Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
'தமிழ் என்பது மொழி மட்டும் அல்ல; வீரம், விவேகம், அன்பு, ஆகியவையும் சேர்ந்ததே தமிழின், தமிழச்சியின் பெருமை' என்கிறார், நம் வாசகி ரம்யா.
தமிழ் என்ற சொல்லுக்கு பின்னால் இருப்பது ஒரு மொழி மட்டும் அல்ல. வீரம், விவேகம், அன்பு, என பலவாறான சக்திகளை உள்ளடக்கி வைத்திருப்பது தமிழின், தமிழச்சியின் பெருமை.
அதில் முக்கிய பங்கு வகிப்பது விவேகமும் வீரமும். நாம் எல்லாரும் சிறு வயதில் இந்த கதையை படித்திருப்போம்.
அழகிய ஒரு கிராமத்தில், திடீரென ஒரு புலி வயல்களின் வழியே புகுந்து குடியிருப்பு பகுதிகளில் ஊடுருவியது. அப்பொழுது அங்கு விளையாடி கொண்டிருக்கும் ஒரு குழந்தையை அந்தப் புலி குறிவைத்து தாக்க முற்பட்டபோது அந்தக் குழந்தையின் தாய் அங்கு விரைந்து சென்று கையில் இருக்கும் முறத்தால் அதனை விரட்டி அடித்தாள்!
புலி என்று அஞ்சி நடுங்காமல் தன் குழந்தையை காக்க கடுமையான அந்தப் புலியை எதிர்கொண்டாள், அந்தத் தாய். கையில் கூர்மையான ஆயுதம் எதுவுமே இல்லாமல் கிடைத்த முறத்தை வைத்தே புலியை ஓட வைத்தாள். அவளே வீரத் தமிழச்சி!
அந்தத் தாய் மட்டுமின்றி, வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை நீள்கிறது தமிழச்சிகளின் வீர சரித்திரம் பேசும் இந்தப் பட்டியல்!
உலகின் பல மூலைகளில் பரவிக் கிடைக்கும் தமிழர்களுள், நம் மண்ணை விட்டுப் பிரிந்தாலும் பிரியாத ஒன்றாக இந்த வீரமும் விவேகமும் உயிர்ப்புடன் இருப்பதால் தான், டார்வின் சொல்லியது போல், தமிழர்கள் எல்லா இடங்களிலும் தகுதியுடன் தப்பிப் பிழைக்கிறோம்.
‘நமக்குள் விவேகமும் வீரமும் இருக்கிறது. ஆனால் செயலில் காட்டுவதற்கு அந்நாள் போல் இந்நாட்களில் புலிகள் நம் இருப்பிடங்களுக்கு வருவதில்லை’ என்று கூறுகிறீர்களா?
உண்மையான புலிகள் வருவதில்லை. ஆனால் பசுத்தோல் போர்த்திய புலிகள் நம்மிடையே உலவிக் கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை. தினமும் நாம் அவைகளை சந்திக்கின்றோம். அவைகளின் உண்மையான சுயரூபம் எளிதில் தெரிவதில்லை.
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில், அதிக வலி தருவது சிறு பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள். இதில் வருந்தத்தக்க இன்னொரு தகவல் என்னவெனில், இந்த வகையான சீண்டலில் ஆண்,பெண் என்று குழந்தைகளுள் பேதம் பார்ப்பதில்லை என்பதே!
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, பெரும்பாலும், குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர், அந்தக் குழந்தைக்கு தெரிந்தவராகவே இருக்கிறார்.
அந்த நபர் வீட்டில் ஏதாவது வேலை செய்பவராக இருக்கலாம். நம் அடுக்குமாடி குடியிருப்புகளில் எதோ ஒரு வீட்டில் தங்கி இருக்கலாம். ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் இது போன்ற நபர்களால் நடக்கக் கூடாத செயல்கள் நடந்து விடுகின்றன.
‘இதோ என் கண் முன்னே தானே விளையாடி கொண்டிருக்கிறாள்’ என்று தாய்மார்கள் வீட்டு வேலைகளை செய்தபடியே கீழே மற்ற குழந்தைகளோடு இருக்கும் தன் பிள்ளைகளை மாடியில் இருந்து ஒரு கண் பார்த்து கொள்கின்றனர். ஆனால் அந்த நேரம் பார்த்து, இந்த நபர்கள் குழந்தைகளை அணுகுகின்றனர்.
‘அட! இந்த அங்கிள் எனக்கு தெரியுமே’ என்று குழந்தைகளும் அவர்களோடு செல்கின்றனர். அதுவே பூகம்பத்திற்கான முதல் படி.
சரி, இதற்கு தீர்வு தான் என்ன? அது தாயுள்ளம் கொண்ட தமிழச்சிகளின் பதறாமல் விரைந்து சிந்தித்து செயல்படும் விவேகத்தில் உள்ளது!
நம் குழந்தைகள் என்று மட்டும் பார்க்காமல், பொது இடங்களிலோ, நம் குடியிப்புகளிலோ சந்திக்கும் குழந்தைகளை சந்தேகப்படும் படியான நபர்களோடு பார்க்கும் பொழுது, உடனே சென்று விவரங்களை விசாரிப்பது சிறந்ததொரு செயல். இதனால் அந்த நபர் பயந்து அங்கிருந்து செல்லக்கூடும். அந்த குழந்தையிடம் அதனின் பெற்றோரை காட்டும் படி கேட்போம். அவர்கள் அங்கு வரும் வரை துணையாக நிற்போம்.
நாம் சந்திக்கும் குழந்தைகளிடம், ரொம்பவும் பதற வைக்காமல், பயமுறுத்தாமல், கனிவோடு, இது போன்ற நபர்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
அந்த நபர்கள் தெரிந்தவர்களாகவே இருந்தாலும் அவர்களோடு தனியே எங்கும் செல்லக் கூடாது என்றும், அவர்கள் வற்புறுத்தினால், உடனே விரைந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்கும் படி எடுத்துரைப்போம்.
மிக முக்கியமாக, பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் சமயோசிதத்தையும் தற்காப்புக் கலைகளையும் கற்றுக் கொடுப்பது அவசியம். எந்த ஒரு ஆபத்தில் இருந்தும் பெண் தன்னை காத்துக்கொள்ள இந்த கலைகள் உதவும்.
வீரம் விளைந்த இந்த மண்ணில் பிறந்த நாம் அனைவரும், இந்த வஞ்சம் நிறைந்த மிருகங்களை, விவேகம் என்னும் ஆயுதம் கொண்டு ஒன்று திரண்டு விரட்டி அடிப்போம்.
எந்த ஒரு மிருகமும் தனியே இருக்கும் குழந்தையிடம் நெருங்கவே அஞ்ச வேண்டும். அந்த நிலை வர வேண்டும். இப்படியாக புத்தியைத் தீட்டி, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் இப் போரில் வென்று ‘நாம் வீரத் தமிழச்சி’ என்று தலை நிமிர்ந்து நிற்போம்.
பட ஆதாரம்: YouTube
read more...
Please enter your email address