வேலியே பயிரை மேய்ந்த துணிகரம் : ஆசிரியரே மாணவிகளை தகாத முறையில் துன்புறுத்திய வழக்கு

சென்னையின் பிரபல பள்ளி ஒன்றில் மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரின் வழக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல பள்ளியில், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆசிரியரின் வழக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைப் பருவத்தின் குறிப்பிடத்தக்க பகுதி பள்ளிகளில் செலவிடப்படுகிறது. பிஞ்சு உள்ளங்களின் பல்வேறு திறமைகளையும் ஆர்வங்களையும் கண்டறிந்து ஆராய்வதற்கும், நற்பண்புகள் மற்றும் மனிதநேயம் வளர்ப்பதற்கும் பள்ளிகள் மட்டும் கல்வி நிறுவனங்கள், பாதுகாப்பான இடங்களாக விளங்க வேண்டியது மிக அவசியம்.

Original in English | மொழி பெயர்ப்பு: சிந்து பிரியதர்சினி

ஆனால், சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மீது எழுந்துள்ள புகார்கள், “உண்மையில் பள்ளிகள் நாம் நினைக்கும்படியான பாதுகாப்பான இடங்கள் தானா?” என்கிற கேள்வியை எழுப்பியுள்ளன.

சம்பந்தப்பட்டுள்ள பள்ளியின் தற்போதைய மாணவிகள் மட்டுமின்றி முன்னாள் மாணவியர்களில் பலரும் அவர்களுக்கு உயர்நிலை பள்ளியில் பிசினஸ் ஸ்டடீஸ் (வணிகவியல்) மற்றும் அக்கௌண்ட்ஸ் (கணக்கியல்) பயிற்றுவித்த ஆசிரியர் மீது ‘தவறான நடத்தை மற்றும் பாலியல் துன்புறுத்தல்’ குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரின் கோரப்பிடியில் சிக்கி அவதியுற்ற மாணவியர் சிலர், க்ருபாளி எனும் முன்னாள் மாணவியை அணுகி தாங்கள் எதிர்கொண்ட அல்லல்களை தெரியப்படுத்தினர். இதைத் தொடர்ந்து க்ருபாளி, பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பாக அவர்களது குறைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

ஆசிரியருக்கு எதிரான புகார் பட்டியல், ஆபாசமான உரையாடல்கள், நேரடியான பாலியல் சீண்டல்கள் என நீள்கிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் தகாத முறையில் தொடுதல், கொச்சைப்படுத்தல் (ஸ்லட்-ஷேமிங்), வெளியிடங்களில் உல்லாசமாக சந்திக்க அழைத்தல், பொருத்தமற்ற நேரத்தில் அழைத்தல், உடல் தோற்றத்தைப் பற்றிய ஆபாசமான கருத்துக்களை வெளியிடுதல், மேல் சட்டை அணியாமல் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளுதல் மற்றும் மாணவர்களுக்கு ஆபாச இணைப்புகளை அனுப்புவது போன்ற கூடாத செயல்களில் ஈடுபட்டு தங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவியர் தெரிவித்துள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினருக்கு அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை பார்க்கையில், இந்த பணியிடை நீக்கம் மிகச் சிறிய தண்டனையே – அதிலும் காலம்சென்று தாமதமாக அளிக்கப் பட்ட தண்டனையே.

இந்த ஆசிரியரால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டுமே அதீத அதிர்ச்சியூட்டுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர், தொடர்ந்து பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் இது போன்ற துணிகர ஆபாசச் செயல்களில் ஈடுபட்டு, சிறார்கள் பலரை துன்புறுத்தியுள்ளார் என்பது தெரிய வருகிறது. அதே நேரத்தில் பள்ளி நிர்வாகம் மாணவர்களின் நல்வாழ்வுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி, உறுதிப்படுத்த தவறிவிட்டது என்பதும் வெளிச்சமாகிறது.

இத்தனை ஆண்டுகளாக பள்ளி அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

புகார் அளித்த அனைத்து மாணவர்களின் சார்பாக, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரின் மீது தகுந்த கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவி சேத்தனா கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர்பதவியில் உள்ள ஆண்கள் பலர், தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டோரை துன்புறுத்தும் செயல்களில் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டு வருவதோடு, சந்தர்ப்பவசமாக கையும் களவுமாக அகப்படும்போதெல்லாம், அதே அதிகாரத்தை உபயோகித்து தப்பிக்கவும் செய்கிறார்கள். பிரச்சனை தீர்ந்த பின், மீண்டும் அதே வன்மத்தை தொடர்கிறார்கள். இது ஒரு தொற்றுநோயாக மாறிவிட்டது.

அவர்களுக்கு இந்த அதிகாரத்தை அளிக்கும் அமைப்புகள், இதை கண்டும் காணாதது போல் விட்டு விடுகின்றன. அவர்களுக்கு மதிப்பிற்குரிய ஸ்தானத்தை அளித்திருக்கும் சமூகமும் இதை கண்டும் காணாமல் விட்டு விடுகிறது. இதே போல் உயர் அதிகாரத்தில் உள்ள சக அதிகாரிகளும் – ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் – இதைக் காணாதது போல் நடந்து கொள்கின்றனர்.

இதை விட மோசம் யாதெனில், துஷ்பிரயோகம் செய்தவரின் பெயர் பாதிக்கப்பட்டால் தங்கள் பெயரும் கெட்டுவிடும் என்கிற அச்சத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை பாதுகாக்க முழு அமைப்பும் ஒன்று சேர்ந்து செயல்படுகிறது.

இது போன்ற அமைப்புகளுக்கு, பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் காட்டிலும் துஷ்பிரயோகம் செய்தவரின் பெயர் மற்றும் அந்தஸ்து முக்கியமாகிப்போவது தான் வேதனை.

