தமிழ் எனக்கு தோழி: மனம் திறக்கிறார், ஜானகி சபேஷ்

திரைத்துறை, இசைத்துறை, கார்ப்பரேட் பணி என பல தளங்களில் முத்திரை பதித்த, பன்முகத் திறமை கொண்ட தமிழ் மகள், திருமதி. ஜானகி சபேஷ் பேசுகிறார்!

“இவங்க கில்லி படத்துல விஜய் சார் அம்மாவா வருவாங்க இல்ல?” என்று கேட்கிறீர்களா? உண்மையில் இவர் அதற்கும் மேலே! திரைத்துறை, இசைத்துறை, இலக்கியம், நாடக மேடை, கார்ப்பரேட் பணி என பல தளங்களில் முத்திரை பதித்த, பன்முகத் திறமை கொண்ட தமிழ் மகள், திருமதி ஜானகி சபேஷ் அவர்கள்!

சித்திரைத் திருநாள் சிறப்புப் பேட்டிக்காக விமென்ஸ் வெப் தமிழ் அவரை அணுகிய போது, இன்முகத்தோடு அவர் பகிர்ந்து கொண்ட பதில்களின் சாரம் இங்கே.

திரைத்துறையில் நீங்கள் வெகு பிரபலம். ‘கில்லி’ திரைப்படம் ஒன்றே போதும். அதைத் தாண்டிய ஜானகியை பற்றி சொல்வீர்களா?

நான் இளவயது முதல் கொல்கத்தா, புது தில்லி, பெங்களூரு, மும்பை என பல இடங்களில் வளர்ந்த, வாழ்ந்த தமிழ்ப் பெண்! இப்போது சென்னை வாசி தான். என்றாலும், அந்தந்த இடங்களின் கலாச்சாரமும் மொழி ஆழமும் என்னுள் கலந்துள்ளன. ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்திற்கும் உள்ள அழகினை, உன்னதத்தை அனுபவித்த அதிர்ஷ்டசாலி நான்!

கேட்கவே சுவாரஸ்யமாக உள்ளது. வெவ்வேறு இடங்களில் இருந்தபோதும் இளவயதில் தமிழோடு நீங்கள் கொண்ட உறவு வேரோடி இருந்தது எப்படி என்று பகிர்ந்து கொள்ளுங்களேன்.

இதற்கு முழுமுதல் காரணம், என்னுடைய தாயார் சரசா அவர்கள். தமிழ்நாட்டில் வாழ்ந்த எங்கள் உறவினர்கள் உதவியுடன் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு தமிழ் புத்தகங்களை வாங்கி, சிரமேற்கொண்டு எனக்கு தமிழ் பயிற்றுவித்தவர் என் தாயார். தாய்வழியாகவே தாய்மொழி கற்றவள் நான்!

எங்கள் குடும்பம், சங்கீதத்தில் ஊறிப்போன இசை ரசிகர்களால் நிறைந்தது. எந்தப் பாடலையும், அதன் ‘பாவம்’ (Bavam) எனப் படும் உணர்வுக்கூற்றினை அனுபவிக்காமல் முழுமையாக ரசிக்க இயலாது. தமிழிசைப் பாடல்களை கொண்டாடிய எங்கள் வீட்டில், இதற்காகவே தமிழை நன்கு கற்று, பாடல்களை பொருள் உணர்ந்து கேட்டு ரசிக்கலானேன். நான் தமிழை ஆர்வத்துடன், ரசித்து கற்றுக் கொண்டேன்.

என்னுடைய தாய் எனக்கு தமிழ் கற்பிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை பெரிதும் ஊக்குவித்து ரசித்தவர் என் தந்தையார். அவருடைய ஆர்வமும் எனக்கு பெரிதும் ஊக்கமளித்தது. நான் புது தில்லியில், தில்லி தமிழ் எஜுகேஷன் அஸோஸியேஷன் (Delhi Tamil Education Association) பள்ளியில் பயின்றேன். இப்படியாக எனக்கு வீட்டிலும் பள்ளியிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கப் பட்டது.

