்கா தம்பதிக்கு ஏற்கனவே 8 வயதில் போலியோ நோயால் பாதிக்கப் பட்ட ஒரு பெண் குழந்தையும் 3 வயதில் முழுமையான பேச்சுத்திறன் இல்லாத ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 10 ஆம் தேதி மூன்றாவதாக பிறந்த குழந்தையும் பெண் குழந்தையாக இருக்கவே, குழந்தையின் தந்தை வழிப் பாட்டியான நாகம்மாள் கோபமும் ஏமாற்றமும் அடைந்ததாக காவல் துறையினரின் விசாரணையில் சுய ஒப்புதல் அளித்துள்ளார்.

குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டாம் என்று மருமகளிடம் நாகம்மாள் கூறியதால், குழந்தை பட்டினியாக விடப்பட்டது என்றும் பசி தாங்காமல் அழுத குழந்தையின் சத்தத்தால் கோபம் உற்ற நாகம்மாள் குழந்தையின் மூச்சை அடக்கி கொன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் அளித்த புகார்

இதைத் தொடர்ந்து, ‘தூங்கிய குழந்தை இன்னும் எழுந்து கொள்ளவில்லை’ என்ற பெயரில் உசிலை அரசு மருத்துவமனைக்கு இரவு 9 மணியளவில் சின்னச்சாமி – சிவப்பிரியங்கா தம்பதி எடுத்துச் சென்றுள்ளனர். குழந்தை ஏற்கனவே இறந்திருந்ததை கண்ட மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள், குழந்தையின் முகத்தில் தென்பட்ட காயங்களை கண்டு சந்தேகமுற்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சின்னச்சாமி – சிவப்பிரியங்கா தம்பதி கைது செய்யப் பட்டனர். முன்னதாக சந்தேகத்திற்கிடமான மரணம் என்று 174 (3) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தார் தற்சமயம் வழக்கை இந்திய தண்டனை சட்டம் (IPC) 302 ஆம் பிரிவின் கீழ் பதிவு செய்ய உள்ளனர்.

‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்’ பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.வனிதா மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் பி.பண்டியராஜா ஆகியோர் விசாரணை நடத்தியதாக அறியப் படுகிறது.

‘தொட்டில் குழந்தை’ திட்டம்

பெண் சிசுக் கொலைகளைத் தடுக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்திய மாற்றுத் திட்டம் தான் ‘தொட்டில் குழந்தை திட்டம்’.

இந்தத் திட்டத்தின் கீழ் பெண் சிசுவை அவர்களது வீட்டார் வேண்டாத பட்சத்தில், குழந்தையை அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் உள்ள தொட்டியில் கிடத்தி அரசின் ஆதரவில் விட்டு விடும் வாய்ப்பு உள்ளது.

காரணங்கள்?

‘தொட்டில் குழந்தை’ திட்டம் போன்ற வாய்ப்பு இருந்தும் மீண்டும் இது போல் பெண் சிசுக்கொலை நடப்பதற்கு வறுமை, அறியாமை, மூர்க்கத்தனம் மட்டும் காரணமல்ல. ‘ஆண் பிள்ளை தான் வாரிசு, பெண் பிள்ளை பாரம்’ என்ற சூழலை ஏற்படுத்தும் ஆணாதிக்கம், வரதட்சணை வழக்கம், பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்முறை, அந்த வன்முறையில் இருந்து பெண்களை காக்க பெற்றோர் மேற்கொள்ள வேண்டிய சிரமங்கள் என மறுக்க முடியாத பல காரணங்கள் உள்ளன.

ஒரு பக்கம் குழந்தையின்மைக்கான சிகிச்சை மையங்கள் பெருகி வரும் மண்ணில் மறுபக்கம் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருவது சொல்லமுடியாத வலியை ஏற்படுத்துகிறது.

‘என்னால் என்ன செய்ய முடியும்’ என்று நடப்பதை மௌன சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருக்காமல், இதை மாற்ற வீடு முதல் வீதி வரை எல்லா நிலைகளிலும் மனமாற்றம் பெற்று இனியேனும் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

பட ஆதாரம்: YouTube

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 68,531 Views
All Categories