அடிப்படை அறிவினை இளமையிலேயே ஆழப் பதியும்படி புகட்டிடுவோம்

நமக்கு நல்லது, கெட்டது சொல்லித்தருவது பெற்றோர்களின் இயல்பு. ஆனால் எவ்வளவு காலம் பிள்ளைகளை பாதுகாத்து, அறிவுரை சொல்லி உடன்வர அவர்களால் இயலும்?

நமது நன்மை கருதி நமக்கு நல்லது, கெட்டது சொல்லித்தருவது பெற்றோர்களின் இயல்பு. ஆனால் எவ்வளவு காலம் இது போன்று பிள்ளைகளை பாதுகாத்து, அறிவுரை சொல்லி உடன்வர அவர்களால் இயலும்?

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பிரத்யேகக் கலை என்று சொன்னால் அது மிகையாகாது.  ஒரு தாய் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளே வெவ்வேறு குணங்களோடு வளரும் போது, உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள அத்தனை பெற்றோர்களும் அவரவர் பிள்ளைகளுக்கு ஏற்றாற்போல் தனிப்பட்ட வழிமுறைகளை, உத்திகளை கையாண்டு தான் பிள்ளைகளுக்கு வாழ்க்கை விஷயங்களை அறிமுகம் செய்து வைக்கின்றனர்.

“அது சூடு, தொடக்கூடாது!” என்று சொன்னால் சில பிள்ளைகள் கேட்டுக்கொள்வர்.

“சூடு… தொட்டா ரொம்ப எரியும்… ரொம்ப வலிக்கும். ஆஅஹ்!” இப்படி செய்து சில நேரங்களில் புரிய வைக்க வேண்டும்.

ஆகையால் ஒவ்வொரு குழந்தைக்கும், அதனதன் போக்கை கவனித்தும் கணித்தும் அதற்கு ஏற்றவாறு பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கின்றனர்.

எவ்வளவு காலம் தான் சொல்லித் தருவது?

இப்படி இருக்கையில், பெற்றோர்களுக்கு இந்தக் கேள்வியும் எழலாம்: எவ்வளவு காலம் தான் இது போன்று சொல்லிக்கொண்டே இருப்பது?

உண்மையில் இதற்கு முடிவே கிடையாது. ஏன், திருமணம் முடிந்து நமக்கே ஒரு குழந்தை பிறந்த பிறகும் கூட ஏதோ ஒரு சூழலில் நாம் நமது தாயிடமோ தந்தையிடமோ கருத்து கேட்பதுண்டு. இளமையில் அவர்கள் நமக்கு வழிகாட்டியாக இருந்த காரணத்தால், மனம் முதலில் அவர்களை தான் நாடும்.

ஒருவருக்கொருவர் அருகில் இல்லை என்றாலும், தொலைபேசியில் பேசும் போது கூட,
“இராத்திரி வண்டிய பாத்து ஓட்டு. மெதுவாவே போ. மறக்காம தலைக்கவசம் போட்டுக்கோ”
என்பது போன்ற அன்பான வேண்டுகோள்கள் பெற்றோரிடம் இருந்து தானாகவே வந்து சேரும். நமக்கும், வண்டி ஓட்டிச் செல்லும் போது ‘வேகமாகப் போகலாம்’  என்ற நினைப்பு வந்தாலும் கணநேரத்திற்குள் தாயின் குரல் உள்ளுக்குள் ஒலித்து, மனம் தானாகவே அந்தச் சிந்தனையைத் தடை செய்து விடும்.

ஆக, நமக்கு நல்லது கெட்டது எது என்பதை எந்த வயதிலும் பெற்றோரிடம் கேட்டுக் கொள்வதும் தவறல்ல. அவர்கள் இளவயது முதலே நமக்கு ‘கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என்று கற்றுத்தந்ததைப் பற்றி நடப்பதும் கௌரவக் குறையல்ல.

இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் தெரியுமா? 

கவனக்குறைவால் நேரும் துயரம்

“ஹே! இங்க பாருடா! கடல் அலை ரொம்ப உயரமா எழும்புது, வா ஒரு செல்ஃபீ எடுக்கலாம்!”
“அச்சோ! உன்ன பாத்து எவ்ளோ நாள் ஆகுதுடீ! வா ஒரு செல்ஃபீ எடுக்கலாம்.”

ஆம். செல்ஃபீ எடுப்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது என்றால் அது மிகையல்ல. ஆனால், எந்த இடத்தில், எந்தச் சூழலில் எடுக்கிறோம் என்பதும் முக்கியம்.

மலைப்பிரதேச வளைவு, சரிவு, செங்குத்தான பகுதிகளில், ஆறு போன்ற ஆழமான இடங்கள் மற்றும் அணைகளின் ஓரப்பகுதிகள் ஆகிய இடங்களில் இது போன்ற செல்ஃபீ புகைப்படங்கள் எடுக்கும் போது கவனம் தேவை.

இது போன்ற சூழல்களில், கவனக்குறைவால் நிகழ்ந்துள்ள துயர நிகழ்வுகள் குறித்து நாம் அடிக்கடி செய்திகளில் பார்த்தும் கேட்டும் படித்துக்கொண்டும் இருக்கிறோம். இப்போது இங்கே பார்க்கப்போகும் செய்தியும் இது போன்ற ஒன்று தான்.