தமிழுக்கும் எனக்குமான உறவு பரிணமித்துக் கொண்டே இருக்கிறது. முதலில் தமிழை ஒரு மொழியாக அணுகிய எனக்கு, நாட்கள் செல்லச் செல்ல அதன் நுணுக்கம் பிடிப்பட்டது.

என்னுடைய இன்னொரு ஊன்றுகோல், எனக்கு வாழ்வில் கிடைத்த வரம், என்னுடைய மாமியார் திருமதி. சீதாலக்ஷ்மி அவர்கள். என்னுடைய மாமியார் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தின் பெரும் ரசிகை. எத்தனையோ முறை வாசித்து இருந்தாலும், ஒவ்வொரு முறை பொன்னியின் செல்வனை வாசிக்கும்போதும் முதல் முறை வாசிப்பது போன்றே அதில் ஊன்றிப் போய் விடுவார்.

தமிழ் எழுத்திலக்கியத்தின் மேல் என்னுடைய மாமியார் கொண்ட இந்த ஈடுபாடும் தமிழ் மேல் நான் கொண்ட பற்றினை மேலும் வளர்த்தது!

உங்கள் கண்ணோட்டத்தில் தமிழின் சிறப்பு என்று நீங்கள் உணர்ந்தது எதனை?

பாரதியின் ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்‘ என்ற பாடலை ஆங்கில மொழி பெயர்ப்பில் வாசிப்பதற்கும், நேரடியாகவே தமிழில் வாசிப்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. ஒரு பெரும் சுவை, நான் அதே கவிதையை தமிழில் வாசித்த போது உணர்ந்து பரவசம் ஆனேன். ‘பாரதி, எவ்வளவு உன்னதமான கவி’ என்று சிலிர்த்தேன். தமிழின் தனியழகை உணர்ந்தேன். திருப்பாவை பாடல்களின் வழியாக தமிழின் ஆளுமையைக் கண்டு வியந்தேன்.

நான் என்னுடைய கார்ப்பரேட் பணி, திரைத்துறை வாழ்க்கை, மகளின் பள்ளிக்காலம் என்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நாட்களில், ழுக்கும் எனக்கும் இருந்த உறவு வேறு. இப்பொழுது, வாழ்க்கையும் அதில் நான் கண்ட அனுபவங்களும் ஒரு வித நிதானத்தை கொடையாக அளித்திருக்கின்றன. நிதானத்துடன் கூடிய ரசனை, அலாதியான ஒன்று. இப்பொழுது தமிழை, கவியை, அதன் ஆழத்தை இன்னும் துய்த்து ரசிக்கிறேன்.

இன்று, தமிழ் எனக்கு தோழி. வாசிக்கும் தோறும், பேசும் பொழுதும், சங்கீதத்தில், அதன் ‘பாவ’த்தில் ஆழும் போதும், தமிழ் என்னைத் தன் விரல் பிடித்து, என்னுடைய தாயிடம் நான் தமிழ் கற்ற நாட்களை, என்னுடைய தாயின் கனிவை, ஆளுமையை நினைவூட்டும் தோழியாகி விட்டாள்.

ஆக, தமிழ் என் வாழ்வில் கலந்து, ஒன்றிணைந்த ஒன்றாகி விட்டாள்! இது தான் நான் கண்ட தமிழின் உன்னதம்.

வீடு, அலுவல் பணி, நடிப்பு, கதை சொல்லுதல், சங்கீதம் என பல களங்களில் நீங்கள் உற்சாகத்துடன் இயங்கி வருகிறீர்கள். இவ்வளவையும் நீங்கள் ஆத்மார்த்தமாக செய்வதன் சூட்சுமம் என்ன?

என்னுடைய தாயார் சரசா, எவ்வளவு வேலைகள் இருந்தாலும், ‘இத்தனை தானே?’ என்று புன்முறுவலுடன் அணியத்தையும் முழுமையாக செய்து முடிப்பார். இதை கண்டுணர்ந்து வளர்ந்ததால், நானும் இதையே பின்பற்றுகிறேன். எப்பொழுதாவது நான் சோர்ந்து போனாலும், என்னுடைய கணவர், மகள், சகோதரி என்று யாரேனும் ‘இத்தனை தானே?’ என்று என்னை உற்சாகப்படுத்தி விடுவார்கள்.

