ஆதரவை நாடும் நண்பருக்கு உதவ உளவியல் ரீதியாக நீங்கள் தயாரா?

உற்றாருடைய கஷ்டத்தை நம் கஷ்டமாக ஏற்று உதவ, உளவியல் ரீதியாக நாம் தயாராக இருக்கிறோமா என்று கவனிப்பது அவசியம் என்கிறார், ஹரிப்ரியா.

‘உற்றாருடைய கஷ்டத்தை நம் கஷ்டமாக ஏற்று உதவ வேண்டும்’ என்று இறங்கும் முன், அதற்கு நாம் உளவியல் ரீதியாக தயாராக இருக்கிறோமா என்று கவனிப்பது அவசியம் என்கிறார், ஹரிப்ரியா.

சமூக ஊடகங்களில், நமது தோழர்/தோழி தனது அனுபவத்தையோ அல்லது அது சார்ந்த பதிவையோ பகிரும் போது நாம் படிக்க நேரிடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

ஏதோ ஒரு வகையில் அந்தப் பதிவு, பதிவிட்ட அந்த நபர் மனரீதியாக நொந்து கொண்டிருப்பதை காட்டும்படியாக நாம் உணர்ந்தோம் என்றால், நம்முடைய மனதில் எழும் முதல் எண்ணம், அவர்களை அணுகி, “எல்லாம் சரியாக இருக்கிறதா” என்று கேட்க வேண்டும் என்பதாகவே இருக்கும். 

இதேபோன்ற மற்றொரு சூழ்நிலையில், ஒரு நண்பர் வாழ்க்கையில் ஒரு சிக்கலான சூழ்நிலையில் சிரமப்படுவதாகவும், அதிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்போதும் அவருக்கு உளரீதியாக நம்பிக்கை அளிக்கும் வகையில் உதவ வேண்டும், அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஒரு ஆறுதலாக இருக்க வேண்டும் என்று நமக்கு தோன்றுவது இயல்பு. 

தீர்வு வழங்கத் தெரியாமல் இருப்பது தவறில்லை

இப்படியாக உளரீதியாக அனுசரணை தேவைப்படும் நம் நண்பருக்கு உதவுவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் நாம் ஆசைப்படுகிறோம். ஆனால் அதை எப்படி செய்வது என்று நம் அனைவருக்கும் எல்லா சமயங்களிலும் சரிவர தெரிகிறதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது இதைத் தான்:
துயரத்தில், சிக்கலில் இருக்கும் ஒரு நண்பருக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் இருப்பது இயல்பான ஒன்று தான் என்பதே. எல்லாக் கேள்விகளுக்கும், எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு தெரியாமல் இருப்பது தவறில்லை என்பதே.

உங்கள் உற்றாருக்கு எல்லா நேரத்திலும் உங்களால் ‘மாரல் சப்போர்ட்’ (moral support) எனப்படும் ‘தார்மீகரீதியான ஆதரவு’ வழங்க முடியாமல் போனால் அதை நினைத்து நீங்கள் வேதனையிலோ குற்ற உணர்விலோ மூழ்கத் தேவை இல்லை.

நம் கப்பலே மூழ்கிக் கொண்டிருக்கும் போது…

இந்த நிலையை நானும் கடந்து வந்திருக்கிறேன். ஒரு கஷ்டமான சூழ்நிலையில் சிக்கித் தவித்த என்னைச் சேர்ந்த ஒருவருக்கு ஆறுதலாக இருக்க முடியாமல் போனதற்காக நான் பலமுறை குற்ற உணர்ச்சியில் குறுகி இருக்கிறேன்.

பின்னர் வாழ்க்கையில் சில உண்மைகள் எனக்கு புலன் ஆகின. 

நானே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் கட்டத்தில், என்னளவில் ஏதேதோ பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கும் தருவாயில், என்னிடம் ஆறுதலை, அனுசரணையை எதிர்பார்க்கும் அந்த உற்றவரிடம், என் நிலைமையை வெளிப்படையாகத் தெரிவிப்பது சரி என்பதை நான் புரிந்துகொண்டேன். 

