வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்

"வடசென்னையை, அங்குள்ள மக்களின் வரலாறை புரிந்து எழுதுவது பெரும் வரம்" என்கிறார், எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்.

“வடசென்னையை, அங்குள்ள மக்களின் வரலாறை அவர்களே சொல்லக் கேட்டு, புரிந்து எழுதுவதும் பேசுவதும் பெரும் வரம்” என்கிறார், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் அவர்கள்.

நிவேதிதா லூயிஸ், தொல்லியல் மற்றும் வரலாறு பற்றி ஆராய்ந்து எழுதி வரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இதழியலாளராக பணிபுரிந்தவர்; முன்னணி இதழ்களில் படைப்புகள் வெளியான பெருமைக்குரியவர்.

இவரது உழைப்பில் உருவான ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’ போன்ற புத்தகங்கள், தமிழ் வரலாறு மற்றும் சமுதாயம் மேல் ஆர்வமுடைய அனைவரும் வாசிக்க வேண்டியவை. அதிலும் இவருடைய சமீபத்திய வெளியீடான ‘வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்‘ நூல், நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒன்று.

வடசென்னை என்றாலே…

சென்னை என்றால் தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த பலருக்கு பலதரப்பட்ட கருத்துகள் உண்டு. சென்னையின் மடியில் வளர்ந்த என்னிடம், ‘ஊரா அது? கலாச்சாரம், தமிழின் சாரம் இல்லாத ஊர் அது’ ; ‘சென்னை பெண் என்றால் வீட்டுக்கு அடங்காது’ என்றெல்லாம் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இந்த வேடிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, சென்னைவாசிகளே ‘வடசென்னை மோசமான ஏரியா’ என்ற ஒரு தவறான கருத்தினை கொண்டுள்ளனர். சரியான புரிதல் இன்றி, வடசென்னை என்றாலே பாதுகாப்பற்ற இடங்கள் என்றும், சற்றே பின்தங்கிய பகுதிகள் என்று வெறும் புரளிகளை வைத்தே பெரும் பிம்பங்கள் அமைத்து சொல்லியும், கேட்டும் வந்துள்ளனர்.

இப்படியான பிம்பங்களை உடைத்து, வடசென்னை என்ற இடத்தின் தன்மையை உள்ளபடி சொல்லி, அங்கு நமக்கு தெரியாமலேயே விட்டுவிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களை, செழித்து வளர்ந்த கலைகளை, அங்கிருக்கும் மக்களின் உள்ளத்தை பேசுகிறது, நிவேதிதா அவர்கள் எழுதிய ‘வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்’ நூல்.

நன்றி: நியூஸ் ஜெ தொலைக்காட்சி

சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் காட்சியில் வெளியான ‘வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்’ நூல் குறித்து அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் சாரம் இங்கே:

வரலாறு, தொல்லியல் குறித்து எழுதும் ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

‘பெண்கள் இதைப் பற்றி தான் எழுதுவார்கள்’ என்ற கருத்து நம் ஊரில் உண்டு. சமையல், குடும்பக் கதைகள் தாண்டியும் பெண்களுக்கு அறிந்து, ஆராய்ந்து எழுதுவதற்கு பல விஷயங்கள் உண்டு என்பதை மக்கள் உணர வேண்டும். முதலில் எழுத்தாளர்களுள் ‘ஆண் எழுத்தாளர்’, ‘பெண் எழுத்தாளர்’ என்ற பேதம் ஒழிய வேண்டும்.

வரலாறும் தொல்லியலும் என்னை என்றுமே ஈர்த்து இருக்கின்றன. மனித சமுதாயம் என்னென்ன படி நிலைகளில் எவ்வாறு வளர்ந்திருக்கிறது என்று அறிந்து கொள்வது எனக்கு ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் அளித்தது. பிற சமூகங்கள், பிற நாகரிகங்கள், உலகளாவிய மாற்றங்கள் பற்றி அறிந்து கொள்ளும்போது நாம் எவ்வளவு குறுகிய வட்டத்தில் சுழல்கிறோம் என்று புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வடசென்னையை குறித்து எழுதும் எண்ணம் எப்படி விளைந்தது?

சென்னைக்கு வந்த புதிதில், ‘சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள்’ என்று சொல்லப்பட்ட இடங்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட ‘மரபு நடைகள்’ (heritage walks) போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வந்திருக்கிறேன்.

வடசென்னை, பூந்தமல்லி போன்ற இடங்களை மையமாகக் கொண்ட இது போன்ற நிகழ்வுகள் ஏன் இல்லை என்ற கேள்வி அப்போது எழுந்தது.

நாம் அறிந்த வரலாறு என்பது, நமக்கு வெள்ளைக்காரர்கள் சொல்லியும் எழுதியும் விட்டுச் சென்றது. ஆனால் இது சாதாரண கடைநிலை மனிதனின் பார்வையில் இருந்து எழுதப்பட்டவை அல்ல என்பதை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும்.

நம் தமிழ் வரலாற்று குறிப்புகள் எவ்வளவு முக்கியமானவை என்று சில நூற்றாண்டு ஐரோப்பியர் எழுதிய வரலாற்று கோணத்தையும், நம் மண்ணின் மைந்தர்கள் எழுதிய கோணத்தையும் ஒப்பிட்டால் தெரியும்.

