பெண்ணே! உன் ‘நட்பு’ நலமா?

"எந்த விஷயத்தை நீங்கள் அதிகமாக மிஸ் செய்கிறீர்கள்?" என்று பெண்களிடம் கேட்டு பாருங்கள். 'நட்பு' என்ற பதில் அதில் அவசியம் இடம்பெறும்!

“உங்கள் ‘சிங்கிள்’ வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த எந்த விஷயத்தை நீங்கள் இப்போது அதிகமாக மிஸ் செய்கிறீர்கள்?” என்று பெண்களிடம் கேட்டு பாருங்கள். ‘நட்பு’ என்ற பதில் அவசியம் அதில் இடம்பெறும்.

சமூக வலைத்தளங்கள், செல்பேசி என்று இப்போது வந்துவிட்டதால் இப்போது மணமான பெண்கள் ஏதோ ஓரளவு ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்கிறார்கள், அவர்களது நட்பு ஏதோ சுமாராக ஜீவித்து இருக்கிறது. அதற்கு முந்தைய தலைமுறை பெண்கள், அதாவது இப்பொழுதைய 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் பள்ளி, கல்லூரி மற்றும் இளமைக்கால சுற்றத்து நட்பு உயிர்ப்புடன் இருக்கிறதா என்றால், பெரும்பாலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எதனால் இப்படி?

ஏன் பெண்கள் ஆத்மார்த்தமான நட்பு கொள்வதில்லையா?
சினிமாவில் சொல்வார்களே ‘நம்ம காதல் உண்மை ன்னா அந்த காதலே நம்மளை சேர்த்து வைக்கும்’ என்று. எவ்வளவு ஆழமாக இருந்தாலும் அந்த லாஜிக் பெண்களின் நட்பில் அடி வாங்குவதற்கு முதல் காரணம் – தூரம்.

இது உறவு-ரீதியான தூரம் இல்லை; பூகோள ரீதியான தூரம். திருமணமாகி, ‘ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி’ என்று கிளம்பிவிடும் பெண்கள், தங்கள் தோழிகளை நெஞ்சிலும், நினைவிலும், ஏதோ இப்போதெல்லாம் செல்பேசியில் எண் பரிமாற்றத்திலும் மட்டுமே சுமந்து செல்கிறார்கள்.

பிறகு நட்பே வாய்ப்பதில்லையா என்று கேட்டால், வாய்க்கும் – கணவரின் நண்பர்கள், கணவரின் நண்பர்களின் மனைவிகள், மற்றும் அவர்கள் குழுவில் உள்ள பெண்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என்று நட்பு விரியும் – நாம் சோஷியல் விலங்குகள் அல்லவா, ஏதோ ஒரு வகையில் நம்மை சுற்றி மனிதர்களை சேர்த்து கொள்வோம்.

ஆனால், இளவயதில், வாழ்க்கையின் மாயைகளில், சவால்களில் பெரிதாக சிக்கிக் கொள்ளாத, அம்மாவிடம் வாங்கிக் கொண்ட மெலிதான வசவுகள் மட்டுமே பெருந்துன்பமாய் தோன்றிய அந்த கள்ளம், கபடம் இல்லாத பருவத்தில், நம்மோடு இணைந்து அரும்பி, குறும்பாய் திரிந்த தோழிகளுக்கு, நட்புக்கு, எதுவும் ஈடாகுமா?
அது அதிகாலை வேளை பனித்துளி போல் பரிசுத்தமானது அல்லவா!

பொறுப்புகள் கூடி மனதை ஆக்கிரமித்துக் கொள்ளும் போது…

பெண்களின் மண்டையில் ஓயாமல் ஆயிரம் விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

‘பிள்ளைகள் சாப்பிட வேண்டுமே, இவருக்கு கழுத்து வலி சரியாகணுமே! போன மாசம் போல் இந்த மாசமும் கேஸ் சிலிண்டர் சீக்கிரம் தீர்ந்து விடுமோ? டெட்லைன் நெருங்கிக் கொண்டே இருக்கிறது, டெஸ்ட் கேஸ் இன்னும் ரெடி ஆகலையே!’

