Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
ஆண்களின் ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதில் குடும்பம் என்கிற அமைப்பில் இயல்பாகக் கலந்து விட்ட சில நடைமுறைகளை அலசிப் பார்க்கும் முயற்சியே இது.
ஆண்களே கோலோச்சும் இந்திய சமூகத்தில் ஆண்களின் ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதில் நம் வீடுகளில், குடும்பங்களில் இயல்பாகக் கலந்து விட்ட சில நடைமுறைகளை அலசிப் பார்க்கும் முயற்சியே இது.
நமது நாட்டில் குடும்பம் என்பது ஒரு சமூகக் கட்டமைப்பு என்பதையும் தாண்டி, மிகப் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
Original in English | மொழிப்பெயர்ப்பு: சிந்து பிரியதர்சினி
இந்திய சமுதாயத்தில், இந்த புனித பிம்பத்தில், காலம்காலமாக ‘இது தான் பெண்ணுக்கான வேலை, இது தான் அவளுக்கான இடம், இது தான் அவளுக்கான தலையாய கடமை’, என்று வரையறுக்கப் பட்டுள்ளன. பொதுவாக பெண் முன்னேற்றத்திற்கு இது போன்ற அமைப்புகள் தடை போடவே செய்துள்ளன. பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்குமான உறவு தொங்கி அணைத்து பரிமாணங்களிலும் இதன் பாதிப்பு தென்படுகிறது.
ஒரு சராசரி இந்தியக் குடும்பம் என்றாலே ஒரு தம்பதி, அதாவது, உழைத்துக் கொட்டும் அப்பா, வீட்டு வேலைகளை தலை மேல் இழுத்துப்போட்டு செய்யும் மிகமிக அன்பான ஒரு அம்மா, இரண்டு பிள்ளைகள் என்ற அமைப்பு தான் பலருக்கும் தோன்றும். இதிலிருந்து தொடங்குகிறது, ‘ஊரார் யாரும் ஒரு குறை சொல்லாதபடி வாழ வேண்டும்’ என்கிற ஒரு கட்டாயம்.
வேலைக்கு செல்பவரோ அல்லது ஹவுஸ்-வைஃப் எனப்படும் ‘ஹோம் மேக்கர்’ ஆக இருப்பவரோ, எல்லா நேரங்களிலும் எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய பளு அம்மா மீது விழ, அப்பா என்பவர் குடும்பத்தின் தலைவராக, பொருள் ஈட்டி, ஈட்டிய பொருளை நிர்வகிப்பவராக, வீட்டின் பாதுகாவலராக, குடும்பத்தின் அடையாளமாக உருவகப் படுத்தப்படுகிறார்கள்.
ஆணின் கடமை இது தான், பெண்ணின் கடமை இது தான் என்று வகுக்கப் படுவது இங்கிருந்தே துவங்குகிறது. இதைச் சார்ந்தே, ஆண் பிள்ளைகள் ஒரு விதமாகவும், பெண் பிள்ளைகள் ஒரு விதமாகவும் வளர்க்கப் படுகிறார்கள். இப்படியாக இளவயதில் தொடங்குகிறது இந்த பாலின ரீதியான பேதம்.
இப்படி ஊரின் உருவகங்களை மீறாமல், இளவயதிலிருந்தே வீடு வேலை செய்ய ஊக்குவிக்கப் படும் பெண் குழந்தைக்கும், ‘இதெல்லாம் ஆம்பளைங்க செய்யற வேலை’ என்கிற வகையறா பணிகளில் ஈடுபடுத்தப் படும் ஆண் குழந்தைக்கும், இப்படியாக அவர்கள் மீது திணிக்கப் படுவது ஆணாதிக்கக் கட்டமைப்பின் அதிகாரம் என்பதே புரியாமல், அதிலேயே ஊறி வளர்ந்து, அதையே அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்துகின்றனர்.
இதை மீறி ஆண் பிள்ளைகளுக்கு வீட்டு வேலை, சமையல் ஆகியன சொல்லிக் கொடுத்து வளர்க்கும் போதும், பெண் பிள்ளைகளை படிப்பு, சுதந்திரம், தைரியம் என்று வளர்க்கும் போதும், ‘இப்படியா பிள்ளை வளர்ப்பாங்க?’ என்ற கேள்விகள் எழும். ‘நம்முடைய சம்பிரதாயத்துக்கு விரோதமாக பிள்ளை வளர்க்கிறார்கள்’ என்கிற குற்றச்சாட்டு எழும்.
மேற்கூறிய சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பின் படி, ஒரு நல்ல குடும்பப் பெண்ணுக்கான அடையாளம் இவை என்று அறியப்படுகின்றன:
சிறுவயது முதலே பணிவு, எதிர்த்து பேசாதிருத்தல், இட்ட பணிகளை செய்தல், ‘இதை மட்டுமே பெண் செய்யலாம்’ என்ற கட்டுக்குள் அடங்கி வளரும் ‘பண்பாடுடைய பெண்’ ஆகவே பெண் குழந்தைகள் வார்க்கப்படுகிறார்கள்.
தன்னுடைய எல்லாத் தேவைகளுக்கும், அப்பா, சகோதரன், கணவன், மகன் என்ற ஒரு ஆண் உறவைச் சார்ந்தே இருக்க பெண்கள் பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.