ஒருவேளை நான் என் உள்ளுணர்வுக்கு எதிராகச் செயல்பட்டு, சொந்தப் பிரச்சனைகளில் உழன்று கொண்டிருக்கும் என்னுடைய அகச்சூழலையும் புறச்சூழலையும் மீறி அவர்களுக்கு உதவ முயற்சித்திருந்தால், நான் ஏதோ ஒரு வகையில் எனது சொந்த பிரச்சனைகளின் தாக்கத்தில், அவர்களுக்கு சமநிலையற்ற தீர்வுகளை மட்டுமே வழங்கியிருப்பேன். நிச்சயமாக அது அவர்களது பிரச்சனைக்கு முழுமையான தீர்வாக அமைந்திருக்காது. 

நம் கப்பலே மூழ்கிக் கொண்டிருக்கும் போது மற்ற கப்பல்களில் மூழ்கிக் கொண்டிருப்பவரை நாம் எப்படி காப்பாற்ற இயலும்?

உளவியல் ரீதியான தீர்வு வழங்கும் திறன் எல்லோருக்கும் அமைவதில்லை

முதலில் இதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்: ஒரு இக்கட்டில் தவித்துக் கொண்டிருக்கும் நம் நண்பருக்கு உதவக் கூடிய சமநிலையோ, முன்-அனுபவமோ, ஞானமோ இயற்கையாகவே நம் அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை என்பது உலகளாவிய உண்மை. 

இன்னும் சொல்லப்போனால், நம்மில் ஒரு சிலருக்கு இன்னொருவருக்கு ஆதரவாக, அனுசரணையாக இருக்கும் தன்மை என்பதே முற்றிலும் இல்லாமலேயே கூடப் போகலாம். இப்படி அமைவதற்கு நாம் வளர்ந்த சூழ்நிலை, நமது வாழ்க்கைப் பயணத்தில் நாம் எதிர்கொண்ட அனுபவங்கள் எனப் பல காரணங்கள் இருக்கலாம். 

இது போன்றவர்களை “இவரும் ஒரு மனிதரா!”, “நீயெல்லாம் ஒரு பெண்ணா” என்று சாடத் தேவையில்லை. அது அவர்களது தவறில்லை; இயல்பு. இயற்கையின் வடிவாக்கம் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அவரவர் படும் பாடு அவரவர்க்கே வெளிச்சம்.

இந்த புரிதல், நம்மை இன்னொரு முக்கியமான உண்மையிடம் இட்டுச் செல்கிறது – நம்முடைய சொந்த உணர்ச்சிகளை புரிந்துகொள்வதன் அவசியமே அது.

நம்முடைய உணர்ச்சிகள் சமநிலையில் சீராக உள்ளதா?

நமது உணர்வுகளும், உணர்ச்சிகளும் நம் அன்றாட செயல்பாடுகள் தொடங்கி நம் ஒட்டுமொத்த வாழ்க்கை வரை அனைத்தின் மீதும் அனுதினமும் பலவித தாக்கங்களை ஏற்படுத்த வல்லது. 

நம்மிடம் உதவி கேட்கும் ஒருவருக்கு நமது ஆதரவான வார்த்தைகளை, அவரது பிரச்சனைக்கான தீர்வினை வழங்க யத்தனிக்கும் முன் நம்முடைய உணர்வுகள், உணர்ச்சிகள் சமநிலையில் சீராக உள்ளதா என்பதை நாம் பார்த்துக் கொள்வது அவசியம். 

இன்னொருவரை ஆதரிப்பதற்கான சிறந்த மனநிலையில் நீங்கள் இல்லை என்றால் அதை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் செயல்படுவது, அவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பில், அக்கறையில் ஏற்பட்ட களங்கம் ஆகாது. 

அவர்களுக்கு உதவும் சூழ்நிலையில் நீங்கள் இல்லை என்ற உண்மையை பகிர்ந்து கொள்ளுங்கள், தவறில்லை.

நண்பருக்கு ஆதரவாக, அன்பை வெளிப்படுத்த…

இதைத் தாண்டி, இம்மாதிரியான தருணங்களில் நமது நண்பருக்கு ஆதரவாக, நம்முடைய அன்பை வெளிப்படுத்த, நாம் இவற்றை செய்யலாம்:

  1. பரஸ்பர நண்பருக்கு அறிமுகம் செய்விக்கலாம்
    உங்கள் நண்பருக்கு ஆறுதல் அளிக்கும் சூழலில் நீங்கள் இல்லாத பட்சத்தில், அவர்களை கனிவோடு ஆதரிக்கக் கூடிய  மற்றொரு பரஸ்பர நண்பருக்கு நீங்கள் அறிமுகம் செய்விக்கலாம். நம்மை விட அந்த பரஸ்பர நண்பர் இன்னும் சிறப்பாக அவருக்கு உதவக் கூடும்.
  2. உங்கள் நண்பருடன் மௌனமாக அமர்ந்து நீங்கள் அவருக்காக உள்ளீர்கள் என்பதை உணர்த்துங்கள்.
    ஒரு பொதுவான இடத்தில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருந்தால், உங்களுடைய நண்பருக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க முடியாவிட்டாலும், நீங்கள் அவருடன் அமர்ந்து ஒரு கப் தேநீரை மௌனமாக பருகலாம். அல்லது இதே போன்ற வேறேதும் செயலை அவரோடு இணைந்து செய்யலாம். இதன் மூலம் நீங்கள் அவருக்காக உள்ளீர்கள் என்பதை உணர்த்துகிறீர்கள். திறந்தவெளியில் செய்யக் கூடிய இது போன்ற அமைதியான செயல்பாடு, உங்கள் உள்ள ஆரோக்கியத்திற்கும் உவந்த ஒன்றாகும்.
  3. உளவியல் நிபுணரைக் காணும்படி பரிந்துரைக்கவும்:
    உங்கள் நண்பரின் சூழ்நிலை கைமீறி போயிருப்பதை நீங்கள் உணர்ந்தால், தயவுசெய்து அவர்களிடம் உளவியல் நிபுணரைப் பார்ப்பது பற்றி பேசுங்கள். ஒரு சிலர் “நான் அதற்குத் தயாராக இல்லை”, “எனக்கு இதெல்லாம் தேவை இல்லை” என்று மறுக்கவும் கூடும். ஆனால் இந்த தீர்வினை அவர்களிடம் நீங்கள் முன்வைப்பது மிகவும் முக்கியமானது. 

உங்கள் சொந்த உள்ளச் சமன்பாட்டினை மீண்டும் நிறுவுதல்: 

உங்களை அணுகும் நபர் நண்பராக இல்லாமல், மிக நெருங்கிய குடும்ப உறுப்பினராக இருந்தால், நம்மால் அவருக்கு ‘நம்முடைய ஆதரவை இல்லை’ என்று சொல்ல முடியாத சூழல் ஏற்படக் கூடும் – வாஸ்தவம் தான். 

இது போன்ற சூழ்நிலைகளை கையாளவே நாம் முடிந்த அளவு, நமது உள்ள வலிமையை மேம்படுத்தும் தியானம், கலைகளில் ஈடுபாடு, உடற்பயிற்சி நடவடிக்கைகள் போன்றவற்றில் அன்றாடம் ஈடுபட வேண்டும். 

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உளவியல் பூர்வமான உதவி

யாரும் உளரீதியாக நொறுங்கிப் போக வேண்டியதில்லை. ஒருவர் உளவியல் பூர்வமான தன் பிரச்சனையை தீர்க்க  உதவி கேட்க முன்வருவது முக்கியமான ஒரு முன்னெடுப்பாகும்.

அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், முறையான, சரியான ஆதரவு மற்றும் உதவி மிகவும் அவசியமானவை. அவர்களுக்கு உதவுங்கள், உதவ முயற்சி செய்யுங்கள் – அதே நேரம்  உங்களது மன ஆரோக்கியத்தையும் சீராகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

ஒரு நண்பருக்கு உளவியல் பூர்வமான ஆதரவை வழங்க விரும்பிய போது உங்களுக்கும் இதே போன்ற அனுபவங்கள் ஏற்பட்டது உண்டா? அதைக் கையாள நீங்கள் பின்பற்றிய வழிகள் யாவை? கருத்துகளில் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

பி.கு: நான் ஒரு மனநல நிபுணர் அல்ல. இங்கே வழங்கப்படும் உதவிக்குறிப்புகள், எனது சொந்த அனுபவத்திலிருந்து நல்ல நோக்கத்துடன் பகிரப்பட்டவையே. இவை மருத்துவரீதியான / தொழில்முறை ரீதியான நிபுணரின் ஆலோசனை அல்ல என்பதை பதிவு செய்கிறேன்.

(பட ஆதாரம்: Pexels)

About the Author

Haripriya Madhavan

Mother of a two year old, with lots of dreams and aspirations for myself and my daughter. Learnt some lessons the hard way in life that have made me who I am today and the read more...

2 Posts | 3,167 Views
All Categories