சில தினங்களுக்கு முன், திருப்பத்தூரில் இருபது வயதான சஞ்சீவ் என்ற வாலிபர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது செல்ஃபீ எடுப்பதற்காக அமர்ந்துள்ளார். செல்ஃபீ யும் எடுத்தாயிற்று. ஆனால் இது நிகழும் போது அந்த டிராக்டரையும் ‘ஸ்டார்ட்’ செய்துள்ளான். அது பின்னோக்கிச் சென்று, அருகில் உள்ள கிணற்றில் விழுந்து, அவனது விலைமதிப்பற்ற உயிரைப் பறித்து விட்டது.

டிராக்டர் போன்ற வாகனங்களை செலுத்துவதற்கு முறையான பயிற்சி அவசியம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ ‘பத்திரமாய் இருக்கணுமப்பா’ என்று தாய் சொன்னதை மறந்து, ஒரு வேகத்தில் செய்யக்கூடாததை செய்து, உயிரை இழந்தது தான் இங்கே நடந்த துயரம். 

‘அவன் வளர்ந்துவிட்டான், அவனுக்கே எல்லாம் தெரியும்’ என்று நம்பினாலும் இது போன்ற நேரங்களில் ஒரு சில வார்த்தைகள் அறிவுரையாக இல்லாமல் கனிவான வார்த்தைகளாகச் சொல்லும் பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஆனால் எவ்வளவு காலம் இது போன்று பிள்ளைகளை பாதுகாத்து, அறிவுரை சொல்லி உடன்வர அவர்களால் இயலும்? ஏதோ ஒரு கட்டத்தில் பெற்றோர்களுடைய இருப்பின்றி பிள்ளைகள் வாழும் சூழல் ஏற்பட்டே தீரும் என்பது இயற்கையின் விதி அல்லவா?

ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் பெற்றோர்களால் நம் பொறுப்புகளை சுமக்க முடியும்

நமக்கு ஒரு குறிப்பிட்ட வயது ஆகும் வரை தான் நம்மை, நம்முடைய பொறுப்புகளை நமது பெற்றோர்களால் சுமக்க முடியும். அதற்கு மேல் ஒரு கட்டத்தில், அவர்கள் நமக்கு இளமையில் அறிமுகம் செய்த நல்வழிகளையும் நெறிகளையும் பற்றி , நாமாகவே தான் நம் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதைத் தொட்டவுடன், நமக்கென்று பொறுப்புகளும் பிரச்சனைகளும் கூடும். சுயசிந்தனையுடன் அவற்றை ஏற்று எதிர்கொள்வது அழகு.

ஒரு ஆலமரத்தின் நிழலில் இன்னொரு ஆலமரம் துளிர்க்கவோ வளரவோ முடியாது. அப்படித் தான் நாமும் பெற்றோரின் நிழலிலேயே வாழ முடியாது. ஆனால் அவர்கள் சொன்ன வார்த்தைகள், எச்சரிக்கைகளை நாம் மனதில் கொள்வது துணையாய் அமையும்.

கலிலியோவின் பெற்றோர் அவருக்கு உலகம் தட்டை என்று சொல்லி வளர்த்து இருந்தாலும், அவர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆராய்ந்ததன் விளைவாகத் தான் ‘பூமி என்பது கோளம்’ என்கிற அறிவியல் உண்மை புலப்பட்டது. ஆகவே கண்மூடித்தனமாக முன்னோர்கள் சொன்னதை பின்பற்றுவதில் முன்னேற்றம் தடைபடலாம். இது போன்ற சூழல்களில் நாம் பகுத்தறிவோடு சிந்தித்து முரண்படலாம்.

ஆனால் பாதுகாப்பு, உடல்நிலை, தற்காப்பு போன்ற உயிரைப் பேணும் விஷயங்களில் நம்மைப் பெற்றுப் பேணி வளர்த்த பெற்றோரின் வார்த்தைகளை நினைவில் கொள்வது சாலச்சிறந்தது.

பிள்ளைகள் மனதில் பதியும்படி கனிவுடன் சொல்லிவைப்போம்

‘செய்யும் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை’ என்று பெற்றோர்கள் கூறியதை எந்த வயதிலும் பிள்ளைகள் மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் மனதில் நன்கு பதியும் படியாக பெற்றோர்களும் நல்லறிவை பிள்ளைகளுக்குப் புகட்டவேண்டும். 

நாம் தேய்பிறையானாலும் நம் பிள்ளைகள் வளர்பிறையாய் வளரட்டும். அதற்கு நாம் இல்லாவிட்டாலும் அவர்களுடைய முன்னேற்றத்திற்கும் நிதானத்துக்கும் நல்லபடியாக வாழ்வதற்கும் தேவையான அடிப்படை அறிவினை இளமையிலேயே ஆழப் பதியும் வண்ணம் புகட்டிடுவோம்.

பட ஆதாரம்: ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படம்

About the Author

13 Posts | 18,403 Views
All Categories