‘பொறுத்தது போதும்’ என்று எழுகிறது ஒரு அலை!

பெண்ணுக்காக பெண் நிகழ்த்தும் போராட்டங்களை, உலகின் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் கவனிப்பது அவசியம். 'நமக்கென்ன' என்று இருந்தது போதும்.

அநியாயங்களை எதிர்த்து பெண்ணுக்காக பெண் நிகழ்த்தும் போராட்டங்களை, உலகின் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் கவனிப்பது அவசியம். ‘நமக்கென்ன’ என்று இருந்தது போதும்.

ஒரு சங்கடமான கேள்வி:
யாரோ ஒரு ஆண் ஆடை இன்றி நம் முன் வந்தால் நாம் வெட்கி, ‘ச்சீ’ என்று கூறி, கண்களை வேறு திசையில் திருப்பி, அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விடுவோம், சொல்லவொண்ணா அருவருப்பை உணர்வோம் இல்லையா?

அதே போல் தானே ஆணும் நடந்து கொள்ள வேண்டும்? அது தானே நியாயம்? ஆனால் நடைமுறை வேறாக இருக்கிறது. பெண் எந்த நிலையில் சென்றாலும் பாதிக்கப் படுகிறாள், அந்த பெண் குழந்தையாக இருந்தாலும் கூட.

பல தலைமுறைகளாக நிகழும், தொடரும் இந்த சம்பவங்களுக்கு, எந்த ஊரும் விதிவிலக்கு அல்ல!

‘போதும் என்றால் போதும்!’

ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய பேரணியாக, கிட்டத்தட்ட 1,00,000 பெண்கள் ஒன்று திரண்டு, ‘மார்ச்4ஜஸ்டிஸ்’ எனும் ‘நீதிக்கான பேரணி’யை இப்போது நிகழ்த்தி வருகிறார்கள்.

பாலினரீதியான பாகுபாடு மற்றும் வன்முறை (gender based discrimination and violence) ஆகியவற்றை எதிர்த்து எழுந்ததே இந்த பேரணி.

இந்த போராட்ட ஊர்வலத்தின் உச்சகட்டமாக மார்ச் 15, அன்று, பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தின் முன் ஒன்று கூடி ஒரு குரலாகத் திரண்டு வீடு, அலுவலகம், பொது வெளி, இணையம் என அனைத்து தளங்களிலும் பெண்களுக்கு எதிராக நிகழும் பாகுபாட்டினை, வன்முறையை எதிர்த்து, தங்களுக்கான நீதியை கோரி நின்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.

‘இதற்கு மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை மூடி மறைத்து, அந்த பெண்ணையே குறை சொல்லி, அவளையே அவமானப் படுத்தி, தவறு செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை போதும்’ என்று ஒரு மாபெரும் பெண்ணிய அலை எழுந்து நிற்கிறது, ஆஸ்திரேலியாவில்!

எங்கேயோ நடப்பதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும்?

“அங்கே நடப்பதை பற்றி நமக்கென்ன?”
“வளர்ந்த நாடுகளில் உள்ள பெண்களுக்கும் இதே கதி தானா?”
“எங்கேயோ நடப்பதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும்?”
என்று உங்களுக்குள் பல கேள்விகள் எழலாம்.

நினைவில் கொள்ளுங்கள்:
‘மீ டூ’ இயக்கமும் எங்கேயோ தான் தொடங்கியது.

இல்லாவிட்டாலும், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதல்லவா நம் மரபு!

கொரோனா தொற்று விவரங்களுக்காக நாம் உலக நாடுகளை கவனிக்கவில்லையா? இது அதை விட மோசமான நோய் – பெண்களை பலவீனர்களாக பார்க்கும் நோய். இது தொடராமல் இருப்பதை கவனிப்பதும் முக்கியமே!

ஒரே ஒரு அடிப்படை உண்மையை நாம் யாரும் மறக்கவோ மறுக்கவோ கூடாது:
என்ன தான் மாடர்ன்-ஆக உடுத்திக் கொண்டாலும், அங்கிருக்கும் பெண்களும் நம்மைப் போல் தான்.

