முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு கொரோனாவை வெல்வோம்

கொரோனா பெருந்தொற்று நோயின் பேரலை, இன்னும் ஓயாத நிலையில் விழிப்புடன் பாதுகாப்பாக இருந்து வருமுன் காப்பது மிகவும் அவசியம்.

டிசம்பர் 2019 இல் சீனாவில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று நோயின் பேரலை, இன்னும் ஓயாத நிலையில் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் விழிப்புடன் பாதுகாப்பாக இருந்து வருமுன் காப்பது மிகவும் அவசியம்.

கொரோனா வைரஸ் தொற்று பெருகிக் கொண்டே இருக்கிறது. பெருகும்போதே அதன் கட்டமைப்பும் சிறிது சிறிதாக மாறிக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், மனித செல் உள்ளே எளிதாக நுழைவதற்கும் விரைவான பரவலுக்கும் ஏற்றாற்போல் திரிந்துள்ளதாக அறியப்படுகிறது. ஆப்பிரிக்க மற்றும் பிரேசில் பகுதிகளில் பரவிய வைரஸ் கிருமிகளிலும் இதே போன்ற மியூட்டேஷன் (mutation) எனப்படும் பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன.

நடுத்தர வயதினர் மற்றும் குழந்தைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். ஒரு வேளை குழந்தைக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், குழந்தை நல மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ உதவியோ சிகிச்சையோ தரப்படுவது அவசியம்.

பொதுவாகவே விழிப்புடன் பாதுகாப்பாக இருந்து வருமுன் காப்பது மிகவும் அவசியம்.

முகக்கவசம் மிக முக்கியம்!

  • முகக்கவசம் கண்டிப்பாக மூக்குப் பகுதியை முழுமையாக மூடும்படி இருக்க வேண்டும்.
  • வாயை மட்டும் மூடி மூக்கை மூடாமல் முகக்கவசம் அணிவதால் ஒரு பயனும் இல்லை.
  • அணிகின்ற முகக்கவசம் மூக்கின் பாலத்தில் தளராமல் இறுக்கமாக மூடும்படியாக இருக்க வேண்டும்.
  • முகக்கவசத்தையோ முகத்தையோ அடிக்கடி தொடக் கூடாது.
  • முகக்கவசம் அல்லது முகத்தை தொடாமல் இருந்தால் தவறுதலாக எதையோ தொட்ட கையில் இருந்து நாசிக்குள் கிருமி பரவுவதை தவிர்க்க முடியும்.
  • ஒருவேளை வெளியில் செல்ல நேர்ந்தால் எதையும் தொடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
  • மீறி கடைகள், பொது இடங்கள், அலுவலகங்கள், வங்கிகள் என்று எங்கோ ஒரு இடத்தில் மேசைகளையோ மேற்பரப்புகளையோ தொட நேர்ந்தால், உடனே கைகளை ‘ஹேண்ட் சானிடைசர்’ அல்லது சோப் போட்டு கழுவிக் கொள்ளுங்கள்.

கையுறைகள் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை; கையுறைகளை அணிந்து மேற்பரப்புகளைத் தொட நேர்ந்தால் அதன் மூலமாகவும் தொற்று பரவக்கூடும். எப்படியும் கைகளை ‘ஹேண்ட் சானிடைசர்’ அல்லது சோப் போட்டு கழுவத் தான் வேண்டும்.

மற்றவர்களுடனான தொடர்பைக் குறைத்தல் அதி அவசியம்

  • நெரிசலான சூழல்களைத் தவிர்ப்பதை தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும்
  • கடைகளுக்கு அடிக்கடி வருவதைத் தவிர்க்க வேண்டும்
  • குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை தடுக்க அவர்களை வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்

இனி வரும் நாட்களில் திட்டமிடல் அவசியம்

வீட்டில் உள்ள பெண்களும் ஆண்களும் சமபொறுப்புடன் திட்டமிட்டு அதன் படியே பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு ஏற்ப உணவைத் திட்டமிட வேண்டும்.
  • முடிந்த வரை, தேவையான அனைத்து பொருட்களையும் வீட்டிற்கு அருகில் உள்ள, கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத ஒரு கடையிலேயே வாங்க வேண்டும்.
  • சமூகப் பொறுப்புணர்வோடு தேவையானதை, அவசியமானதை மட்டுமே வாங்க வேண்டும்.
  • ‘அளவுக்கு அதிகமாக எதையும் வாங்கி பிறருக்கு பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடாது’ என்பதில் கவனம் இருக்க வேண்டும்.

