உங்கள் வீட்டிலேயே உங்களுக்கு உற்ற துணையாய் இருக்கக்கூடும் உங்கள் நாத்தனாருடன் நட்பு பாராட்டுங்கள்!

திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் ஒன்றி சுமுகமாய் வாழ, உங்கள் நாத்தனார் உங்களுக்கொரு ஆசீர்வாதமாக இருக்கக் கூடும்!

‘உறவுகளுக்குள் பெண்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்ட முடியாது’ என்ற பிம்பத்தை உடைத்து தோழமைக் கரம் நீட்டினால், திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் ஒன்றி சுமுகமாய் வாழ, உங்கள் நாத்தனார் உங்களுக்கொரு ஆசீர்வாதமாக இருக்கக் கூடும்!

ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கையில், அவளது கணவன் உடன் பிறந்த சகோதரி, அதாவது நாத்தனார், மிக முக்கியமான உறவு என்பதில் ஐயம் இல்லை.

‘கணவரின் குடும்பத்தில் உள்ள பெண்கள் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை செழிக்க வைக்கவோ உடைக்கவோ முடியும்’ என்பது நிதர்சனம்.

அவர்கள் வில்லன்களாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம் என்று நம்ப வைத்திருக்கிறது, ‘பெண்கள் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டும்’ என்று ஆக்கி வைத்திருக்கும் இந்த ஆணாதிக்க சமூகம். இந்தக் கட்டமைப்பின் காரணமாகவே நாத்தனார்களை நம்மில் பலர் வெறுக்கிறோம், அல்லது கண்டு பயப்படுகிறோம்.

Original in English|மொழிப்பெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி

திரைப்படங்களும் சீரியல் தொடர்களும் தொடர்ந்து இப்படியே பெண்களை சித்தரித்து வருகின்றன. ஊடகங்களில் வலம் வரும் இது போன்ற சித்தரிப்புகள், நம்பிக்கையோடு வாழ வரும் பெண்ணைக் கூட குறுகிய மனப்பான்மையில் இருக்கும்படி செய்து விடுகின்றன. ஆனால், அதை மாற்றுவதற்கான நேரம் இது!

திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், புகுந்த வீட்டு உறவுகளைப் பற்றிய பயத்தை விடுத்து அன்புடன் அவர்களை அணுக, மன முதிர்ச்சியடைவது முக்கியம். திருமணம் என்பது உங்கள் துணையுடன் நீங்கள் ஒன்றாகும் ஒரு சடங்கு மட்டுமல்ல, இரு குடும்பங்கள் இணையும் வைபவம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். கணவன் மனைவி, இருவரும் மற்றவரின் குடும்பத்தின் ஒரு அங்கமாக இணையும் ஒரு அழகிய தொடக்கம் என்பதை உணர வேண்டும்.

இப்படி ஒரு நேர்மறையான எண்ணச் சூழலில், திருமணமான எந்தவொரு பெண்ணுக்கும் அவளது கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த உறவுகளுள் மிகச் சிறந்த ஆதரவாக, ஒரு நல்ல ஸ்நேகிதியாக அவளது நாத்தனாரே அமையக் கூடும்!

‘இதெல்லாம் நடக்கிற விஷயமா?’ என்று நீங்கள் நகைப்பது தெரிகிறது.

வாஸ்தவம் தான்; பெண்ணுக்கும் அவளுடைய நாத்தனாருக்கும் இடையிலான உறவு பூனை-எலி போன்றது என்று பல தலைமுறைகளாக நம்ப வைக்கப் பட்டிருக்கிறோம். இது போன்ற பிம்பங்களுக்கிடையே, ஒரே வீட்டுப் பெண்களுக்கிடையில் வீட்டிற்குள்ளேயே ஒரு நல்ல வலுவான நட்பு உருவாகக் கூடும் என்பதை நாம் காணத் தவறிவிட்டோம்!

எந்தவித பாரபட்சமும் இல்லாமல் உங்கள் நாத்தனாரை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

பயம், சந்தேகம் போன்ற தவறான எண்ணங்களுடன் துவங்கும் எந்த உறவும் நீடிக்காது என்பது சத்தியம். எனவே, எதிர்மறையான எண்ணங்களை ஒதுக்கி வைப்பது முக்கியம். உங்கள் நாத்தனாரை புரிந்து கொள்ள, அவரை அவராக அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவரும் உங்களை புரிந்து கொள்ள வாய்ப்பு அமைத்து கொடுங்கள். மற்ற பெண்களுடனான உங்கள் நட்பை எப்படி தொடங்கியது என்று யோசித்து பாருங்கள் – அப்படியே உங்கள் நாத்தனாருடனான ஒரு நல்ல நட்புக்கு அஸ்திவாரம் இடுங்கள்.

யார் அறிவார், உங்களுக்கும் உங்கள் நாத்தனாருக்கும் ஒருமித்த கருத்துக்கள் இருக்கக்கூடும். அதுவே உங்களுக்குள் நல்ல புரிதலையும் மதிப்பையும் அன்பையும் ஏற்படுத்தக் கூடும்.