“இப்படியாக, இது போன்ற அமைப்புகள்/நிறுவனங்கள் குற்றவாளியின் நற்பெயருக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் போதெல்லாம், ​​அவை அதிகார வெறியில் வேட்டையாடுபவர்களை ஊக்குவிக்கின்றன. ‘தனக்கு எதுவுமே நடக்காது’ என்ற இறுமாப்பில் இந்த மனிதர் இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. எத்தனை ஆண்டுகளாக இந்த நசை வேலைகளை செய்து வந்திருக்கிறார் என்று யாருக்கு தெரியும்?”, என்று சம்பந்தப்பட்ட பள்ளியின் மற்றொரு முன்னாள் மாணவரும், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சௌம்யா ராஜேந்திரன் தன்னுடைய கருத்தை ஃபேஸ்புக் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை பொறுத்தவரையில், பாதிக்கப்பட்டவர்கள் சிறார்களாக இருந்திருக்கிறார்கள். இதில் முரண் யாதெனில் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியரே, பள்ளியின் பாலியல் துன்புறுத்தல் புகார்களை கையாளும் குழுவின் தலைவராக இருந்திருக்கிறார் என்று மற்றோர் முன்னாள் மாணவர் பகிர்ந்துள்ளார்.

ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்கி, மாணவர்களின் புகார்களை நிவர்த்தி செய்ய வேண்டிய பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்களின் குரல் வெளிவராத வண்ணம் இப்படி ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி இருப்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.

“மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நிர்வாகத்திற்கு தெரிவிக்க மாணவர்கள் முயற்சித்ததாகவும், அதை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதும் தான் மேலும் அவர்கள் காது கேளாதவர்களாக மாறினர்” என்று சௌம்யா ராஜேந்திரன் பகிர்ந்துள்ளார்.
பள்ளியின் முன்னாள் மனைவி க்ருபாளி பகிர்ந்த புகார்களில், பாதிக்கப்பட்டவருள் ஒருவர், அவர்களது ‘டீன்’ எனப்படும் உயர் அதிகாரத்தில் உள்ள ஆசிரியரை அணுகியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மற்றொருவர், அந்த ஆசிரியரின் தவறான நடத்தை பற்றிய புகார்களை பல வருட காலமாக நிர்வாகம் பெற்று வந்துள்ளது என்பதைப் பற்றியும் பேசி உள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகமோ, இது குறித்து தங்களுக்கு எதுவும் இதற்கு முன் தெரியாது என்று கூறி பொறுப்பினை தவிர்க்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.

இது தவிர்த்து, ‘செக்ஸிசம்’ எனப்படும் பெண்களை மட்டம் தட்டுவது, வகுப்புவாதம் மற்றும் சாதிவாதம் ஆகியவற்றையும் பல ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் ஒரு வழக்கமாகவே செய்து வருகிறார்கள் என்பதும் அந்தப் பள்ளியின் மாணவர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஒரு விஷச் சூழலே அந்தப் பள்ளியில் இருந்து வந்திருக்கிறது என்று அறிய முடிகிறது.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கே ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்புகள்

2019 டிசம்பரில் கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் இதே போன்ற ஒரு சம்பவத்தில், அரசியல் அறிவியல் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒரு பேராசிரியருக்கு எதிராக ஐ.சி.சி. (ICC) க்கு முறையான புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து மேலும் இரண்டு மாணவர்கள் அதிகாரப் பூர்வமாக புகார்ப் பதிவு செய்தனர். மேலும் பலர் சமூக ஊடகங்களிலும் இதைப் பற்றி பேச, மாணவர்கள் கோரியபடி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பொதுக் கூட்டத்தில் அந்த ஆசிரியர் முறையான விசாரணைக்கு உட்ப்படுத்தப் பட்டார்.

ஆனால் பிரச்சனைக்கான சரியான தீர்வு கிடைத்த பாடில்லை; இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களால் ஒரு அதிகாரப்பூர்வமான இயக்கம் தொடங்கப்பட்டு, அனைத்து மாணவர்களும் குற்றம் சுமத்தப்பட்ட பேராசிரியரின் வகுப்புகளை புறக்கணித்தனர். அதிகாரபூர்வமான புகாரைப் பதிவு செய்த பின் முறையாக விசாரித்து, விசாரித்த விவரங்களை நூறு நாட்களுக்குள் வெளியிட ஐ.சி.சி கடமைப்பட்டுள்ளது.

என்றாலும் இந்த சம்பவம் நடந்து பதினெட்டு மாதங்களுக்கும் மேலாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் இன்றளவும் தொடர்ந்து வகுப்புகள் எடுத்து வருகிறார் என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இப்படியாக பொறுப்பில் உள்ள அமைப்புகள், அதிகாரத்தில் உள்ள ஆண்களுக்கு ஆதரவாக செயல்பட்டு மோசடி செய்கின்றன.

இன்று நம்மிடம் இணையதளங்கள், இணையவழி பொதுவெளிகள் உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் குரல் அங்கே எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் பாதிக்கப்படும் எல்லோருக்கும் இது போல் குரல் எழுப்புதல் சாத்தியமா? பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நியாயம் கிடைக்குமா? போராடித் தான் அதை பெற வேண்டுமா?
ஆம் எனில், நிச்சயமாக இது ஒரு ஒரு மகா யுத்தமே.

பட ஆதாரம்: Brainsil from Getty Images Signature Free for CanvaPro

About the Author

Kamalika

A postgraduate student of Political Science at Presidency University, Kolkata. Describes herself as an intersectional feminist and an avid reader when she's not busy telling people about her cats. Adores walking around and exploring read more...

2 Posts | 3,046 Views
All Categories