பிரஞ்சல் பாட்டீல் ஐ.ஏ.எஸ்: இந்திய ஆட்சிப் பணியில் அமர்ந்த முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி

தடைகளை மீறி சாதித்த பிரஞ்சல் பாட்டீல் அவர்களுடைய தைரியம், நமக்குள் ஒரு புது நம்பிக்கையை விதைக்கவே செய்கிறது.

பிரஞ்சல் பாட்டீல் ஐ.ஏ.எஸ் நிச்சயமாக பெண்களுக்கு ஒரு சிறந்த முன்னோடி! தடைகளை மீறி சாதித்த பிரஞ்சல் பாட்டீல் அவர்களுடைய தைரியம், நமக்குள் ஒரு புது நம்பிக்கையை விதைக்கவே செய்கிறது.

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சில சிக்கல்கள், நம்மை கீழே தள்ளி, ஒருவித விரக்தியை ஏற்படுத்தி வாழ்வில் பிடிப்பு இன்றி செய்து விடுகிறது. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நாம் எதிர்கொள்ள வேண்டிய சில சவால்களின் பயம் காரணமாக நம்மில் பலர் வாழ்க்கையிலிருந்து பின்வாங்கி விடுகிறோம்.

ஆனால் உளவலிமை கொண்டவர்க்கு, ‘என்ன நேர்ந்தாலும் நான் மீண்டும் உயர்ந்தெழுவேன்’ என்ற உத்வேக ஜ்வாலை உடையவர்க்கு, கையாள முடியாத சவால் என்று எதுவும் இல்லை என்று நம்புகிறேன்.

பிரஞ்சல் பாட்டீல், நம் நாட்டின் ‘ஐ.ஏ.எஸ்’ பணியில் அமர்ந்துள்ள முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற பெருமைக்குரியவர்.

தற்சமயம் நாட்டின் தலைநகரான புதுதில்லியின் துணைநிலை நகராட்சி ஆணையர், அதாவது ‘டெபுட்டி முனிசிபல் கமிஷனர்’ ஆக பொறுப்பேற்று பணியாற்றி வரும் இவர், நம் அனைவர்க்கும் ஒரு முன்னோடி என்பதில் ஐயம் இல்லை.

பெண்ணாக பிறப்பவர்கள் முடங்க வேண்டியதில்லை

பெண்ணாக பிறந்ததால் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டதற்கும், அதை மீறி நல்ல உத்யோகத்தில் இருந்தாலும் வீட்டிற்கு வந்து வீட்டுப்பணிகளையும் செய்ய வேண்டிய சூழ்நிலையையும் எண்ணி நொந்து கொள்பவர் நம்மில் பலர் உள்ளோம்.

இவை அனைத்தும் உண்மையே; இன்னும் பெண்கள் பல விதங்களில் அனுதினமும் பல இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றோம்.

ஆனால் இத்தனை சிக்கல்களுக்கும் இடையில், தடைகளை மீறி சாதித்த பிரஞ்சல் பாட்டீல் ஐ.ஏ.எஸ் அவர்களுடைய தைரியம், நமக்குள் ஒரு புது நம்பிக்கையை விதைக்கவே செய்கிறது.

“எந்த சூழ்நிலையிலும் நாம் தோல்வியை ஒப்புக்கொண்டு தளர்ந்து விடக்கூடாது, ஏனெனில் நம்முடைய விடாமுயற்சி, நமக்கு நல்வழி காட்டுவது திண்ணம்” என்று கூறுகிறார், 33 வயது பிரஞ்சல் பாட்டீல்.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நிச்சயம் கை கொடுக்கும்!

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் உல்ஹாஸ் நகரைச் சேர்ந்த பிரஞ்சல் பாட்டீல் ஆறு வயதில் தன்னுடைய பார்வையை இழக்கும்படி நேர்ந்தது.

என்றாலும் மனமுடைந்து போகாத இந்த லட்சியப் பெண், புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் அறிவியல்’ பிரிவில் இளநிலை பட்டத்தையும் ‘பன்னாட்டு உறவுகள்’ பிரிவில் முதுகலை பட்டத்தையும் வெற்றிகரமாக ஈன்றார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்த பிற்பாடும், 2016 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயின் அக்கௌன்ட்ஸ் துறையில் பிரஞ்சல் பாட்டீல் அவர்களுக்கான பணி நியமனம் மறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற சூழ்நிலையிலும், தன்னுடைய லட்சியக் கனவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்த பிரஞ்சல் பாட்டீல், மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வினை எழுதி, முன்பை விட சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் அடைந்தார்.

2016 ஆம் ஆண்டில் 773 வது ரேங்க் எடுத்து தேர்ச்சி அடைந்த பிரஞ்சல் அவர்கள், அதற்கு அடுத்த ஆண்டிலேயே 124 வது ரேங்க் எடுத்து சீரிய மதிப்பெண்களுடன் மிகப் பெரிய வெற்றி கண்டார்.

இதைத் தொடர்ந்து, தன்னுடைய பயிற்சிக் காலத்தின் போது எர்ணாகுளத்தின் அசிஸ்டண்ட் கலெக்டராக நியமிக்கப்பட்டார், பிரஞ்சல் பாட்டீல்.

தமிழ்நாட்டிலும் இதே போன்ற சாதனைப் பெண் ஒருவர் இருக்கிறார்!

இது போலவே, நம்முடைய மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி அவர்களும் 2020 ஆம் ஆண்டில் தடைகளை உடைத்து ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வாகி உள்ளார்.

மதுரை சிம்மக்கல் பகுதியருகே உள்ள மணிநகரத்தை சேர்ந்தவரான பூரண சுந்தரி தன்னுடைய ஐந்தாம் வயதில் பார்வையை முழுமையாக இழந்த போதிலும், தன்னம்பிக்கையோடு முயன்று இன்று இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாகி இருப்பது தமிழ் மண்ணுக்கே பெருமை!

பெண்கள் எந்த சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டிருந்தால், லட்சியம் நிறைவேறும் என்று வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள், இந்த சாதனைப் பெண்கள்!

பட ஆதாரம்: YouTube

About the Author

Ashiqha Sultana

Professor by profession, gypsy soul, loves everything ethnic, believes in love, compassionate epicurean and a smart foodie ❤️ read more...

2 Posts | 2,545 Views
All Categories