Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
பெண்ணியம் என்கிற கருத்தியல் போராட்டத்தை வெறும் பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான இயக்கமாக மட்டுமே பார்ப்பது சரியல்ல.
உங்களிடம் இரண்டு கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
1. பெண்ணியம் என்ற சொல்லுக்கு நீங்கள் கொள்ளும் பொருள் என்ன?2. உங்கள் வாழ்வில் பெண்ணியத்தின் இடம் என்ன?
இந்த இரு கேள்விகளை நான் இங்கு கேட்பதற்குக் காரணம், சமீப காலத்தில் பொதுவெளியில் ஆண் நண்பர்களிடம் நான் பெரிதும் எதிர்கொள்ளும் கேள்வி, “பெண்ணியம் குறித்து உங்கள் கருத்து என்ன?” என்பதே ஆகும்.
பெண்களிடம் இந்த கேள்வியை நான் ஏனோ எதிர்கொண்டதே இல்லை. இதற்கு காரணம், பெண்ணியம் என்பது பெண்களுக்கு வாழ்வாதாரம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் அடிப்படையிலானதேயன்றி, ஆண்களைப் போல வெறும் கருத்தியல் ரீதியாக அணுகும் விடயமல்ல என்பதாக இருக்கலாம்.
இவ்வெளிகளில் எழும் மற்றொரு சுவாரஸ்யமான கேள்வி – “நீங்கள் பெண்ணியவாதியா? சமத்துவவாதியா?” இந்தக் கேள்விக்கு எப்போதும் என்னிடம் ஒரே பதில் – குபீர் சிரிப்பு மட்டுமே.
ஏனெனில் இது உண்மையில் “பௌலிங்கா ஃபீல்டிங்கா?” வகையிலான கேள்வி.
பெண்ணியம் என்பதே ஆதிக்கத்திற்கு எதிராக சமத்துவத்தின் அடிப்படையில் தோன்றிய இயக்கம் என்ற புரிதல் மிகவும் அவசியமானது. அதாவது “நண்பன்னாலே நல்லவன் தான்!” வகையறா.
சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதால் பெண்ணியத்தை வெறும் பாலின ரீதியாக நடக்கும் அநீதிகளுக்கு எதிரான இயக்கமாக மட்டுமே பார்ப்பது சரியாகாது.
இன, மொழி, சாதி, மத பேதங்கள், வர்க்கப் பிரிவினை மற்றும் பாலீர்ப்பு சார்ந்த பாகுபாடு ஆகியவற்றின் சாரத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் அநீதிகளுக்கு எதிரான கருத்தியல் போராட்டமாக அணுகுவதே விவேகமானது.
“இதற்கும் பெண்ணியத்திற்கும் என்ன தொடர்பு?” என்ற உங்களது மைண்ட் வாய்ஸ் சத்தமாகவே கேட்கிறது.
இதற்கு பதில் இரண்டு கூறுபாடுகளைக் கொண்டதாகும்.
முதலில் இவ்வனைத்து அநீதிகளுக்கு உள்ளாகும் மக்களில் அதிக பாதிப்பை சந்திப்பவர்கள் பெண்களாகவே உள்ளனர்.
இரண்டாவதாக பெண் சமூகத்தினுள்ளேயே, மேற்கூறிய பிரிவினைவாதங்களால் பாதிக்கப்படும் சிறுபான்மையினரே ஆணாதிக்கத்தால் மிக எளிதாகவும், அதிகமாகவும், நீண்ட காலத்திற்கும் பாதிப்புக்குள்ளாகின்றனர் – பட்ட காலிலேயே படும் என்பார்களே அதுபோல.
இங்கு தந்தை பெரியார் அவர்களின் கூற்றை நினைவுகூற விழைகிறேன்.
“ஆதிக்க சமூகத்தினர்/சாதியினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்/சாதியினரை நடத்தும் விதத்தைக் காட்டிலும், முதலாளிகள் தொழிலாளர்களை நடத்தும் விதத்தைக் காட்டிலும், ஆண்கள் பெண்களை நடத்தும் விதம் மிகவும் மோசமானது.”
இந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த பெண்கள் மற்றும் உழைக்கும் வர்க்க பெண்களின் அவல நிலை என்பது பன்மடங்கு கொடுமையானது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதன் காரணமாகவே பெண்ணியத்தை தனிப்பட்ட போராட்டமாகக் காண்பதை விட இதர பாகுபாடுகளின் வழி அணுகுவதே அர்த்தமுள்ளதாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் அமையும்.
இந்த வாதத்தை வைத்ததன் பிறகு சிலபல நடைமுறை சட்டச் சிக்கல்களுக்கு வருவோம்.
யார் பெண்ணியம் பேச வேண்டும்? யார் பேசக் கூடாது? யார் உண்மையான பெண்ணியவாதி? யார் சோசியல் மீடியா ஃபேக் ஃபெமினிஸ்ட்? போன்ற கேள்விகள் அனைவரின் மண்டைகளையும் JCB போட்டுக் குடைந்து தள்ளும் நிலை நாம் நன்கு அறிந்ததே. என்னிடம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான பதில்களுமில்லை. ஆனால் அன்றாட வாழ்க்கையில் தனிமனித அளவில் பெண்ணியம் பாராட்ட சில வழிகள் உண்டு.
அதாவது சமூக-பொருளாதார-அரசியல் அடுக்குகளில் தனது நிலைப்பாட்டை அறிந்து, அதன்மூலம் சமூகத்தில் தான் அனுபவிக்கும் சலுகைகளை உணர்ந்து அங்கிகரித்தல்.
ஏட்டறிவைத் தாண்டி பெண்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் காண, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள, அவர்களின் போராட்டத்தை ஆக்கிரமிக்காமல், அபகரிக்காமல் இயன்ற அளவில் அவர்களுக்குத் துணைநிற்க முன்வர வேண்டும்.
இப்பதிவின் தொடக்கத்தில் நான் வைத்த கேள்விகளை உள்நோக்கி உங்களை நீங்களே கேட்டுக்கொள்வதன் மூலம் உங்கள் அளவில் உங்களைச் சுற்றியுள்ள பெண்களுக்கு உற்ற துணையாக, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.
முயற்சி செய்வோம். நன்றி.
பட ஆதாரம்: Pexels.com
read more...
Please enter your email address