Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
ஊர் என்ன சொல்லும் என்று அஞ்சி பெண்கள் எதிர்கொள்ளும் பல உளவியல் சார்ந்த பிரச்சனைகளை இறுதிநிலை வரை மறைத்து விடுகிறோம்.
ஊர் என்ன சொல்லுமோ என்று அஞ்சியே பெண்கள் எதிர்கொள்ளும் பல உளவியல் சார்ந்த பிரச்சனைகளை, விஷயம் உச்சகட்டத்தை அடையும் வரையில் மறைத்து விடுகிறோம்.
இனிமேலும் இதை கவனிக்காமல் இருக்க முடியாது.
முன் எப்போதும் இல்லாத வகையில் சமீப காலங்களில் பெண்கள் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை அதிகமாக எதிர்கொள்கிறார்கள். இதனால் நெருக்கடியின் விளிம்பில் உள்ள அவர்களுக்கு ஓய்வு, கவனிப்பு மற்றும் அமைதி கொள்ள இடம் மிக அவசியம் ஆகிறது.
Original in English| மொழி பெயர்ப்பு: பிரியா ஜெய்
2014 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 20,000 க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் தங்களின் உயிரை தாங்களே பறித்துக்கொண்டதாக இந்த வகை பிரச்சனை சார்ந்த ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது.
பெரும்பாலும் மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் பாலினத்திற்கு பாலினம் வேறுபடுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண், பெண்ணாக இருப்பதாலேயே குறிப்பிட்ட உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகிறாள் என்பதும் தெரிய வருகிறது.
ஆண்களும் பெண்களும் எதிர்கொள்ளும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளின் வடிவங்கள் வேறுபடுகின்றன. இவ்வகை பிரச்சனைகளை இரு பாலினத்தவரும் கையாளும் விதங்களும் வேறுபடுகின்றன.
பெரும்பாலான பெண்கள் பிரச்சனைகளை உள்வாங்கி (தங்களுக்குள்ளேயே வைத்து கொள்கிறார்கள் (Internalising). ஆண்களில் பலரோ அதை வெளிப்படுத்தி விடுகிறார்கள் (Externalising) என்றும் தெரிய வருகிறது.
இந்திய மனநல நிபுணர்களின் ஆய்வுகளின் படி, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் ஒரு பெண்ணாக இருப்பின் அவர் கைவிடப்படுவது மிகவும் பொதுவான ஒன்று என்று தெரிய வருகிறது.
தேசிய பெண்கள் ஆணையத்தின் 2016 ஆம் ஆண்டின் அறிக்கை, பெரும்பாலான குடும்பங்கள் தங்களுடைய சமூக அந்தஸ்து கருதி, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை விட்டுவிடுகின்றனர் என்று சொல்கிறது.
ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள், வீடுகளில் இடமின்மை, பராமரிப்பாளர்களின் இயலாமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தன்னை தானே தாக்கிவிடுவாரோ, உடன் இருப்பவரை தாக்கிவிடுவாரோ என்று அஞ்சியும், அவர்களின் பாதுகாப்பை கருதியும் குடும்பத்திலிருந்து விலக்கப் படுகிறார்கள் என்பது தெரிய வருகிறது.
2020 ஆம் வரையிலான உலகளாவிய இயலாமைக்கான காரணிகளின் (causes for global disability) பட்டியலில் இரண்டாவதாக இடம்பிடித்த ‘யூனிபோலார் டிப்ரெஷன்’ (unipolar) எனப்படும் மனச்சோர்வு, பெண்களுக்கு ஏற்பட இருமடங்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
வன்முறைகள், மோதல்கள், உள்நாட்டுப் போர்கள், பேரழிவுகள், இடப்பெயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படும் 80% மக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தியாவிலும் இதே நிலை தான்.
மேலும், நம் நாட்டில் திருமணமான பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் சமூக-பொருளாதார சூழ்நிலை, இயற்கையாக ஏற்படும் காரணங்கள், மற்றும் ‘டொமெஸ்டிக் வயலென்ஸ்’ எனப்படும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர்.
