Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
'இதையெல்லாம் போய் அவனிடம் சொல்வார்களா' என்று தயங்காமல், மாதவிடாய் என்பது இயற்கையான ஒரு விஷயம் என ஆண் பிள்ளைகளுக்கு விளக்குவது அவசியம்.
மாதவிடாய் பெண்களுக்கு இயற்கையாய் நிகழும் ஒன்று. ஏனோ சிலருக்கு, குறிப்பாக ஆண்களுக்கு, இது குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை. ஏன் இதைப் பற்றிப் பேசி, அறிவியல்பூர்வமான புரிதலை உருவாக்குவது அவசியம் என்பதை இந்தக் கட்டுரை பேசுகிறது.
உலகமெங்கும் மே 28 அன்று சர்வதேச மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப் படுகிறது.
தன்னுடைய முதல் ‘பீரியட்’ என்பது ஒவ்வொரு பெண்ணின் நினைவிலும் தெளிவாக நிற்கும் நினைவு. அது இனிய நினைவாக இருக்க வாய்ப்புகள் குறைவே. முதல்முறையாக தன்னுடைய அந்தரங்க உறுப்பில் இருந்து உதிரப்போக்கை பார்ப்பது என்பது சற்று அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றே.
நாட்கள் செல்லச்செல்ல, எதைக் கண்டு முதலில் அதிர்ந்தோமோ, அதையே மாதாமாதம் பார்த்து பார்த்து, இரத்தப்போக்கும் வலியும் பழகிப் போன ஒன்றாகவே ஆகி விடுகிறது.
Original in English | மொழிபெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி
ஆனால், ஆண் பிள்ளைகள்? நம்மோடு படித்து, வளர்ந்த நம் சக வயது ஆண்களுக்கு, இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட பெரிய வாய்ப்பு இருக்கவில்லை.
நாம் ஏன் மாதத்தின் சில நாட்களில் வழக்கத்தை விட அதிகமாக பாத்ரூமை தேடி ஓடினோம், ஏன் ‘வயிறு வலிக்கிறது’ என்று கூறி ‘பி.இ’ அதாவது உடற்பயிற்சி/விளையாட்டு வகுப்புகளில் இருந்து சில நாட்கள் விலக்கு பெற்றுக் கொண்டோம், ஏன் அந்த நாட்களில் உணர்ச்சிகள் ஓங்க ‘மூட் ஸ்விங்ஸ்’ அதிகமாக இருந்தது என்பதை பற்றி அறிந்து கொள்ளும் குறுகுறுப்பு அவர்களுக்கு இருந்திருக்கலாம்!
இன்று, ஒரு மனைவியாக, சகோதரியாக, தாயாக, அதிலும் ஒரு பெண் குழந்தையின் தாயாக, ஆண் பிள்ளைகளுக்கும் ‘பீரியட்ஸ்’ குறித்த புரிதல் இருக்கவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். நான் படித்த காலத்தில், என் பள்ளியில், மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், அந்த நாட்களில் சுத்தமாக இருப்பதை பற்றியும், சானிடரி நாப்கின் பயன்பாடு மற்றும் சரிவர அப்புறப்படுத்துதல் பற்றியும் எங்களுக்கு சொல்லப்பட்டது.
ஆனால், இது அனைத்தும் பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே தனியாக சொல்லப்பட்டது. வேறொரு தனியறைக்கு பெண் பிள்ளைகளை அழைத்துப் போய் அங்கே அமரவைத்து எல்லாம் சொல்லப்பட்டது. இந்த ஒரு சம்பவம், ஆண் பிள்ளைகளுக்கு இது குறித்த ஏதேதோ எக்குத்தப்பாக கற்பனைகளைத் தூண்டிவிட போதுமானதாக இருந்தது.
