Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
நாட்டில் நிலவும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளை வீட்டளவில், எளிய முறையில் நிறைவாக கொண்டாடுவோம்.
நாட்டில் நிலவும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளை, நம் வீட்டளவில், அதிக மக்களை அழைக்காமல் எளிய முறையில் நிறைவாகக் கொண்டாடுவோம்.
‘ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறாள்?’
இந்த கேள்விக்கு பலவாறான விடைகள் உண்டு என்ற போதிலும், நம் சமுதாயத்தில் பெருமளவில் இதற்கான பதில், ‘ஒரு பெண் தாயாகும் பொழுதுதான் முழுமை அடைகிறாள்’ என்பது தான்.
இது சரியான பதில் என்று கூறிவிட இயலாது. அன்னை தெரசா, அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் இணையற்ற சேவை புரிந்த டாக்டர்.வி.சாந்தா போன்றவர்கள் திருமணமே செய்து கொள்ளவில்லை. அவர்களை முழுமை அடையாதவர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயம் இல்லை. அதனால் இது மட்டுமே பெண்ணின் அடையாளம் என்று குறுக்குவது நியாயமல்ல.
என்றாலும், தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒன்று. ஒரு உயிரை வயிற்றில் சுமந்து, பிரசவித்து, பாலூட்டி வளர்க்கும் அமைப்பு பெண்ணுக்கு இயற்கை வழங்கிய ஒன்று. ஒரு குழந்தை பிறக்கும் போது இந்த உலகத்தில் ஒரு தாயும் பிறக்கிறாள் என்பது உண்மையே.
இப்படியாக, தன வயிற்றில் வளரும் குழந்தையின் முதல் துடிப்பை உணரும் தருணம் தொட்டு தாய்மை என்ற நெடு தூர பயணம் தொடங்குகிறது. கருவுற்ற பெண்ணுக்குள் தான் அவளை அறியாமலேயே எத்தனை எத்தனை மாற்றங்கள்!
“எனக்கு முதல் மூணு மாசம் எதுவுமே சாப்பிட பிடிக்கல.”
“அச்சோ! எனக்கு வெளிய போகவே பயமா இருக்கும். ரொம்ப தலை சுற்றல் இருந்துச்சு.”
“அப்படி எதுவுமே எனக்கில்லை. முழு நேரமும் அதிகமாத்தான் சாப்பிட்டேன்.”
கருவுற்ற பெண்களுள் ஒருவர் போல் மற்றவர் இல்லை. அதே போல் தான் உள்ளே நிகழும் கர்ப்ப கால மாற்றங்களும். எது, எப்படி இருக்கப் போகிறது என்று நூறு சதவீதம் சரியாக யாராலும் ஊகிக்க முடியாது.
இப்படியாக மகிழ்ச்சி, சோர்வு, உடல்நிலை மாற்றங்கள் என்று பல மாறுதல்களை எதிர்கொள்ளும் நிலையில், நாட்கள் செல்லச் செல்ல, கருவுற்ற பெண்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் வளைகாப்பு விழாவும் நடைபெறும்!
இரண்டு கைகள் நிரம்ப கண்ணாடி வளையல்கள் எழுப்பும் அந்த ஒலி கருவை சுமக்கும் அந்தப் பெண்ணுக்கு மட்டும் இன்றி அவளுக்குள் அரும்பி வளரும் குழந்தைக்கும் கேட்பதால், அந்த விசேஷம் அலாதியானது.
இந்த வளைகாப்பு வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளித்து, சிசுவின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் ஊக்கம் அளிப்பதாக சொல்லப்படுகிறது.
பொதுவாகவே, முதல்முறையாகக் கருவுற்றவர்களுக்கு 5 ஆம் மாதம், 7ஆம் மாதம், 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் அவரவர் குடும்ப வழக்கப்படி இந்த வளைகாப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது. சிலர் எளிமையாக வீட்டிலும், சிலர் பிரம்மாண்டமாக மண்டபத்திலும் நடத்துவது உண்டு.
ஆனால் இப்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், இது போன்ற முக்கிய நிகழ்வுகள் வீட்டிலேயே எளிமையான முறையில் அதிக மக்களை அழைக்காமல் நடத்துவது சிறந்ததன்றோ?
ஒரு வேளை அவ்வாறு நடந்திருந்தால் இன்று இந்த பெண் மருத்துவர் உயிரோடு இருந்திருக்கலாமோ?
திருவண்ணாமலையில் எட்டு மாத கர்ப்பிணியான பெண் மருத்துவருக்கு சில நாட்கள் முன் வளைகாப்பு நடந்தது.
இதைத் தொடர்ந்து ஒரு வாரம் முன் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்; ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
அவரது கணவர் வீட்டாரின் வற்புறுத்தலின் பெயரிலேயே வளைகாப்பு நடத்தப்பட்டதாக அவரின் உறவினர்கள் வேதனை அடைகின்றனர். இந்த செய்தியைக் காணும்போது கண்கள் தானாய் ஈரமாகிறது.
இதுவும் கடந்து போகும் என்று சொல்லுவது போல் இந்த கொரோனா காலம் கடந்து போகக் கூடும். ஆனால் அது வரை நாம் அதீத கவனத்தோடு இருப்பது அவசியம்.
நாட்டில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளை நம் வீட்டளவில், அதிக மக்களை அழைக்காமல் எளிய முறையில் நிறைவாக கொண்டாடுவோம். மற்றவர்களுக்கும் எடுத்துரைப்போம். இப்படியாக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்தால், நாம் சீக்கிரம் மீண்டு, நம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நாள் வரும்!
பட ஆதாரம்: YouTube
read more...
Please enter your email address