Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
கர்ணன் திரைப்படத்தில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்களுக்கு தகுந்த முக்கியத்துவம் மற்றும் 'ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ்' வழங்கப்பட்டுள்ளதா?
சாதி எதிர்ப்பு காவியமான கர்ணன் திரைப்படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒரு பெண்ணே திரையில் தோன்றுகிறாள். ஆனால் திரைப்படத்தில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்களுக்கு தகுந்த முக்கியத்துவம் மற்றும் ‘ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ்’ எனப்படும் திரை இருப்பு வழங்கப்பட்டுள்ளதா?
இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய இரண்டாவது திரைப்படத்திலும் முத்திரை பதித்திருக்கிறார் என்றால் மிகையல்ல. கர்ணன் சாதிக் கொடுமைகளை சித்தரிக்கும் ஒரு அசாதாரணமான திரைப்படம். ஆதிக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை நன்கு உணர்ந்தவர் தாம் என்று இயக்குனர் காட்டியிருக்கிறார்.
*ஸ்பாய்லர் அலெர்ட்*: இந்த திரைப்படத்தின் முக்கியமான பகுதிகள் சில இங்கே விவரிக்கப் பட்டுள்ளன.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில், கதாநாயகனின் தந்தையை, பெண் வேடம் இட்டு ஆடும் ஒரு நாட்டுப்புறக் கலைஞரின் நிலையை, அவருக்கு இழைக்கப்படும் அநீதியை, உள்ளபடி திரையில் கொண்டு வந்திருப்பார் இயக்குனர் அவர்கள். ஆனால் அந்தப் படத்தில் அவர் போன்றே ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வந்த பெண் கதாபாத்திரங்களுக்கு அதே போன்ற வாய்ப்பினை அளிக்கவில்லை என்பதே உண்மை.
அதே போல், கர்ணன் திரைப்படத்திலும், சாதி மற்றும் பாலினம் சார்ந்த ஒடுக்குமுறையும் ஆதிக்கத்தின் கோரப்பற்கள் என்று நன்கு உணர்ந்ததைக் காட்டுகிறார், இயக்குனர். ஆனாலும், திரைப்படத்தில் தோன்றும் பெண் கதாபாத்திரங்களுக்கு இன்னும் கொஞ்சம் நேரம், கதைக்களம் அளித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
கர்ணன் திரைப்படம் துவங்கும் போதே நம் இதயங்களை பதம் பார்க்கிறது. கர்ணனின் சகோதரி, சாலையின் நடுவில் வலிப்பு வந்து துடிக்கிறாள்; அவளது நிலையைக் கண்டு சிறிதும் இரங்காமல், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தாமல் அவஆற்றின் போக்கில் செல்கின்றன. சிறுமி இறந்து விடுகிறாள்.
இங்கே அந்த சிறுமியை யாரும் துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ இல்லை. ஆனால் அவளைக் கண்டும் காணாமல் போனது ஒரு அதீத வன்முறைச் செயல் என்பதை பொட்டில் அடித்தது போல் விளக்குகிறது இந்தக் காட்சி.
சாதி அடக்குமுறையின் வெளிப்பாடாக எந்த ஒரு பேருந்தும் நிறுத்தப்படாத ஒரு கிராமத்தைப் பற்றிய படத்தின் எஞ்சிய பகுதிக்கு நம்மை தயார்படுத்தும் காட்சியாக அமைகிறது, சிறுமியின் மரணம். வஞ்சிக்கப்பட்டு இறந்து போன சிறுமி, தெய்வமாகிறாள். (தமிழகத்தின் நாட்டார் தெய்வக் கதைகள் பலவும் வஞ்சிக்கப்பட்டு இறந்தவர்களின் கதையே.)
படம் நெடுக தெய்வமான சிறுமி, சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியின் சொரூபமாகிறாள். இந்த ரூபத்தோடே படம் தொடங்குகிறது; இந்த ரூபத்தோடே படம் முடிவடைகிறது. அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியின் உருவகமாக அவள் படம் நெடுக வருகிறாள். கொள்கை பரப்பு முறையில் இது ஒரு ஆற்றல் வாய்ந்த வழியாகும்.