படித்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கூட இது மட்டுமே பெண்கள் செய்யும் வேலைகள் என்று பரிந்துரைக்கப்படுகின்றன. டீச்சர் வேலை, நர்ஸ் மற்றும் வங்கி வேலை ஆகியன பெண்ணுக்கு உகந்தவையாகவும், போலீஸ், ராணுவம், அறிவியல் ஆராய்ச்சி போன்றவை ஆண்களுக்கான வேலை என்றும் சொல்லப்பட்டு விடுகின்றன.
இதற்கெல்லாம் மேலாக, குடும்பத்தின் கௌரவம் என்பதை சுமக்கும் பாரம் பெண்களின் தலையிலேயே விழுகிறது. குடும்ப கௌரவத்திற்காக பெண்கள், பொருந்தாத திருமணங்களை பொறுத்துக்கொண்டு, பல்லைக் கடித்துக் கொண்டு வாழ்வது இங்கே அநேகம் வீடுகளில் நிகழும் நிதர்சனம்.
இதில் ‘ஆண் பிள்ளை தான் அந்த குடும்பத்தின் வாரிசு, அடையாளம்’ என்கிற கருத்து வேறு.
‘மகள் என்பவள் எப்படி என்றாலும் அடுத்த வீட்டுக்கு செல்ல வேண்டியவள்’ என்கிற நம்பிக்கையின் காரணமாக, மணமான பெண்ணை அன்னியமாகவே பார்க்க சொல்கிறது சமுதாயம். ‘அவள் வேற வீட்டுக்கு வாழப் போன பெண்’ என்பதால், அவளைச் சார்ந்து அவளது பெற்றோர்கள் இருப்பதையோ, அவளிடம் இருந்து பொருளாதார ரீதியாகவோ, வேறு விதமாகவோ உதவிகள் பெறுவது ஒரு அவமானமாகவே கருதப்படுகிறது.
வேலைக்கு செல்லும் பெண்ணாகவே இருந்தாலும், கணவனைச் சார்ந்து வாழும் பெண் தான் குடும்பப் பெண் என்கிற ஒரு பிம்பமும் இங்கே உருவாக்கப்பட்டுள்ளதால் அந்த எதிர்பார்ப்பையும் பெண்கள் பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது.
நிறைய வீடுகளில், பதின்பருவ பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையே ஒரு திரை இருக்கிறது. இந்திய சமூகத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான வெளிப்படையான, தோழமையை அடிப்படையாய் கொண்ட, மனம்திறந்து பேசும் சூழல் இருப்பதில்லை.
அந்தரங்க விஷயங்களான இளவயதில் ஏற்படும் ஈர்ப்பு, பாலியல் சார்ந்த நேர்மறையான புரிதல் என்று மட்டுமில்லை; தனக்கு பிடித்த தொழில்துறை எது, எதிர்கால திட்டம், பணி சார்ந்த விருப்பங்கள் போன்ற விஷயங்களை கூட பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் அமைவது கூட சராசரிக்கும் குறைவாகவே உள்ளது.
வளர்ந்து பெரியவர்களான பிள்ளைகள் கூட விவாகரத்து, திருமணத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள், கருக்கலைப்பு, கருவுற முடியாமை, குழந்தைகளை தத்தெடுத்தல் ஆகிய விஷயங்களை பெற்றோர்களிடம் மனம்விட்டு பேசத் தயங்குகிறார்கள். இதனால் தங்கள் ‘குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படும்’ என்று பெரியவர்கள் மறுக்கும் சூழல் காலம்காலமாக இருந்து வருவது தான் இதற்கு காரணம். ‘ஏதாவது பேசி உறவு கெட்டுப் போய் விடக்கூடாதே’ என்கிற தயக்கம், மற்றும் அச்சம் பிள்ளைகளுக்கு எல்லா பிராயங்களிலும் உள்ளது.
உறவுகள் அன்பு சாராமல், அதிகாரம் மற்றும் ஊர் அளிக்கும் அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே அமைந்து விட்டதால் இந்த இடைவெளி ஏற்படுகிறது. இது தான் ஆணாதிக்கத்திற்கும் அடித்தளம். ஆனால், புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பெற்றோர்களும் அவர்கள் பிள்ளைகளாக இருந்தபோது இந்த சூழ்நிலையையே எதிர்கொண்டு, ‘இது தான் நடைமுறை’ என்று பயிற்றுவிக்கப் பட்டவர்கள். அவர்களும் சூழ்நிலைக் கைதிகள் தான்.
குடும்பங்களுக்குள் இரண்டறக் கலந்து விட்ட இந்த ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை நம் சமூகத்தை பீடித்திருக்கும் பெண்ணடிமை ஒழியாது. இது மாறவேண்டும். நம்முடைய வீடுகளில் இருந்தே இந்த மாற்றங்கள் தொடங்க வேண்டும்.
பிள்ளைகளை ஆண் பெண் பேதம் பார்க்காமல், எல்லாப் பிள்ளைகளுக்கும் எல்லா பொறுப்புகளும், வாய்ப்புகளும் சமமாக வழங்கப்படும் வீடுகளில், சமத்துவம் சாத்தியம் ஆகிறது.
இதை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு வகையில் பாதி வெற்றி தான். முயன்று பார்ப்போம், வாருங்கள்.
பட ஆதாரம்: ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம்
2 teens 'too young to have an opinion' whose decade long friendship is defined by a love for books, politics, feminism and malayalam cinema read more...
Please enter your email address