அப்படி, ஒரு இடத்தின் வரலாற்றை, அங்கே வாழ்ந்த மனிதர்களின் கண்ணோட்டத்தில் இருந்து எழுத வேண்டும் என்று தேடிய பொழுது, அதிகமாய் பேசப்படாத வடசென்னை, அங்கே நான் கண்ட (ஆங்கிலேயர் காலத்து) வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், கலாச்சாரம், மக்களின் வாழ்வியல் என்று என்னை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது.

ஆதிக்கம் செலுத்தாத மக்களின் வரலாறை தேடிப் போனேன். அந்த தேடல், என்னை வடசென்னைக்கு விரல்பிடித்து இட்டுச் சென்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடமென்றால் வடசென்னை தொன்மையானதா?

நூறாண்டுக்கு முந்தைய வாழ்வியலும் தொன்மம் தான், ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய வாழ்வியலும் தொன்மம் தான். நமக்கு படிப்பினையை, முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லும் எல்லா விஷயங்களும் தொன்மங்கள் தான்.

வடசென்னையில் ஆங்கிலேயர் காலத்தில் விட்டுச் சென்ற முக்கியமான சில எல்லை ஸ்தூபிகள் போன்றவை உள்ளன.

அங்கு இன்றளவும் இயங்கி வரும் கல்மண்டபம் மார்க்கெட், 1818 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பெண்களே இங்கு வியாபாரம் செய்கின்றனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த மார்க்கெட் இருக்கும் இடத்தை, ஒரு கட்டத்தில் தனியார் அமைப்பு ஒன்று தன்வயப்படுத்த முயன்றது. அதற்கு எதிராக அங்கே வியாபாரம் செய்து வந்த பெண்கள் ஒன்று திரண்டு, மார்க்கெட்டினை மீட்டு வந்ததாக தெரிகிறது.

நிலத்தை மீட்ட பெண்களின் கதையாய், இது பதியப்பட வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வு. இது போல் பல நிகழ்ச்சிகள், வடசென்னையின் வரலாறை பேசும்.

வடசென்னை குறித்து உங்கள் ஆராய்ச்சிகளில் நீங்கள் அறிந்து கொண்ட சுவாரஸ்யமான விஷயம் ஒன்று?

வடசென்னை என்பது ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை சமூகத்தினர், சாதியினர் வாழும் இடமாகவே பரவலாகப் பேசப் படுகிறது. இது மிகவும் தவறான கருத்து.

உண்மையில் வடசென்னை எல்லா பிரிவுகளையும் சார்ந்த இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லா இன மக்களும் வாழும் இடமாகும். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், பார்சி மக்களின் வழிபாட்டுத்தலமான ‘நெருப்புக் கோயில்’ வடசென்னையில் உள்ள ராயபுரத்தில் உள்ளது என்பது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே பார்சி கோயில், இன்றளவும் பார்சிகள் வழிபட்டு வரும் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் தான்.

‘வடசென்னை பாதுகாப்பில்லாத இடம், அங்கு செல்வது ஆபத்து’ என்பதை பற்றி…

நான் வடசென்னையை பற்றி எழுதும் முயற்சியில் இறங்கிய பொது பலரும் என்னிடம், ‘அந்த ஏரியா அவ்வளவு பாதுகாப்பானது இல்ல’ என்று கூறினார்கள்.

அங்கே போனதும் அது எவ்வளவு மிகையானது, என்று புரிந்து கொண்டேன்.

வடசென்னைவாசிகள் பகட்டு இல்லாதவர்கள். உள்ளதை உள்ளபடி பேசும் மக்கள். யதார்த்தவாதிகள். தன்னை நம்பி, மதித்து அணுகுபவர்களை உயிராய் தாங்கும் தன்மை அவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது.

ஒரு கட்டத்தில், சுலபமாகவே, என்னை அவர்களுள் ஒருவராக அவர்கள் ஏற்றுக் கொண்டு, என்னை அரவணைத்துக் கொண்டனர். ‘அடிக்கடி வா’ என்று உண்மையாக, உரிமையோடு சொல்லும் மக்கள், வடசென்னை மக்கள்.

அவர்களுடைய பண்பாடு அலாதி ஆனது. இதை பற்றி என்னுடைய புத்தகத்தில் சிலாகித்து எழுதி இருக்கிறேன்.

உங்களுடைய மற்ற நூல்களை பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

1850 தொடங்கி 1950 வரையான நூறாண்டு காலத்துக்குள் பிறந்து வாழ்ந்த 45 பெண்களின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பான ‘முதல் பெண்கள்‘, தமிழகத்தின் தொல்லியல் தடங்களை உலகத் தொல்லியல் தடங்களுடன் ஒப்பிட்டு பேசும் ‘ஆதிச்ச நல்லூர் முதல் கீழடி வரை‘, பண்டைய கால வரலாற்றின், பண்பாட்டின் கூறுகளை அறிந்து கொள்ள உதவும் ‘சிந்து சமவெளி நாகரிகம்‘ ஆகிய நூல்களும் நான் எழுதியவையே.

வாய்ப்பும் விருப்பமும் உள்ளவர்கள் இவற்றையும் வாசித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.

‘வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்’ புத்தகம், கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

பட ஆதாரம்: Youtube.com

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 67,788 Views
All Categories