Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
இயற்கையாகவே பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு நிறைய உண்டு என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்பது உங்களுக்கு தெரியுமா?
‘இயற்கையாகவே பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு நிறைய உண்டு’ என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று உங்களுக்கு தெரியுமா?
பெண்களுக்கு வீட்டிலோ அல்லது பணி இடத்திலோ ஏதேனும் வருத்தம் ஏற்பட்டால் அவர்களால் மனதளவில் அதை தாங்கிக்கொள்ள முடியாது என்பது நிச்சயம் பொதுவான விஷயம்.
ஆனால் இதில் சிறப்பு என்னவென்றால், பாதிக்கப்படும் அந்த நேரம் மட்டும் தான் அதை நினைத்து கலங்குவார்கள். தன்னுடைய சக தோழியிடமோ நம்பிக்கையான உறவுகளிடமோ வெளிப்படையாகப் புலம்பித் தீர்த்து கொள்வார்கள்.
அப்படி புலம்பும் போது உளவியல் ரீதியாக ஒரு மாற்றம் நிகழும். அந்த மாற்றத்தின் விளைவு, கொஞ்ச நேரத்திலேயே, அந்த பெண் தனக்கு நேர்ந்த சோகத்தை ரொம்ப சாதாரணமாக, நகைச்சுவையாக மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு தயார் செய்துவிடும்.
அந்தப் பெண்ணே அறியாமல், அந்த நிகழ்வை விவரிக்கும் போது வேடிக்கையான, காமெடியான வார்த்தைகள் வந்து விழும் – ஏன், நீங்களே ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள், கண்டிப்பாக இது போன்ற நிகழ்வினை நாம் தினந்தோறும் கடந்து வந்திருக்கிறோம் என்று உணர்வீர்கள்!
இதனால் தானோ என்னவோ வீட்டில் என்ன நடந்தாலும் அதை தன்னுடைய புத்திசாலித்தனத்தால் நகைச்சுவையாக மாற்றும் வல்லமை கொண்டு குடும்பத்தை நோகாமல் காக்கிறாள் பெண்!
பெண்களுக்கு பேசுவது மிகவும் பிடித்தமான விஷயம். அவர்களுடைய இயற்கையான நகைச்சுவை உணர்வும் அவர்களது அந்த பேச்சின் மூலம் இயல்பாகவே வெளிப்படும்!
அனைவரும் நகைச்சுவை உணர்வினை விரும்புவதாகக் கூறினாலும், பெண்கள் மற்றும் ஆண்களின் அணுகுமுறை மற்றும் ரசிக்கும் தன்மை சிறிய நுணுக்கங்களுடன் மாறுபட்டதாக உள்ளது.
பெண்கள், பெரும்பாலும் தன்னை சிரிக்க வைக்கும் ஒருவரை, அவரது நகைச்சுவையை ரசிக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில், ‘The one who makes me laugh’ என்று சொல்கிறார்கள்.
ஆண்களோ, அவர்களது நகைச்சுவைக்கு, ‘ஜோக்’குகளுக்கு சிரிப்பவரையே பெரிதும் விரும்புகிறார்கள். இதை ஆங்கிலத்தில், ‘The one who laughs at my jokes’ என்று சொல்கிறார்கள்.
பல ஆண்கள், ‘பெண்கள் தங்களது நகைச்சுவை உணர்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறுவது உண்டு.இதன் உள்ளார்ந்த அர்த்தம், “நான் சொல்லும் ‘ஜோக்’குக்கு சிரிக்க மாட்டேன் என்கிறாய் – அப்படியானால் உனக்கு நகைச்சுவை உணர்வு கம்மி தான். அதை கொஞ்சம் வளர்த்துக் கொள்ளேன்”, என்பது தான்!
நம்மில் சிலர் அலுவலகத்தில் ‘பாஸ்’ சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கும் சிரிப்போம், எதற்கும் சிரித்து வைப்போம் என்று. இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு என்றும் விளங்குகிறது!
ஆண்கள் அவர்களுடைய நகைச்சுவையை பிறரை ஈர்க்கும் உத்தியாக பிரயோகப்படுத்துகிறார்கள்.
பெண்களோ அவர்களுடைய நகைச்சுவையை வாழ்வின், யதார்த்தத்தின் தாக்கத்தை, கசப்பைக் குறைத்து ஈடு செய்யும் ஒரு மருத்துவம் போல் உபயோகப் படுத்துகிறார்கள்.