எனக்கு மிகத் தெளிவாக ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது – என் தோழி ஒருத்திக்கு நாங்கள் வகுப்பில் இருக்கும்போது திடீரென்று மாதவிடாய் வந்துவிட்டது. இது நடந்தது அவளுக்கு தெரியவே இல்லை. அவளுக்கு முன் எங்கள் வகுப்பில் இருந்த சில சக ஆண் மாணவர்கள் அதைப் பார்த்து விட்டனர்.
வகுப்பில் கேட்கப்பட்ட ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்ல அவள் எழுந்து நின்ற போது, அவளுடைய சீருடையிலும் இருக்கையிலும் ரத்தத் துளிகள் இருந்ததை பார்த்த சில மாணவர்கள் அவளை மோசமாக கேலி செய்யத் துவங்கினர். நிலைமை புரிந்த அந்தப் பெண் அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள். அதற்கு பின் பள்ளிக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு அந்த சம்பவம் அவளை பாதித்து விட்டது.
இப்போது எனக்கு தெரிய வேண்டியது இது தான் – ஏன் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன? ஆண் பிள்ளைகள் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளுக்கு பொறுப்பாளிகளா? கண்டிப்பாக அவர்களுக்கு இதில் பங்குண்டு; ஆனால் அவர்களை மட்டுமே நாம் குறை சொல்ல முடியாது.
அந்த மாணவர்கள் அன்று அப்படி நடந்து கொண்டதற்கு மூல காரணம், மாதவிடாய் குறித்த விழிப்புணர்வே இல்லாதது தான். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், எங்களுக்கு கற்பிக்கப்பட்ட உயிரியல் பாடங்கள் கூட மாதவிடாய் பற்றிய முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த போதுமானதாக இருக்கவில்லை.
தொலைக்காட்சியில் சானிடரி நாப்கின் விளம்பரங்களை பார்க்காத ஆண் பிள்ளைகள் இருக்க முடியாது. அதில் காட்டுவதெல்லாம் சில நாப்கின்களின் மீது நீல நிற திரவம் ஊற்றப்பட்டு உரியப்படுவதும், பின்னணியில் ஒரு பெண் உற்சாகத்துடன் ஆடுவதும் தான். இது எவ்வகையிலும் விழிப்புணர்வு அல்ல.
உண்மையில், அம்மாக்களும் ஆசியர்களும் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசி ஆண் பிள்ளைகளுக்கு இது குறித்த சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறி விடுகிறார்கள். காரணம், தயக்கம். ‘இதையெல்லாம் போய் அவனிடம் சொல்வார்களா’ என்கிற தயக்கம். ஒரு பெண்ணைப் பெற்ற தாயாக, ஆண் குழந்தைகளும் இது பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால், பெண்களிடம் ஆண்கள் புரிதலுடன், கனிவுடன் நடந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது அல்லவா?
கொஞ்சம் முயற்சியும், பொறுமையும், ஒத்துழைப்பும் இருந்தால் இதை நிச்சயம் செயல்படுத்தி நிறைவேற்றலாம்.
தாய்மார்களை அவர்களுடைய மகன்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஊக்குவிப்போம். உங்கள் மகன்களிடம் சொல்லுங்கள், மாதவிடாய் என்பது வேடிக்கை அல்ல, இயற்கையான ஒரு விஷயம் என. இதைப் பற்றி நாம் நமது வெளிப்படையாக பேசினால் மட்டுமே அவர்களுக்கு இது ஒரு இயல்பான விஷயம் என்று புரிய வரும்.
இதுவே நாம் கனிவுடன் கூடிய நல்ல மகன்களை, சகோதர்களை, எதிர்கால கணவர்களை, சமூகத்தில் நல்ல மனிதர்களை உருவாக்குவதற்கான அஸ்திவாரம் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.
பட ஆதாரம்: YouTube (சென்டர் ஃப்ரெஷ் விளம்பரம்)
I'm just another happy mom from Goa who loves reading, writing and drinking lots of coffee. I love taking inspiration from the women around me. Through my writing I wish to salute all the read more...
Please enter your email address