Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
"மூடநம்பிக்கைகள் வசப்பட்டு விபரீதமாக ஏதாவது செய்பவர்களிடம் எடுத்துக் கூறி மடமையை தடுத்து நிறுத்த வேண்டும்", என்கிறார் நம் வாசகி ரம்யா.
‘தீர்வு கிடைத்தால் போதும்’ என்று வெள்ளந்தியாக மூடநம்பிக்கைகள் வசப்பட்டு விபரீதமாக ஏதாவது செய்பவர்களிடம் எடுத்துக் கூறுவோம்; மடமையை தடுத்து நிறுத்துவோம், என்று எழுதுகிறார் நம் வாசகி ரம்யா.
பகுத்தறிவு என்றாலே நினைவுக்கு வருபவர் தந்தை பெரியார். மூடவழக்கங்களின் தாக்கத்தால் சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்தும், பெண் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தவர். மக்கள் மனதில் புதைந்திருக்கும் மூடநம்பிக்கையை களைவதற்கு ‘கடவுளே இல்லை’ என்று நூறு ஆண்டுகள் முன்பே தன் கருத்தை பதிவிட்டவர்.
ஆனால் இன்று, அறிவியல்,பொருளாதார, தொழில்நுட்ப ரீதியாக இவ்வளவு முன்னேறியும், உண்மையாகவே மூட நம்பிக்கைகள் அகற்றப்பட்டு விட்டதா?
‘ஆம்’ என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியாது. இன்னும் இது போன்ற நம்பிக்கைகள் நம்மிடையே உலவிக் கொண்டு இருப்பது தான் உண்மை.
சரி. இன்னொரு கேள்வி:‘எந்த மாதிரியான திரைப்படங்களை பார்ப்பீர்கள்?’
இந்த கேள்வியை மக்களிடம் கேட்டால், நிறைய பேர் ‘நகைச்சுவை திரைப்படங்கள்’ என்று பதில் தருவார்கள். காரணம்? நகைச்சுவை என்பது நம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று.
‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’ என்ற பழமொழி உண்மை வாய்ந்ததே.
“என்ன? மூட நம்பிக்கை பற்றி பேசிவிட்டு, இப்போது சம்மந்தம் இல்லாமல் நகைச்சுவைக்கு தாவி விட்டோம்” என்று நீங்கள் கேட்பதற்குள்… இதோ வருகிறேன்.
‘இதனை செய்யாதே’ என்று அதட்டி சொல்வதற்கும், சிறிய புன்னகையோடு சொல்வதற்கும் உள்ள வித்தியாசம், உளவியல் ரீதியாகவும் நடைமுறையிலும் மறுக்க முடியாத ஒன்று.
அந்த காரணத்தினாலே, மக்களால் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைக்கப்படும் நடிகர் திரு. விவேக் அவர்கள் தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் நகைச்சுவையோடு மக்களுக்கு தேவைப்படும் சிறந்த பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களையும் எடுத்துரைத்துள்ளார். இதை விட எளிய முறையில் மக்களை சென்றடைய முடியுமா?
https://www.youtube.com/watch?v=ctw7ED_fX7I&t=5s
அதைத் தான் பல கலைஞர்கள், பலவிதமாக முயன்று கொண்டு இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் அதைப் பார்த்து ரசித்து சிறிது விட்டு, மறுபடியும் அதே மூடநம்பிக்கையை தொடர்ந்து பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம் என்பது தான் சோகம்.
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், ‘காஞ்சனா’ போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வருவதும், வெற்றி அடைவதும் இதற்கு சாட்சி இல்லையா!
ஒரு வேளை நீங்கள், ‘இப்போதெல்லாம் அதெல்லாம் ஒன்றும் கிடையாது. நாமெல்லாம் முன்னேறி விட்டோம்’ என்று சொல்வதற்கு முன், இதையும் பேசுவோம்.
எச்சரிக்கை: துயரமான சம்பவம் ஒன்றைக் குறித்து படிக்க உள்ளீர்கள். இதனால் நீங்கள் உளரீதியான தாக்கத்தை எதிர்கொள்வீர்கள் என்று எண்ணினால், இதற்கு மேல் நீங்கள் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், நம் சமுதாயம் இன்னும் இந்த மூடவழக்கங்களின் பிடியில் தான் உள்ளது என்ற கசப்பான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், தன் தாய் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வந்த பின் பத்தொன்பது வயதான பெண்ணின் உடலில் மாற்றங்கள் தெரிந்ததால், அவளது தந்தை, ‘மகளை பேய் பிடித்திருக்கிறது’ என்று நம்பி பூசாரியிடம் அழைத்து சென்றிருக்கிறார்.
பிறகு மருத்துவமனை சென்ற போது அவளுக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாகவும், அதனாலேயே அந்த அறிகுறிகள் ஏற்பட்டதாகவும் கண்டறியப்பட்டது.
எனினும், இது தெரிந்த பின்னும், சாட்டையால் அடித்தால் காய்ச்சல் சரியாகிவிடும் என்ற மூட நம்பிக்கையால் தன் மகளை திரும்பவும் பூசாரியிடம் அழைத்து சென்றிருக்கிறார், அந்த தந்தை. இதன் விளைவாக, அந்த பெண் இந்த உலகை விட்டே போய்விட்டாள்.
ஒரு வேளை, அவள் தாய் உயிரோடு இருந்திருந்தால் இவ்வாறு நடவாமல் இருந்திருக்குமோ, என்று மனம் வேதனை அடைகிறது.
இது போன்ற மூடவழக்கங்களை நம்பி, ‘தீர்வு கிடைத்தால் போதும்’ என்று வெள்ளந்தியாக எதையும் செய்பவர்களிடம், நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் எடுத்துக் கூறுவோம்.
வார்த்தைகளால் தரும் விழிப்புணர்வு மட்டும் போதாது. இது போன்ற செயல்கள் நம் கண் முன்னால் நடந்தால் உடனடியாக செயலில் இறங்குவோம்.
அந்த சிறு பெண்ணின் நிலையையே எடுத்துக்கொள்வோம்:நோய்வாய்பட்ட பெண்ணிற்கு சிகிச்சை அளிக்காமல் மூட நம்பிக்கைகளின் செயல்முறைகளை பின்பற்றி, அந்த பெண்ணை பறிகொடுத்தது தான் மிச்சம். இதை யாரேனும் ஒருவர் தடுத்திருந்தால், அவள் இன்று பிழைத்திருக்கலாம்.
இது போல் ஏதேனும் அநியாயம் நடந்தால், துணிந்து நாம் காவல் துறை மூலமாகவோ அல்லது மகளிர் நல அமைப்புகள் மூலமாகவோ தடுக்க முனைவோம்.
முயன்றால் சாதிக்க முடியும். பெண் நினைத்தால் சமூகத்தையே மாற்றவும் முடியும். அடுத்த தலைமுறைக்கு இதை முறையாக இளம் வயதிலேயே சொல்லி, புரியவைக்க முடியும்.
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று சொல்கிறார்கள் அல்லவா. நல்லதை ஆக்கி, தீயதை அழிப்போம். பெண்ணிலிருந்தே எல்லாம் துவங்குகிறது என்பதை காட்டுவோம்.
பட ஆதாரம்: YouTube
read more...
Please enter your email address