அலுவலகத்திலும் முன்னெச்சரிக்கை அவசியம்

வீட்டிலிருந்த படியே உங்கள் பணிகளை நிறைவேற்றும் வசதி இருக்கும் பட்சத்தில் அதையே உங்கள் அலுவலக அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடைமுறைப் படுத்திக் கொள்ளுங்கள்.

வீட்டிலிருந்து வேலை செய்வது சாத்தியமில்லை என்றால்

  • எப்போதும் முகக்கவசம் அணிந்து இருங்கள்
  • சக ஊழியர்களிடமிருந்து எப்போதும் ஒரு பாதுகாப்பான தூரத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள்.
  • பணியிடத்தில் கைகுலுக்கவோ அல்லது ஒரே உபகரணங்களைப் பயன்படுத்தவோ வேண்டாம்.
  • உங்கள் ‘வொர்க் ஸ்டேஷன்’ எனப்படும் உங்களுக்கான தனிப்பட்ட அலுவலக மேசை-இருக்கை, கோப்புகள் (எ) ஃபைல் வைக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருங்கள்.
  • நீங்கள் பணி செய்யும் இடத்திலேயே சாப்பிட நேர்ந்தால், ஒரே குழுவாக சாப்பிட வேண்டாம்; தனித்து உண்ணவும்.
  • பணி செய்யும் இடத்தில் மதிய உணவு நேரம் மற்றும் தேநீர் இடைவேளை சமயங்களில் விழிப்புணர்வுடன் விரைவாக சாப்பிடுங்கள், இளைப்பாறுங்கள்.
  • அலுவலக விஷயங்கள் அனைத்தையும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் பகிர்ந்து கொள்ளவும்.
  • கேன்டீன் அல்லது உணவகங்களில் சாப்பிடுவதாக இருந்தால் தனியாகவே சாப்பிட முயற்சிக்கவும்.
  • வேலையிலிருந்து திரும்பி வந்தபின் எந்தவொரு வீட்டுப் பொருளையும் தொடாமல் வேறொரு ஆடைக்கு மாறுங்கள்.
  • வீட்டிற்கு வந்ததும் குளிப்பது நல்லது.
  • வெளியில் அணிந்து சென்ற ஆடைகளை உடன் துவைத்து விடவும், அல்லது துவைப்பதற்காக எடுத்து வைத்து விடவும்.

முன்னெச்சரிக்கையுடன் நேர்மறை சிந்தனையும் செயல்களும் தேவைப்படும் நேரம்

இந்த சோதனையான காலகட்டத்தில், நாம் நேர்மறையான சிந்தனைகள் மற்றும் செயல்களில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். சுற்றி நடக்கும் விஷயங்களால் தைரியத்தை இழக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதே சமயம், ‘நமக்கு எதுவும் வராது’ என்கிற கண்முடித்தனமான எண்ணமும் கூடாது.

‘அவர் இங்கு சென்றார், அங்கு சென்றார், ஆனால் அவருக்கு எதுவும் ஆகவில்லை. எனவே நானும் வெளியில் சென்று மனம்போல் உல்லாசமாய் இருப்பேன்’ என்று இந்த சமயத்தில் இருந்து விடக் கூடாது.

வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் மருத்துவரை ஆலோசித்து, விழிப்புடன் செயல்படுங்கள். நமது பாதுகாப்பு நமது கைகளில் தான் உள்ளது. முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு கொரோனாவை வெல்வோம்.

About the Author

3 Posts | 3,409 Views
All Categories