அலட்சியத்தால் அநியாயமாக இறந்து போன சிறுமியை தெய்வமாக உருவகப்படுத்தியது சுமதி ராமசாமியின் எழுத்தில் உருவான ‘தி தேவி அண்ட் தி நேஷன்: மேப்பிங் மதர் இந்தியா‘ என்கிற புத்தகத்தை நினைவூட்டுகிறது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவில், தேசியவாதத்தின் உணர்வை வளர்ப்பதில் ‘பாரத மாதா’ (எ) பாரதத் தாய் என்ற உருவத்தின் தாக்கத்தை, பாரதத் தாய் என்கிறப் ‘பெண்ணை’, அவளது கண்ணியத்தை காப்பாற்றும்படி ஆண்களை சுதந்திர போராட்டத்தில் இணையத் தூண்டியதன் பங்கினை விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட விரும்பியது ஒரு அற்புதமான விஷயம் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், ஆண்களின் உத்வேகத்தை ஊக்குவிக்கும் ஒரு தூண்டுகோலாக மட்டுமே பெண்கள் பயன்படுத்தப்படுவது நிச்சயம் விவாதிக்கப் படவேண்டிய ஒன்று.
இதுவே தான் கர்ணன் திரைப்படத்திலும் நிகழ்கிறது. தங்கையின் மரணம் கர்ணனை வெகுவாக பாதிக்கிறது. ஒரு கிராமமே திரண்டு உரிமைக்காக எழுந்து நிற்கும் செயலுக்கு வழிவகுக்கும் பல குறிப்பிடத்தக்க தருணங்களில் இதுவும் ஒன்றாகும். இப்படியாக இந்த தங்கையின் தெய்வ சொரூபம், படம் பார்ப்பவர்களுக்கு “மதர் இந்தியா” போன்ற அடையாளமாக அமைகிறது. ஆண்கள் போராடிப் பெற்றுத் தர வேண்டிய நீதியின் சின்னமாக அவள் அமைகிறாள். ஆனால் வெறுமனே சின்னமாக அமைவது மட்டுமே அவளுக்கான பணியா? அது ஏற்புடையதா?
இந்தப் படம், மக்களை நியாயத்திற்காக, சமத்துவத்திற்காக, அதிகார துஷ்ப்ரயோகத்தை எதிர்த்து நிற்கச் செய்யும் என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. ஆனால், அநியாயமாக உயிரை இழந்த அந்த சிறுமி ஒரு தூண்டுகோலாக, வெறும் சாட்சியாக நிற்கும் தெய்வமாக நிறுத்தப்பட்டதில் நான் ஏமாற்றமடைகிறேன். அவளது பாத்திரம், கதைக்கு இன்றியமையாதது; ஆனாலும் அவள் நேரடியான செயல் திறனற்றவளாகவே நின்று விடுகிறாள்.
கர்ணனின் கிராமத்தில் வசிக்கும் பொய்யிலாள் என்கிற இளம் பெண், கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறாள். கல்லூரியின் முதல் நாளன்று அவளும் அவளுடைய தந்தையும் பக்கத்து கிராமமான, சாதி ரீதியாக பொடியன்குளத்துடன் (கர்ணனின் கிராமம்) மாறுபாடுடைய மேலூரின் பஸ் நிறுத்தம் வரை நடந்து செல்கிறார்கள். அங்கு பேருந்துக்காக அவர்கள் காத்திருக்கும் போது மேலூர் கிராமத்தைச் சேர்ந்த சில ஆண்கள் அவளது கண்ணியத்தை காயப்படுத்தும் வகையில் ஒரு மோசமான உருவத்தை வரைகின்றனர். அது தெரிந்தும், ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணாக அவள் மௌனமாக அதை சகித்து கொண்டிருந்து விடுகிறாள். அவளை விட உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவளால் அவர்களை எதிர்த்து குரல் எழுப்ப முடியாதவளாக இருக்கிறாள். மீறினால் பெரிய கைகலப்பு நடக்கும் என்று அவளுக்குத் தெரியும் என்பதால், அவர்களுடன் பிரச்சனை வேண்டாம் என்று தன் தந்தையிடம் கெஞ்சுகிறாள்.
கர்ணனைத் தூண்டும் மற்றொரு சம்பவமாக இது அமைகிறது. அவன் பொய்யிலாளை சீண்டியவர்களை பழி தீர்க்கிறான். இது போன்ற சம்பவங்களால் தங்கள் கிராமத்தில் உள்ள பெண்கள் படிப்பது எவ்வளவு கடினம் ஆகிவிட்டது என்பதையும் இதனால் அவர்களின் கல்வியை நிறுத்தப் படுவதையும் எண்ணுகையில் வருத்தமாக இருக்கிறது என்று உணர்ச்சிவசமாக பேசுகிறான். சாதி மற்றும் பாலினம் சார்ந்த ஒடுக்குமுறையை இதை விட தெளிவாக எடுத்துச் சொல்ல முடியாது. ஆனால் பொய்யிலாள் கண்வழியாகவே, அவளுடைய கண்ணோட்டத்திலேயே இதை நாம் கண்டிருந்தால் இது இன்னும் உயிர்ப்புடன் இருந்திருக்கும் அல்லவா?