அவர்களும் நம்மைப் போல் மாதா மாதம் உதிரப்போக்கை கடந்து, உடலை உருக்கி குழந்தைகளை பெற்றெடுத்து, பின் அவர்களின் வளர்ச்சியில் பெரும்பங்கு அளித்து வருபவர்கள் தான்.

அவர்களும் உயிர் உணர்வு உள்ள மனுஷியாக அல்லாமல், கண்களுக்கும், கைகளுக்கும் விருந்து வைக்கும் அவரவர் உடற்பசி, இச்சைக்கு இசையும் பதுமைகளாகவே பார்க்கப் படுகிறார்கள், நம் போலவே சீண்டலுக்கு ஆளாகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் இப்போது பதவியில் அமர்ந்திருக்கும், அதிகாரத்தில் இருக்கும் சிலர் நிகழ்த்தியதாக சொல்லப்படும் பாலியல்ரீதியான சீண்டல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக திரண்டு நிற்கும் பெண்கள் அலை இது. பறந்து விரிந்த ஆஸ்திரேலியாவின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வந்த பெண்கள் இதில் இனைந்து பங்கேற்று வருகின்றனர்.

பெண்ணுக்காக பெண் நின்று தன் குரலை உயர்த்தி சொல்கிறாள்: ‘போதும் என்றால் போதும்’!

எங்கே தான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது?

எவ்வளவு வளர்ந்த நாடாக, தொழில்நுட்ப அறிவியல் ரீதியாக முன்னேறிய சமூகமாக, பொருளாதார ரீதியாக வசதி மிகுந்த சூழலாக இருந்தாலும், பெண்களின் உடல் மட்டும் கேளிக்கைப் பொருளாகவே பார்க்கப்பட்டு கையாளவும் படும் அவலத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. எங்கே தான் பெண்கள் பாதுகாப்பாக, சுதந்திரமாக இருப்பது?

‘போதும், இதற்கு மேலும் இதை பொறுத்துக் கொண்டு மௌனம் சாதிக்க முடியாது’ என்று பெண்கள் வெடித்துக் கிளம்பிய போராட்டமே இந்த பேரணி.

‘போதும் என்றால் போதும்’ (எ) #EnoughisEnough, ‘ என்றும் ‘நீதிக்கான பேரணி’ (எ) #March4Justice என்றும் ஒன்று திரண்டு, எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாமல், பாதிக்கப் பட்ட பெண்களுக்காக ஒட்டுமொத்த மகளிர் சமுதாயமும் கத்தியின்றி ரத்தமின்றி நிகழ்த்தும் இந்த போராட்டம், மிக மிக முக்கியமான ஒன்று என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும்.

அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்!

எவ்வளவு அதிகாரம் உடையவராக இருந்தாலும், சிறியவர், பெரியவர், முதியவர் என்ற எந்த பாகுபாடும் இன்றி, பெண்ணை சீண்டியவன் தான் செய்த குற்றத்திற்கு பொறுப்பேற்று, அதற்கு உரிய விளைவுகளை முழுமையாக அவனே சந்திக்கும் நிலை பிறக்கும்  வரை, உலகமெங்கும் இது போன்ற நிகழ்வுகள் ஒரு ஓரமாக நிகழ்ந்து கொண்டிருக்கட்டும்.

அது வரையில் பெண்கள் வயிற்றில் அல்ல, நமது விழிகளில், உள்ளங்களில் நெருப்பினை ஏற்ற வேண்டும்.

நாட்டில் நடப்பவற்றை, உலக நடப்புகளை என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையினரிடம், குழந்தைகளிடம் இதை எடுத்துச் செல்ல வேண்டும்!

சில மாற்றங்கள் சமூகப் பொறுப்பினால் வரும். சில மாற்றங்கள் புரட்சியால் வரும்.

மாற்றம் எப்படி வந்தாலும், பெண்களின் நிலை உயரும் காலம் முன்னைவிட இப்போது அண்மையில் உள்ளது என்பதையும், சமுத்திரத்தில் ஒரு துளியாக நமக்கும் அதில் பங்கு உள்ளது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

நன்றி: 9நியூஸ், ஆஸ்திரேலியா

பட ஆதாரம்: Pexels.com

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 68,405 Views
All Categories