Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
பெண்ணை பெண்ணே ஏன் வார்த்தை அம்புகளால் துளைத்துக் கொள்ள வேண்டும்? நாமறிந்த பெண்களுக்கு பாதுகாப்பும், அன்பும், சுதந்திரமும் பெற துணை நிற்போம்!
யாருக்காகவும் நில்லாமல், மாறாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது காலம். இந்த ஓட்டத்தில் எதுவும் இங்கு நிலையில்லை. இதெல்லாம் தெரிந்தும் மாமியார்-மருமகள், ஓரகத்தி, பக்கத்து வீட்டு பெண்மணி என பெண்ணை பெண்ணே ஏன் வார்த்தை அம்புகளால் துளைத்துக் கொள்ள வேண்டும்?
நம் வாழ்க்கை தரம் உயர, போராட வேண்டாம், கூட்டம் போடவேண்டாம். நம் மனதில் “இனி இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும்” என்று ஒரு உறுதி எடுத்துக் கொண்டால் போதும்:
“பெண் ஆகிய நான், இன்னொரு பெண்ணுக்கு பிரச்சனை வரும்போது, அதை என் பிரச்சனையாக நினைத்து அவளை அது எப்படி பாதித்திருக்கும் என்று உணர முற்படுவேன். அவள் என் உதவியை விரும்பும் பட்சத்தில், என்னால் இயன்ற வரையில் அவளுக்கு ஆதரவாக இருப்பேன், துணை செய்வேன்.”
“முடிந்த அளவுக்கு பிறருக்கு நல்லதே செய்வேன். முடியவில்லையா? அமைதியாக இருப்பேன். என்னை நாடினாலே ஒழிய பிறரின் விஷயங்களில் தலையிட மாட்டேன்.”
“எந்த நிலையிலும் எந்த ஒரு பெண்ணின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்க மாட்டேன். ஒற்றுமையே பலம். பெண்கள் ஒன்றுபட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை வேரறுக்க முடியும்.”
எல்லா வயது பெண்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு வருகிறோம். இந்த நிலை மாற ஒவ்வொரு பெண்ணும், ஏதோ ஒரு வழியில் எதிர்கால சந்ததியினருக்கு பெண்ணை சக மனுஷியாக பார்க்கப் பழக்க வேண்டும்.
பெண்ணை ஒரு உடைமையாக, போகப் பொருளாக, சதைப் பிண்டமாக, பிள்ளை பெற்று, வளர்த்து சேவகம் செய்யும் மெஷினாகப் பார்ப்பதை மாற்ற வேண்டும்.
தாய்மை மட்டுமே பெண்ணின் உயர்வான அடையாளம் என்பதை சற்றே தளர்த்தி, பிள்ளைகள் இருந்தாலும் இல்லாவிடினும், கணவன் இருந்தாலும் இல்லாவிடினும், ‘பெண்’ என்பவளுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் உள்ளது என்பதை உணர வேண்டும்.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அண்மையில் மண்ணுலகம் நீங்கி விண்ணுலகம் அடைந்த டாக்டர். V. சாந்தா ஆவார்.
அந்தக் காலத்திலேயே கல்யாணம், குடும்பம் என்று ‘பெண்ணுக்கான அடையாளம்’ என்று சொல்லப் படும் எதுவும் இல்லாமல், சேவைக்கெனவே தன்னை அர்ப்பணித்த மாதரசி அவர். அவரது குடும்பத்தாரும் அவருடைய விருப்பத்தை மதித்து அவரை கட்டாயப் படுத்தாமல் வளர விட்டதால், அந்த நதி பெருகி, எங்கும் ஓடி, எத்தனையோ பேரின் துன்பங்களை துடைத்தது. இதுவும் பெண்ணின் பெருமை தான் என்று சொன்னால், உங்களால் மறுக்க முடியுமா?
முதலில் நம் வீட்டில் நாமறிந்த பெண்களுக்கு பாதுகாப்பும், அன்பும், சுதந்திரமும் பெற துணை நிற்போம்.
“என்ன வயசாகுது! முதலில் கல்யாணம் பண்ணிக்கோ” என்று வற்புறுத்தப்படும் பெண்களுக்கு துணை நில்லுங்கள். அவர்கள் மேல்நாடு சென்று மேல்படிப்பு படிக்கட்டும். வேலையில் தொடர்ந்து பெரும்பதவிகள் அடையட்டும். சாதனைகள் செய்யட்டும்!
“புருஷன் னா அடிப்பான் உதைப்பான். வாயை மூடிக்கொண்டு இரு. உனக்கு ஒரு பொண்ணு இருக்கா. நீ விவாகரத்து பண்ணிட்டு வந்தால், நாளைக்கு அவளை யார் கட்டிப்பா?!” என்று மீண்டும் நரகக் குழிக்குள் தள்ளப் படும் பெண்களுக்கு குறைந்தபட்சம் ஆதரவாக இருங்கள்; அவர்களை புறம் பேசாதீர்கள்.
வருங்காலத்தில் எந்த ஒரு பெண்ணை யாரும் தொடவோ, ஆதாரம் இன்றி அவதூறு பேசவோ தயங்க வேண்டும்.“அவள் பின் ஒரு பெண்கள் படையே இருக்கிறது” என்று அத்துமீற நினைப்பவர் பின்வாங்க வேண்டும்.
ஒன்றுபடுங்கள் கண்மணிகளே! வென்று காட்டுவோம். பெண்ணின் மானம் காப்போம்! தன்மானம் காப்போம்!!
பட ஆதாரம்: Pexels
read more...
Please enter your email address