உங்கள் நாத்தனாரே புகுந்த வீட்டில் உங்களுக்கு வழிகாட்டியாக…

திருமணத்திற்குப் பிறகு, வேறொரு வீட்டில், ஏற்கனவே இறுகிப் பிணைந்த குடும்ப உறவுகளுக்குள் புதிதாக ஒருவர் நுழைந்து, அவர்களுள் ஒருவராக வாழ்க்கையைத் தொடங்குவது சற்று கடினமாக விஷயமாக இருக்கலாம். இந்த நிலையில், உங்கள் கணவர் உங்களுக்கு அனுசரணையாக இருந்தாலும், அவரது ஆதரவு மட்டுமே போதுமானதாக இருக்காது.

புகுந்த வீட்டுற்குள் வந்த புது மருமகளுக்கு நாத்தனார் மிக நல்ல ஆதரவாக இருக்க முடியும். வீட்டு வேலைகள், சமையல் என பல விதமாக உங்கள் நாத்தனார் உங்களுக்கு வழிகாட்டக் கூடும். தெரியாத வீட்டில், புரியாத சூழலில் உதவிக்காக மாமியார் உட்பட குடும்பத்தில் உள்ள மற்ற பெரியவர்களிடம் செல்வதற்கு புது மருமகள் தயங்குவது இயல்பு. ஆனால் நாத்தனார் எனும் தோழி இதற்கு அப்பாற்பட்டவராக அமைந்து விட்டால், அதை விட சிறப்பு இல்லை.

வீட்டில் உள்ளவர்களை புரிந்து கொண்டு அனுசரித்து நல்லவிதமாக கையாள்வதற்கான சில சூட்சும ரகசியங்களை அவர் உங்களுக்குத் தெரியப்படுத்தக்கூடும்.

மோசமான நாட்களில் உங்கள் நாத்தனாரே உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் தோழி

உங்கள் கணவர் அல்லது மாமியாருடன் நீங்கள் சண்டையிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட ஒரு நாளில் உங்கள் நாதோழியாக மாறி உங்களை அரவணைத்துக் கொள்ளக் கூடும்.
தேவைப்பட்டால் முழு குடும்பத்தினரின் முன்னிலையில் உங்களுக்கு துணை நின்று உங்கள் பக்கத்தை எடுத்துச் சொல்லும் அளவிற்கு அவள் செல்லக் கூடும்!

புதிய மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை செய்து பார்க்க நீங்கள் முயற்சிக்கும்போது அவர் உங்களுடன் கூட்டாளியாக இணைந்து கொள்ளலாம். ஷாப்பிங் , பயணங்கள், ஃபேஷன் கருத்துகள், பெண் முன்னேற்றம் என்று அனைத்தையும் ஆவலுடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்காக ஒருவர் இருக்கிறார் என்று எப்போதும் நம்பும் ஒருவராக அவள் இருக்கக் கூடும்.

உங்கள் நாத்தனாரும் உங்களை அவருடைய உலகத்திற்குள் அனுமதிக்கக் கூடும்

நட்பு என்பது இருவழிப் பாதை. மெல்ல மெல்ல உங்கள் நாத்தனாருக்கும் உங்கள் மீது அழகிய ஆழமான அன்பு மலரக்கூடும். தன்னுடைய சகோதரருடன் அதாவது நெருக்கமாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது, ​​உங்களுடனான அழகான புது உறவால், தன்னுடைய பிரச்சினைகளுடன் அவர் உங்களிடம் வரக்கூடும். அவள் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் உங்களிடம் பகிர்ந்து கொண்டு உங்கள் கருத்துகளை அவர் நாடக்கூடும்.

நம்பிக்கை மற்றும் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த உறவு உங்கள் இருவருக்கும் ஒரு நல்ல ஆதரவாக அமையும். இந்த நட்பு உங்கள் குடும்பத்தின் தனிச்சிறப்பாக ஒளிர்விடும். ஒருவேளை, இது உங்கள் கணவரை கொஞ்சம் பொறாமைப்பட வைக்கலாம், ஆனால், அவர் நேசிக்கும் இரண்டு பெண்களுக்கு இடையிலான இந்த ஆரோக்கியமான மற்றும் வேடிக்கையான நட்பைக் கண்டு அவரும் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்.

ஆனால் இத்தனை அழகான ஒரு அமைப்பு உருவாக உலகம் அவ்வளவு எளிதாக விட்டு விடாது. பழைய கதைகளைப் பேசி, பெண்ணுக்கு பெண்ணை எதிரியாய் சித்தரிக்கும். இந்த நிலையில் நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். எதிர்மறை எண்ணங்களை உறவுகளுக்குள் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும். எப்போதும் மனம் திறந்து இருப்பது நம் நாத்தனாருடன் நமக்கு மிகவும் மகிழ்ச்சியான நட்பைத் தேடித் தரும்.

எந்த ஆணாதிக்க எச்சங்களுக்காகவும் இந்த அற்புதமான நட்பை நாம் இழந்து விடக்கூடாது, தோழிகளே!

பட ஆதாரம்: ‘அக்காபாய் சாசுபாய்’ தொடர்

About the Author

1 Posts | 1,389 Views
All Categories