இது போன்ற காரணங்களால், பெண்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளில் 41.9% மனச்சோர்வு என்பதாக உள்ளது. ஆண்களுக்கு இதே விகிதம் 29.3% என்பதாக உள்ளது.வயதான காலத்திலும் மனச்சோர்வு மற்றும் முதுமையினால் உந்தப்படும் மறதி (டிமென்ஷியா) நோயால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் ஏற்படும் மனச்சோர்வின் அறிகுறிகள் பொதுவாக இருப்பினும், பெண்களில் மனச்சோர்வு வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலும் பசியின்மை மற்றும் எடை அதிகரிப்பு போன்றவை பெண்களில் தென்படும் மனச்சோர்வின் அறிகுறிகளாக இருக்கின்றன. இதில் எடை அதிகரிப்பு அவர்களின் சுயமதிப்பீட்டை பாதித்து இன்னும் கவலையை அதிகரிக்க செய்து மேலும் மனச்சோர்வடைய வழி செய்து விடுகிறது.
தங்கள் வாழ்நாள் முழுவதும் பூப்படைதல், மாதவிடாய், தாய்மை, குழந்தைப்பேறு, குழந்தையை வளர்ப்பது, வீட்டுப் பெரியவர்களை கவனிப்பது, உடல்நிலை சரியில்லாதவர்களை கவனிக்கும் பொறுப்புகளை பெருமளவில் ஏற்றுக்கொள்வது என பல அழுத்தமான சூழல்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.
இந்தியா போன்ற சமூகங்களில் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலைக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதுடன் பெண்கள் மீது விதிக்கப்படும் பாகுபாடு மற்றும் தடைகளும் அதிகம்.
வசதி வாய்ப்புகள் உடைய, சமூகத்தில் அந்தஸ்துள்ள, மற்றும் மேல்தட்டுக் குடும்பத்து பெண்கள் கூட சமுதாயத்தின் விதிகளால் நெருக்கடிக்கு உள்ளாவதால், பெண்களின் உளவியல் ஆரோக்கியம் சீர்நிலை இழக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
இந்தியன் ஜர்னல் ஆஃப் சைக்காலஜிகல் மெடிசின் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை, “பொதுவாக நம் நாட்டில் ஆண் குடும்பத்திற்கு வளம், வலு சேர்ப்பவனாகவும், பெண் ஒரு பலவீனமாகவும் பார்க்கப் படுகின்றனர். ஆணை எந்த சூழலிலும் அனுசரித்துச் செல்வதிலும், ஆதரவாய் இருப்பதிலும் கர்வம் எடுத்துக் கொள்கின்றனர். பெண்களின் நிலையோ தலைகீழாக இருக்கும். விதவை ஒதுக்கப் படுகிறாள்; விவாகரத்தான பெண் ஓயாத பழிச்சொல்லுக்கு ஆளாகிறாள். திருமணமே வேண்டாம் என்று பெண் இருந்தாலோ, ‘அவளுக்கு என்ன குறையோ’ என்று பேசப்படுகிறாள். திருமணம் ஆன மங்கையரோ, பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் சூழல்கள் ஏராளம்”, என்று சொல்கிறது..
இதற்கிடையில் நம் குடும்பங்களில் ‘பெண்ணின் உள ஆரோக்கியம் பேணுதல்’ என்பது பெரும்பாலும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகிறது. ஆணாதிக்க வழக்கங்களும், பெண்களுக்கென வகுக்கப்பட்ட பாத்திரங்களும் இதை இன்னும் மோசமாக்கி விடுகின்றன.
‘அனைத்தையும் துறந்த தியாகத் தாய்‘, ‘தங்கள் நலனை விடுத்து, பிறருக்காகவே வாழ்பவர்கள்’ போன்ற பிம்பங்கள் பெண்ணுக்கான சுயபராமரிப்பு மற்றும் ஆரோக்கியத்தை பேணும் வாய்ப்புகளில் இருந்து அவளை வெகுதூரம் கொண்டு சென்று விடுகிறது.
இதை உடைத்து, பெண்கள் நம் நலம் பேணுவது தான் அஸ்திவாரம் என்று உணர்ந்து, நாமும் ஆரோக்யத்துடன் வாழ்ந்து நம் அன்பானவர்கள் ஆரோக்கியத்தையும் சீராக வைக்கும் வழிகள் நோக்கி நகர்வோம்!
பட ஆதாரம்: ‘இங்க்லிஷ் விங்க்லிஷ்’ திரைப்படம்
Pooja Priyamvada is an author, columnist, translator, online content & Social Media consultant, and poet. An awarded bi-lingual blogger she is a trained psychological/mental health first aider, mindfulness & grief facilitator, emotional wellness read more...
Please enter your email address