Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
சுயமரியாதை உணர்வோடு வளரும் பெண் பிள்ளைகள், தனக்குள் இருக்கும் உள்வலிமையையும் சக்தியையும் உணர்ந்து உயர்ந்து காட்டுவர்!
தன்னைத் தான் நேசித்து, சுயமரியாதை உணர்வோடு வளரும் பெண் பிள்ளைகள், தங்களது திறமைகளை பட்டைத்தீட்டிக்கொண்டு, சரியான வழிகாட்டுதல் துணை நிற்க, தனக்குள் இருக்கும் உள்வலிமையையும் சக்தியையும் உணர்ந்து உயர்ந்து காட்டுவர்!
Original in English | மொழி பெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி
குழந்தைப் பருவம் முதலே நம் ஊரில் வளரும் பெண் பிள்ளைகள் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் சிக்கி, ‘இதை மட்டுமே பெண்கள் செய்யலாம்’ என்று வரையறுக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே செய்து வளர்கிறார்கள்.
நான் பள்ளியில் படித்தபோது எங்களுக்கு உடற்பயிற்சி வகுப்பு, அதாவது P.T.E இருந்தது – எங்கள் ஆசிரியரும் எங்களை விளையாட்டு மைதானத்திற்கு அனுப்புவார். ஆண் பிள்ளைகள் கிரிக்கெட் பேட் அல்லது கால்பந்துகளை எடுத்துக் கொண்டு, தங்கள் உடல்பலத்தை, ஆற்றலைப் பறைசாற்ற வீரியத்துடன் விளையாடுவர். பெண்களாகிய நாங்களோ எங்காவது நிழலில் உட்கார்ந்துகொண்டு, வேடிக்கையான ஏதோ சில விளையாட்டுகளை விளையாடுவிட்டு வருவது வழக்கமாக இருந்தது.
எனக்கு ஆண் பிள்ளைகளை பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். கால்பந்து, கிரிக்கெட் என அவர்கள் ஆடும் அத்தனை விளையாட்டுகளையும் நானும் விளையாட விரும்பினேன், அவர்களைப் போலவே போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை சுவைக்க வேண்டும் என்று ஏங்கினேன்.
கிராமப்புறங்களிலும், ஆண் பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும், ஒன்றுகூடி விளையாடி மகிழ்வதை நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். மழைக்காலங்களில் கூட அவர்கள் சேற்று நீரில் புரண்டு கவலையின்றி விளையாடித் திளைப்பதை நான் கண்டேன்.
எல்லா இடங்களிலும் காலங்களிலும் ஒரு ஒற்றுமை இருந்தது – நான் பார்த்த வரையில் விளையாடிய அந்த பிள்ளைகளுள் ஒருவர் கூட பெண்ணில்லை. இப்படி விளையாட்டில் மகிழ்ந்திருக்கும் ஆண் பிள்ளைகளை பார்த்த போதெல்லாம் அவர்களோடு இணைந்து கவலையின்றி சேற்றில் இறங்கி விளையாட வேண்டும், என்று விரும்பினேன் (இப்போதும் கூட அப்படியே தோன்றுகிறது!)
பெண்கள் இயல்பாகவே சுதந்திரமானவர்கள். ஆனால் சூழ்நிலை, சமுதாயம், சமூகக் கட்டமைப்பு என நமது இயற்கை ஆற்றல் முடக்கப்பட்டு, திணறடிக்கப்படுகின்றன. தான் உண்மையில் யார் என்பதை உணரும் வாய்ப்பு மிக அரிதாகவே ஒரு பெண்ணுக்கு கிடைக்கிறது.
பெண்ணிடம் ‘இதை நீ செய்யாலாம் , ‘இதை நீ செய்யக் கூடாது’ என்று சொல்லிச் சொல்லியே நம்மில் பெரும்பாலானோர் நம்மிடம் உள்ள திறனைக் காணத் தவறிவிட்டோம்.
