Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
தலித் வரலாற்று மாதமாக அனுசரிக்கப்படும் ஏப்ரல் மாதத்தில், தமிழகத்தில் வேர் கொண்ட மூன்று தலித் பெண் எழுத்தாளர்களை பற்றி அறிந்து கொள்வோம்.
உலகெங்கிலும் பிப்ரவரி மாதம் கறுப்பின வரலாற்று மாதமாக அனுசரிக்கப் படுகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்கக் கூடும். அதே போல், ஏப்ரல் மாதம், தலித் வரலாற்று மாதமாக அனுசரிக்கப் படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆந்திர மாநிலத்தில் பிறந்த சங்கப்பள்ளி அருணா மற்றும் தமிழகத்தில் பிறந்த தேன்மொழி சௌந்தரராஜன் ஆகிய இரு பெண்களின் முயற்சியில் 2013 தொட்டு ஏப்ரல் மாதம், தலித் வரலாற்று மாதமாக அறிவிக்கப்பட்டது.
Original in English|மொழிபெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி
ஏப்ரல் 14 அன்று உதித்த அண்ணல் அம்பேத்கரின் வழியில், சாதீயத்தை மறுத்தும், வரலாற்றில் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட தலித் இன மக்களாக அறியப்பட்டவர்களின் பங்களிப்புகளையும், நடைமுறையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை நினைவு கூர்ந்தும், அதை நீக்கும் வழிகளில் முனைந்து ஈடுபட்டும் வரும் மாதமாக இது இருந்து வருகிறது.
இவ்வழியில், தமிழகத்தில் வேர் கொண்ட மூன்று தலித் பெண் எழுத்தாளர்களை பற்றி அறிந்து கொள்வோம்.
இவரே ‘கருக்கு’ (1992) எனப்படும் மிகப் பிரபலமான புதினத்தை (அ) நாவலை எழுதியவர். ஒரு தலித் பெண்ணாக தன்னுடைய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய ‘கருக்கு’, விமர்சகர்களையும் வாசகர்களையும் ஒருங்கே கவர்ந்தது.
தனது புத்தகத்தின் வாயிலாக தலித் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ள பாமா அவர்கள், சமூகக் கட்டமைப்புகளின் பிற்போக்குத்தனத்தை தன்னுடைய படைப்பின் மூலமாக விமர்சித்ததால் தனது கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
இவரது எழுத்துநடை தனித்துவமானது என்று அறியப்படுகிறது. இந்தப் புதினத்தின் மற்றொரு சிறப்பு, இதில் கதாநாயகனின் பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை என்பதே.
புதுப்பட்டி கிராமத்தில் ஒரு ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த பாமாவின் மூதாதையர்கள் இந்து தலித் இன மக்களாக அறியப்பட்டவர்கள்; சில தலைமுறைகளுக்கு முன் கிறிஸ்தவத்தை தழுவிய குடும்பத்தை சேர்ந்த பாமா அவர்கள், படித்து முடித்து ஏழு ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக பயிற்சி மேற்கொண்டவர். தலித் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளுக்கு என்றே தனிப்பட்ட பயிற்சிக் கூடங்கள் இருந்தன. அதில் பயின்ற பாமா, மோசமான அடிப்படை வசதிகளற்று அங்கு இருந்த நிலையைக் கண்டு மனமாற்றம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் எழுதத் தொடங்கினார்.
ஒரு புதினமாக ‘கருக்கு’ நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ‘சங்கதி’, ‘வன்மம்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளுடன் ‘குசும்புகாரன்’, மற்றும் ‘ஒரு தாத்தாவும் எருமையும்‘ ஆகிய இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார், பாமா.
பெண்ணியவாதி, கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான மீனா கந்தசாமி, கல்லூரியில் படித்தபோது, தன்னைச் சுற்றியுள்ள தலித் பெண்களின் படைப்புகளை மொழிபெயர்க்கத் தொடங்கினார். பெண்ணியம் மற்றும் சாதி சீர்திருத்தத்தை மையமாகக் கொண்டு படைக்கப்படும் இவரது கவிதைகள் மற்றும் எழுத்துக்கள் மிக முக்கிய இலக்கியப் படைப்புகளாக சர்வதேச அளவில் பாராட்டப்படுகின்றன.
இவரது கவிதைத் தொகுப்பான ‘மிஸ் மிலிட்டன்சி‘, சிலப்பதிகார நாயகியான கண்ணகியின் பயணத்தையும், பெண்களின் எல்லையற்ற தைரியதையும் பேசுகிறது.
இத்துடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலித் சமூக சீர்திருத்தவாதி அய்யங்காளி அவர்களின் வாழ்க்கை சரிதையையும் எழுதியுள்ளார் மீனா கந்தசாமி. இவரது மிகப் பிரபலமான படைப்புகளில் ஒன்றான ‘வென் ஐ ஹிட் யூ’ நாவல் (When I Hit You: Or, a Portrait of the Artist as a Young Wife ), ஒரு இளம் பெண் தனது கணவரிடமிருந்து எதிர்கொள்ளும் வன்முறை, அவள் மீது திணிக்கப்படும் வெறுமை, ஆகியவற்றைப் பேசும் அற்புதமான இலக்கியப் படைப்பு ஆகும்.
ஏழ்மை, சாதீயம், மற்றும் வன்முறையையினால் பாதிக்கப்பட்டவர்களின் கதையைப் பேசும் இவரது மற்றொரு தலைசிறந்த படைப்பான ‘ஜிப்ஸி காட்டெஸ்’ (Gypsy Goddess) ‘குறத்தியம்மன்‘ என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
‘அனந்தாயி’ (அ) ‘தி டேமிங் ஆஃப் வுமன்’ நாவலை எழுதிய பழனிமுத்து சிவகாமி (எ) ப. சிவகாமி அவர்கள், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமைந்த கதையில், பெரியண்ணன் கதாபாத்திரத்தின் வாழ்வுடன் பிணைந்திருக்கும் பெண்களையும், ஒரு கிராமத்தின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பிற்கு தொழில்மயமாக்கல் கொண்டு வரும் தவிர்க்க முடியாத மாற்றங்களையும் இந்த படைப்பின் நாயகி, அனந்தாயியின் விழிவழி சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிறந்த ப. சிவகாமி அவர்கள், கல்வி கற்க வெளியூர் சென்று வரலாற்றில் பி.ஏ. மற்றும் எம்.ஏ. பட்டம் பெற்றவர் ஆவார். தன்னுடைய பட்டப்படிப்பு அளித்த நம்பிக்கையுடனும் சுதந்திரத்துடனும் மாட்சிமை பொருந்திய ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று, சுமார் 22 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணியாற்றி விட்டு, தற்போது இந்திய அரசியலில் களமிறங்கி இருக்கிறார்.
1995 முதல் தமிழ் இலக்கிய இதழான ‘புதிய கோடாங்கி’யில் பெருமளவில் பங்களித்து வரும் இவர், ‘குறுக்கு வெட்டு’, ‘இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள’, நாளும் தொடரும்’, ‘கடைசி மாந்தர்’, ‘உடல் அரசியல்’ ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
யதார்த்தத்தை விளக்க புத்தகங்களே சிறந்த வழி. இவர்கள் எழுதிய படைப்புக்களை வாசித்து நாமும் யதார்த்தம் அறிவோமாக.
பட ஆதாரம்: YouTube
read more...
Please enter your email address