Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
'நமது பூமியை மீட்டெடுப்போம்' என்பதே 22 ஏப்ரல் 2021 அன்று அனுசரிக்கப் படும் 51 வது புவி தினத்தின் நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
51 வது ‘புவி தினம்’ எனப்படும் ‘வேர்ல்டு எர்த் டே’ இன்று (22 ஏப்ரல் 2021) அனுசரிக்கப் படுகிறது. ‘நமது பூமியை மீட்டெடுப்போம்’ என்பதே இந்த வருடத்தின் புவி தின நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமியை மீட்டெடுக்க வேண்டும், சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்றவுடன் பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வருவது மரம் நடுதல் தான்.
மரம் நடுதல் என்றதும் உடன் நினைவுக்கு வருபவர், நடிகர் விவேக் தான்.
தன்னுடைய நகைச்சுவையை சமூக மேம்பாட்டிற்காக, சமுதாயத்தில் உள்ள குறைகளை, மூட வழக்கங்களை களைவதற்காக பிரயோகித்த ஒரு மாபெரும் கலைஞன் நம்மிடையே இன்று இல்லை. என்றாலும், அவர் கொடையாய் அளித்த மரக்கன்றுகள் இன்னும் நம்மிடையே அவரது பெயரைச் சொல்லித் தழைத்து வருகின்றன.
இது நமக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். நாம் மண்ணை விட்டு மறைந்த பின் நம் பெயரைச் சொல்ல தாஜ்மஹால் தேவையில்லை. மரங்கள் நட்டால் போதும். அதை நமது அடுத்த தலைமுறையினர் தண்ணீர் விட்டுக் காத்தால் போதும்.
தெரிந்தோ தெரியாமலோ, கொரோனா நமக்கு ஆரோக்கியமே பிரதானம் என்று உணர்த்தி உள்ளது. ‘ஆக்சிஜென் பற்றாக்குறை’ தலைப்புச் செய்தியாகி விட்ட இந்நாளில், சுவாசத்தின் அவசியத்தை பறைசாற்றியுள்ளது. அந்த சுவாசத்தின், உயிர்வளியின் உற்பத்திக் கூடங்கள், மரங்கள் அல்லவா?
பூமியை பேண மக்கள் விழைதல் ஒன்றும் புதியது இல்லையே! இடையில் தான் நாம் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்று பூமியை பின்னுக்குத் தள்ளிவிட்டோமே தவிர, நம் முன்னோர்கள் யாவரும் இயற்கையையே முன்னிறுத்தி வாழ்ந்து வந்துள்ளனர்.
பண்டைய இந்தியர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும், ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த வேவ்வேறு பகுதிகளைச் சார்ந்த பூர்வகுடிகளும் இயற்கையையே வழிபட்டு வந்துள்ளனர். இதன் அடிப்படை காரணம், அவர்கள் மரங்களும் சுற்றுச்சூழலும் மனிதகுலத்தின் வாழ்வுக்கும் மேம்பாட்டிற்கும் இன்றியமையாதவை என்று உணர்ந்ததனால் தான்.
இதன் சூட்சுமத்தை மறந்து விட்டு, வெறும் சடங்குகளை மட்டும் பற்றிக் கொண்டு, மரங்களுக்கு மாலை சாற்றுவது, பால் ஊற்றுவது, புடவை சுத்துவது, திருமணம் செய்வது என்று அனைத்தையும் செய்கிறோம்.
இதைத் தான் தந்தை பெரியார் முதல் நடிகர் விவேக் வரை அத்தனை பெரும் எடுத்துக் கூறி இடித்துரைத்துள்ளனர்.
இயற்கை வழிபாடு என்பது மரம் நடுதல், நீர்நிலைகளைக் காத்தல், பிளாஸ்டிக் (எ) நெகிழிப் பொருட்களைத் தவிர்த்தல் ஆகிய நிலைப்பாடும் செயல்பாடும் சார்ந்தது.
இது ஒன்றும் செய்ய முடியாத விஷயம் இல்லை. உங்களையும் என்னையும் போன்ற சராசரி மக்கள் அனைவரும் செய்யக் கூடியது. அதிலும் வீட்டளவில் பெண்களாகிய நாம் இதை முன்னின்று செய்தால், நம் சந்ததிகளும் இதை உணர்ந்து கடைபிடிப்பது மேலும் உறுதிப்படும்.
இனியேனும் இதை நினைவில் கொண்டு தாய் போல் காக்கும் நிலமடந்தையை, நம் பூமியை மீட்டெடுப்போம்.
பட ஆதாரம்: Pexels.com
read more...
Please enter your email address