பெண்கள் உயர்ந்த குறிக்கோள்களையும் கனவுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் நம்மில் பலர், நாம் வளர்க்கப்பட்ட விதம் காரணமாக, கனவு காணவே தவறிவிட்டோம்.
பெண்ணை காலாகாலத்தில் ‘செட்டில்’ பண்ணிவிட வேண்டும் என்கிற பந்தயத்தில், நிறைய பெண்கள் தங்களுடைய உண்மையான அடையாளத்தை தொலைத்து விடுகிறார்கள். தங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அரிதான ஒன்றாகிப் போய் விடுவதால், பல பெண்கள் அவர்களை ஒருபோதும் முன்னேற அனுமதிக்காத, அல்லது அவர்களது முயற்சிகளை, கனவுகளை எள்ளி நகையாடி தொடர்ந்து இழிவுபடுத்தும் நபர்களிடமே சிக்கிக் கொள்கின்றனர். ‘காதல்’, ‘திருமணம்’ என்ற பெயரில் அவர்களது சுதந்திரம் பறிபோவதை அவர்கள் பெரும்பாலும் உணர்வதோ அங்கீகரிக்கப்பதோ இல்லை.
இதற்காகவே சொல்கிறேன்: நம்மைப் போலவே, இதே ஆணாதிக்க சமூகத்தில் பிறந்து, கட்டுப்பாட்டுகளுடனே வளர்ந்தாலும், அவற்றை மீறி, வேலிகளைத் தாண்டி வளர்ந்து வெற்றியின் உச்சத்தை எட்டிய பெண்களை முன்மாதிரிகளாகக் கொண்டு நம் பெண் பிள்ளைகளை நாம் வளர்க்க வேண்டும்.
நம் வீட்டுப் பெண்கள், அவர்கள் என்ன ஆக விரும்புகிறார்களோ அதுவாகவே ஆக முடியும் என்பதையும், எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்கிற சாத்தியத்தையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு வரம்பு இல்லை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
பெண் பிள்ளைகளுக்கு அவர்களின் திறமைகளை உணர வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களை, அவர்களது திறமைகளை பட்டைத்தீட்ட, வழிநடத்த சரியான வழிகாட்டுதலும் இருக்க வேண்டும். சூழ்நிலை அமையும் வரை செயலற்ற நிலையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அபரிமிதமான உள்வலிமையும் சக்தியும் இருப்பதாக நான் நம்புகிறேன்!
பெண்களாகிய நாம் நம்முடைய ஆற்றலை, வலிமையை மறந்து விடாமல் நினைவில் கொள்ளுதல் வேண்டும். சந்தர்ப்பவசமாக, நான் என்னையும் என் ஆற்றலையும் மறக்கும்போதெல்லாம், நான் யார் என்பதை எனக்கு நினைவூட்ட என் அம்மா இருக்கிறார்.
இப்படியாக நமக்கு நாமே, ஒருவருக்கொருவர் அவரவருடைய தனி அடையாளத்தையும், திறமைகளையும் நினைவுப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
வாய்ப்புகள் வழங்கப்பட்டு, வெற்றிக்கான தடைகள் நீக்கப்பட்டால், பெண்கள் வளர்ந்து அபரிமிதமான சுய மரியாதை மற்றும் நம்பிக்கையைப் பெறுவார்கள் என்பது சத்தியம்.
முன்பு அறியாமல் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் மற்றும் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்புகளும், போதுமான ஆதரவும் கிடைத்தால், பெண்கள் வெற்றியின் சிகரத்தை அடைவார்கள்.
“தான் யார்” என்பதை உணர்ந்த பெண்கள், ஒருபோதும் திருமணம், காதல் சார்ந்த தவறான முடிவுகளை எடுக்க மாட்டார்கள். மாறாக, சரியான துணையை தேர்வு செய்து, தானும் உயர்ந்து, தன்னுடைய அன்புக்குரியவர்களும் மகிழ்வோடு இருக்கும்படி வாழ்ந்து காட்டுவார்கள்!
பட ஆதாரம்: “அம்மா கணக்கு” திரைப்படம்
read more...
Please enter your email address