Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
'மாப்பிள்ளையை மதிக்க வேண்டும்' என்று கற்பிக்கப்படுவது போல், 'வீட்டிற்கு வாழ வரும் மருமகளையும் மதிக்க வேண்டும்' என்று சொல்லப்படுகிறதா?
‘மாப்பிள்ளையை மதிக்க வேண்டும்’ என்று கற்பிக்கப்படுவது போல், ‘வீட்டிற்கு வாழ வரும் பெண்ணையும் மதிக்க வேண்டும்’ என்று சொல்லப் படுகிறதா? மருமகளும் ஒரு மகள் அல்லவா?
‘மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்’ என கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கின்றது. ஆனால் உண்மை என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
தன்னலம் இன்றி குடும்பத்தை அணைத்து, இழுத்துச் செல்லும் பொறுப்பு காலம் காலமாகப் பெண் மேல் சுமத்தப்படுகிறது.
அதிலும், தாய் என்ற ஸ்தானத்தை பெண் தொட்டுவிட்டால், அவளை ‘வாழும் தெய்வம், இணையில்லா கருணை தேவதை’ என்று பேசி எண்ணற்ற தியாகங்களை செய்யப் பணித்து அவருக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளமோ, ஆசாபாசமோ இல்லாதபடி இருக்க பழக்கப்படுத்தி விட்டார்கள்.
நிச்சயமாக தாய்மையின் அடிப்படை கருணை தான்; அன்பு தான். பொதுவாக பெண்ணுக்குள் தாய்மை என்ற உணர்வு இருக்கவே செய்கிறது. தாய்மை அடைந்தவுடன் பெண்ணுக்குள் சுரக்கும் ‘ஆக்ஸிடோசின்’ என்கிற வஸ்து, அவளுக்குள் கருணை, பாசம், பொறுத்துக்கொள்ளும் திறன், பொறுப்பு ஆகியவற்றை மேம்படுத்தவே செய்கிறது.
இப்படி பெற்ற பிள்ளை மேல் காட்டும் பாசம், பெறாத பிள்ளைகள் மேலும் சுரக்கவே செய்கிறது. தன் பிள்ளைகளின் தோழர்களையும் தன் பிள்ளைகள் போலவே கருதும் தாய்மார்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.
ஆனால் அந்த தாய்மை மருமகளிடம் மட்டும் சில வீடுகளில் மாறுபடுவது ஏன்?
பெண்ணைப் பெற்ற தாய் என்பவள் சமூகத்தில் பெரிய பொறுப்பு உடையவளாக பார்க்க படுகிறாள்.
பெண்ணைப் பெற்று, பேணி வளர்த்து, படிக்க வைத்து, பண்புகள் கற்பித்து, வேலைக்கு அனுப்பி, சமூகத்தில் ஒரு நல்ல பெண்ணாய் அவளை நிலைநிறுத்தும் பொறுப்பு, பெண்ணின் தாய்க்கு வகுக்கப் படுகிறது.
அதற்கு பின்பு மகளை கல்யாணம் பண்ணிக் கொடுத்து, பெண்ணையும் பொன்னையும் பொருளையும் கொடுத்து, மாப்பிள்ளைக்கும் அவரைச் சார்ந்தவர்க்கும் எல்லா விஷயங்களிலும் அனுசரித்து, விட்டுக்கொடுத்து போக வேண்டிய சுமையும் அவள் மேல் கிடத்தப் படுகிறது.
அந்தத் தாயின் மகள் தெரிந்தோ தெரியாமலோ எந்த வகையிலேனும் மாப்பிள்ளை வீட்டார் மனம் கோணும் படி நடந்தாலோ, “உன் அம்மாவின் வளர்ப்பு சரியில்லை” என திட்டும் வாங்கிக் கொண்டும் கண்டும் காணாமலும் வாழ வேண்டி உள்ளது.
‘தானும் ஒரு வீட்டின் மருமகள்’ என உணர்ந்து வீட்டிற்கு வரும் மருமகளை தன் பெண்ணாய் பாவித்து அன்புகாட்டி அரவணைத்துக் கொள்ளும் மாமியார்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இது போன்ற மாமியார்கள், தன் மகனுக்கு பெண்ணை மதிக்க சொல்லித்தருகின்றனர். எனவே வீடுகளில் வசந்தம் வீசுகின்றது.
ஆனால் இவர்கள் மிகச் சிலரே.
ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைத்து மருமகளை குற்றம் கண்டுபிடிப்பதையே தன் தொழிலாக கொண்டுள்ள மாமியர்கள் இருக்கவே செய்கின்றனர்.
வீட்டுக்கு வாழ வந்த பெண்ணை, கட்டியவன் அனுசரித்து அணைத்து போனாலும், நாளடைவில், மருமகளைத் தவறாகவே பார்க்கும் தன் தாயோடு சேர்ந்து கொண்டு அவனும் அந்தப் பெண்ணிடம் அன்பின்றி அதிகாரம் மட்டும் செலுத்தினால், என்ன செய்ய முடியும் அந்த பெண்ணால்?
துன்பமுற்ற அந்தப் பெண், ஆதரவுக்காக தன் தாய்வீட்டிற்கு சென்றால், அங்கும் இந்த சமுதாயம் பெண்ணைப் பெற்றவளை விடுவதில்லை. ‘மகளுக்கு அறிவுரை கூறி கணவனிடம் திருப்பி அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்கிறாள்’ என்று பழி சொல்லும்.
மகளுக்கு மட்டுமே அறிவுரையா? ‘மாப்பிள்ளையை மதிக்க வேண்டும்’ என்று கற்பிக்கப்படுவது போல், ‘வீட்டிற்கு வாழ வரும் பெண்ணையும் மதிக்க வேண்டும்’ என்று சொல்லித்தந்திருந்தால், இப்படியெல்லாம் நடக்குமா?
இந்த பாகுபாடு ஏன்? யார் மீது தவறு? எப்போது மாறும் இந்த நிலைமை?
இதுவரை நடந்து எல்லாம் போதும். மாற்றம் நம் கையில் தான் உள்ளது.
இனி பிள்ளைகளிடம், ‘பெண் என்பவள் அடிமை அல்ல, அவள் சகமனுஷி’ என்று சமத்துவம் சொல்லி வளர்ப்போம். ஆண் பெண் பேதமின்றி அறம் வளர்ப்போம்.
பட ஆதாரம்: ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம்
read more...
Please enter your email address