கர்ணனின் காதலி திரௌபதி, ஒரு கலவையான கதாபாத்திரம். மகாபாரதத்தில் அவளுடைய பெயரைக் கொண்ட அந்த திரௌபதியை விட இவளது நிலை சிறந்ததா அல்லது மோசமானதா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை.
மகாபாரதத்தில் உள்ள திரௌபதியிடம் ஒரு தீராத நெருப்பு இருந்தது. தனக்கு நேர்ந்த அநீதிகளுக்கு எதிரான கோபம் இருந்தது. கர்ணன் திரைப்படத்தில் வரும் திரௌபதி வெளிப்படையாக கோபப்படுவதாகக் காட்டப்படவில்லை. இந்த திரௌபதி மற்றவர்களால் சூதாடப்படவில்லை. அவளுடைய விருப்பத்திற்கு எதிராக ஐந்து ஆண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, யாரைத் தான் திருமணம் செய்து கொள்வது என்று தானே முடிவு எடுக்கும் நிலையில் தான் அவள் இருக்கிறாள்.தானே கர்ணனைத் தேடிச்சென்று முத்தமிட்டு, தன்னுடைய அன்பை முதலில் வெளிப்படுத்துபவள், இந்த திரௌபதி.
ஆனால் மகாபாரதத்தின் கதையை முன்னோக்கி இயக்கியதே அந்த திரௌபதி தான். கர்ணன் திரைப்படத்தில் வரும் திரௌபதியோ கதைக்கு வலு சேர்ப்பவரா என்றால், தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நிதர்சனத்தை கண்டு அஞ்சாத, கர்ணனின் திருமணமாகாத மூத்த சகோதரி பத்மினி. தம்பிக்கு உண்மையை முகத்துக்கு நேராகக் கூறும் பெண்ணாக வரும் பத்மினியின் கதாபாத்திரம், சிறப்பாக வடிமைக்கப்பட்ட ஒன்று.
குடும்பத்துக்காக உழைப்பவளாக, குடும்பத்தையே தாங்குகிறவளாக வருகிறாள் பத்மினி. அவள் ஒரு முதிர்கன்னி என்பதை எவ்வித தயக்கமும் இன்றி முகத்துக்கு நேராக கூறும் தாயை பொருட்படுத்தாமல் செய்ய வேண்டியதை செய்கிறாள். கர்ணனுக்குப் பதிலாக இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமாக அவள் இருந்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றுகிறது.
இறுதியாக, கர்ணனின் முதிய நண்பரான யமனை ‘மஞ்சனத்தி புருசா’ என்று உரிமையுடன் அழைக்கும் அந்த வேடிக்கை மிகுந்த வயதான பெண்மணியின் கதாபாத்திரம், தனிச்சிறப்புடையது. பொதுவாக ‘இன்னாருடைய மனைவி’ என்றே பெண்கள் அடையாளம் காணப்படும் உலகத்தில், ஒரு ஆடவனை ‘இவளுக்கு புருஷன்’ என்று அழைப்பது நிச்சயம் புத்துணர்வை அளிக்கிறது.
அதிலும் அவர், யமனிடம் வெளிப்படையாக ‘என்னுடைய வாலிபம் எல்லாம் போன பின் வந்திருக்கிறாயே, நான் என்ன கொடுப்பேன் உனக்கு ‘ என்று கேட்பதன் மூலம், வயதானவருக்கும் ஆசைகள், இச்சைகள் உண்டு என்று பதிவு செய்யப்பட்டதாக உணர்கிறேன். ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா‘ போன்ற மிகச் சில திரைப்படங்களே, இது போன்ற களங்களை பேசுகின்றன.
இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மிகச் சிறந்த பெண் கதாபாத்திரங்களை எழுதிச் சித்தரிக்கும் ஆழ்ந்த வல்லமை உள்ளது என்பது புலப்படுகிறது. ஆனாலும், அந்தப் பெண் கதாபாத்திரங்களுக்கு அவர் இன்னும் முக்கியத்துவம் அளித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
நிச்சயம் இந்த கேள்வி எஞ்சுகிறது: ஏன் பெரும்பாலான திரைப்படங்களில், பெண்கள் ஆண்களுக்கான உத்வேகக் குறியீடாக, வெற்றிக்கான படிக்கட்டாக மட்டுமே பயன்படுத்தப் படுகிறார்கள்?
இது வரை தன்னுடைய படங்களில் ஒடுக்கத்திற்கு எதிராக நிற்கும் நாயகர்களை காட்டிய இயக்குனர், வருங்காலத்தில் சாதி மற்றும் பாலின ரீதியான ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படம் ஒன்றினை அளிப்பாரா?
காத்திருப்போம்.
பட ஆதாரம்: கர்ணன் (2021) திரைப்படம்
read more...
Please enter your email address