‘கோவிஷீல்ட் போடுவதா, கோவாக்சின் போட்டுக் கொள்வதா? மாமியாரின் தலைவலி இப்போ பரவால்லையா என்று கேட்கணுமே! அம்மாவுக்கு ஃபோன் பண்ணி ஒரு நாளாகி விட்டதே! இவளுக்கு அடுத்த வாரம் தேர்வுக்கான டைம்டேபிள் வந்துவிட்டதா? இவன் ஏன் இவ்வளவு மும்முரமாக மொபைல் கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறான்?’ என்று எவ்வளவோ!

இதற்கு நடுவில், நம் நட்பை தூக்கிக் கொண்டு நம் மூளைக்குள் சொடுக்கி விட, எப்போதோ தோழிகளுடன் சேர்ந்து கேட்ட பாடல்களும், பகிர்ந்து ரசித்த புத்தகங்களும், போய் பார்த்த திரைப்படங்களும், சேர்ந்து ரசித்த நகைச்சுவை காட்சிகளும் மட்டுமே துணை!

“நேற்று இல்லாத மாற்றம் என்னது…” என்று வானொலியோ தொலைக்காட்சியோ ஒரு ஓரமாக சலசலத்து விட்டுப் போக, மனதிற்குள் அந்தப் பாடல் வெளியான தருணம் சதா காலமும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருந்த தோழி ஞாபகத்திற்கு வர மாட்டாளா? ‘ஐ மிஸ் யூ’ என்று ஒரு வாட்ஸாப் மெசேஜ் சிறகு முளைத்து அவள் செல்லுக்கு பறந்து செல்லாதா?

கோவிட் கால கொடை: இணைய-வழி ‘கெட்-டுகெதர்’கள்!

எல்லோரையும் வீட்டிற்குள் கட்டி வைத்து, ‘இது தான் முதன்மை, உனக்கு அன்பானவர்கள் மட்டும் தான்’ என்று பல பேருக்கு புரிய வைத்திருக்கிறது லாக்டவுன் காலம்!

ஏதோ இந்த ‘ஸ்கைப்’ இத்யாதிகள் புண்ணியத்தில், அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்ட தோழியிடம், பல வருஷ காலம் கழித்து உரையாடுகிறார்கள், சிங்கப்பூரில் வாழும் பெண்ணும் கோவையில் வாழும் பெண்ணும்! ஒரு மணி நேர சம்பாஷணையும் சிரிப்பும், சிலிர்ப்புமாக ஓடி விடுகிறது!
‘அம்மா, பசிக்குது மா’ என்ற குரல், மீண்டும் நிஜ உலகத்திற்கு இழுத்துக் கொண்டு போகும் வரை தொடரும் மத்தாப்புப் பேச்சுக்களை, நினைத்து நினைத்தே இன்னொரு வருஷம் ஓட்டி விடுவோம்!

ஆண்-பெண் நட்பு

பெண்ணுக்கும் பெண்ணுக்குமான நட்பே வாழ்க்கை மாறுதலால் இப்படிப் போகும் என்றால், ஆண்-பெண் நட்பென்பது பலருக்கு இல்லாமலே போய் விடுகிறது.

சில லவ் மேரேஜ்களில் கணவன்- மனைவி என இருவருக்கும் பொதுவான நண்பர்கள் இருந்தால் இது பிழைக்கலாம். இல்லா விட்டால் ஆட்டோகிராப் படத்தில் வரும் சேரன்-சினேகா பாட்டை பார்த்து கொண்டு ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்து விட வேண்டியது தான்.

இதையெல்லாம் மீறி உங்கள் நட்பை, நட்பு வட்டத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பீர்கள் ஆனால், நிச்சயம் நீங்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டிய, ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணே!

பட ஆதாரம்: ‘மகளிர் மட்டும்’ (2017) திரைப்படம்

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 68,436 Views
All Categories