ஆண்கள் அவர்களுடைய நகைச்சுவையை தயக்கமின்றி எவர் முன்னிலையிலும் வெளிப்படுத்துவார்கள். பெண்களோ, பெரும்பாலும் தங்களுக்கு நெருங்கிய வட்டங்களில் மட்டுமே தனக்கு தான் இட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, இயல்பாக நகைச்சுவையை வெளிப்படுத்துவார்கள்.
இதற்கான உணர்வு மற்றும் அறிவு பெண்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது என்பதை உளவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களான பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் கேத்தரின் கோஹன், மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தாமஸ் பிராட்பரி திருமணங்களை குறித்து ஆராய்ந்தபோது, சில குறிப்பிடத்தக்க விஷயங்களை கண்டறிந்தனர்.
“ஒரு உறவு உருவாகுவதற்கும், மேலும் பலப்படுவதற்கும் காதலையும், காமத்தையும் மீறி நகைச்சுவை மிகப்பெரும் காரணியாகும். ஒரு குடும்பத்தில் தம்பதியினர் இடையில், மனைவிக்கு,(பெண்களுக்கு) நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும் பட்சத்தில் உறவுகள் நீண்ட காலம் உயிர்ப்புடன் இருப்பதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது” என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
“அதே சமயம், பெண்களின் உறவுகளை காப்பாற்றும் இந்த ஆற்றலை கணவன்மார்கள்(ஆண்கள்) ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். அது மட்டும் இல்லாமல் ஆண்களின் நகைச்சுவை, பல தருணங்களில் உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும்” என்றும் கண்டறிந்தனர்.
“வேலை இழப்பு அல்லது குடும்பத்தில் ஒரு மரணம் போன்ற அழுத்தமான சூழ்நிலைகளில் கணவர்கள், அவரவர்களது மனைவியிடம் நகைச்சுவையை கையாளும் விதம் அந்த பெண்களுடைய மனதை வேதனைப் படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது” என்றும் இந்த ஆய்வில் கூறியுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலைகளில் பெண்கள் விவாகரத்து மற்றும் பிரிவினை நாடுவதாகவும் அறியப்பட்டது. மன அழுத்தம் மேலிடும் சூழலில் ஆண்கள் வெளிப்படுத்தும் குரூரமான நகைச்சுவையின் விளைவாக இது இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகித்துள்ளனர்.
“ஆக, ஆண்களின் நகைச்சுவை கவனத்தை ஈர்க்கும், உறவு உருவாக வழியமைக்கும் ஒன்றாக பரிணமித்துள்ளது; அதே நேரத்தில் பெண்களின் நகைச்சுவை உறவுகளை பராமரிக்கும் ஒன்றாக பரிணமித்துள்ளது” என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
இன்றளவும் அலுவலகத்தில் வேடிக்கைக்கும் கேலிப் பேச்சுக்கும் பஞ்சம் இருக்காது. வேலைப் பளு தெரியாமல் இருக்க இது ஒரு சிறந்த வழி!
ஆனால் இதிலும் பாலினரீதியாக பாகுபடுத்தும் சமூகத்தில் தான் நாம் இருக்கிறோம்.
நிர்வாகிகள், நல்ல நகைச்சுவை உணர்வை கொண்டிருப்பது தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியமானது என்று கருதப் படுகிறது. பெரும்பாலான அலுவலகங்களில் வேடிக்கையானவர்கள் என்று கருதப்படும் ஊழியர்கள் ஆண்களாகவும் இருந்தால், ‘மதிப்பு மிக்கவர்கள்’ என்று அறியப்படுகிறார்கள். இதுவே வேடிக்கையானவர்கள் பெண்களாக இருப்பின் அதே அங்கீகாரம் கிடைப்பது கடினம் என்றும் அறியப்படுகிறது.
நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஆண், யாராவது பெண்ணை கிண்டல் செய்து தன்னுடைய ‘டீம் மெம்பெர்’களை சிரிக்க வைக்கலாம். ஆனால் எவ்வளவு உயர்ந்த அதிகாரியாக பெண் இருந்தாலும் அவர் ஒரு ஆணை கிண்டல் செய்வது இன்று வரையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆக மொத்தம் வீடோ, அலுவலகமோ, பெண்ணின் நகைச்சுவை உணர்வை ஆண்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொள்வது கடினம் தான். ஆனால், குறைந்தபட்சமாக குரூரமான நகைச்சுவையை பெண்கள் மீது திணிக்கக் கூடாது என்று உணர்வார்களா?
காத்திருப்போம்!
பட ஆதாரம்: ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம்
read more...
Please enter your email address