என்னுடைய தந்தையார் என்னுடைய தாயாரை கொண்டாடிய மனிதர். அது போலவே என்னுடைய கணவர் சபேஷ் அவர்களும் எனக்கு உறுதுணையாய் என்றும் நிற்கிறார். என்னுடைய குடும்பம் எனக்கு மிகப் பெரிய வரமாய் அமைந்து இருக்கிறது. இதனால் என்னால் எதையும் ரசித்து செய்ய முடிகிறது.

எனது தந்தையார் என்னிடம், “எந்த வாய்ப்பையும் மறுக்காதே. ஒவ்வொரு வாய்ப்பும் உனக்கு அருமையான ஏதோ ஒன்றை கற்றுத் தர வல்லது” என்று கூறி இருக்கிறார்.

உண்மையில் நான் அதை பின்பற்றியே, இன்றளவும் என்னை ஒரு மாணவியாகக் கருதி, என்னுடன் பணி புரிபவர்கள், என்னைச் சுற்றி உள்ள மனிதர்கள் என அனைவரிடம் தினமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொண்டே இருக்கிறேன். ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று நான் நினைப்பதில்லை.

இளைய தலைமுறையினருடன் பணிபுரியும் வாய்ப்புகள் அதிகமாக அமைவதும் ஒரு வரம்! அவர்களிடம் இருந்து நான் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். இதனால் நான் தினமும் புது மனுஷியாக உணர்கிறேன்.

கில்லி திரைப்படத்தில் இருந்து…

நூற்றெண்பது (180) திரைப்படத்தில் நான் நடிகர் சித்தார்த் உடன் பணிபுரியும் வாய்ப்பு அமைந்த போது, “நீங்கள் எவ்வளவு அழகாக தெலுங்கு பேசுகிறீர்கள்” என்று அவரை வியந்தேன். அதற்கு சித்தார்த், “என்னுடைய தொழில் சார்ந்த திறமைகளுள் மொழிகளைக் கற்றறிதலும் முக்கியம் என்பதாலேயே இதை நான் மனமொன்றி செய்கிறேன்” என்று புன்னகையுடன் பதில் அளித்தார். இது எவ்வளவு அழகான, முக்கியமான வாக்கியம்!
கற்றல் தான் எவ்வளவு அவசியமானது!

வாழ்க்கையில் சில அருமையான வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. தில்லியின் புகழ்பெற்ற லேடி ஸ்ரீராம் கல்லூரியிலும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்திலும் படிக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் சங்கர், தரணி, ராஜீவ் மேனன், கமல்ஹாசன், மாதவன், மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், சிமி கரேவால், பி.சி.ஸ்ரீராம் போன்ற திறமையாளர்களுடன் பணிபுரியும் சூழல் அமைந்தது.

என்னுடைய ‘கோல்போ டேல்ஸ்‘ நிறுவனம், ‘கரடி டேல்ஸ்‘, ‘லிட்டில் ட்ரெய்ல்ஸ்‘, ‘தூளிகா புக்ஸ்‘ என்று குழந்தைகளுக்கு கதை சொல்லும் அருமையான மேடைகள் எனக்கு அமைந்தன.

இத்துடன், ‘க்ரியா சக்தி‘ போன்ற அமைப்புகளுடன் இணைந்து நாடக மேடைகளில் என் முத்திரையை படிக்கும் வாய்ப்பு என்று வாழ்க்கை எனக்கு பொன்னான சந்தர்ப்பங்களை வழங்கி வாழ்விக்கிறது. என் நெஞ்சம் நிறைந்த நன்றியுடன் நானும் வாழ்க்கையை ஆரத் தழுவிக் கொள்கிறேன்!

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 67,809 Views
All Categories