Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
"நீங்கள் ஒரு நல்ல அம்மாவா என்று உங்களை மதிப்பிட்டு அங்கீகாரம் அளிக்க வல்லவர் இங்கு யாரும் இல்லை" என்று முன்மொழிகிறார், ஹரிப்ரியா மாதவன்.
“நீங்கள் ஒரு நல்ல தாயா என்று உங்களை மதிப்பிட்டு அங்கீகாரம் அளிக்க வல்லவர் இங்கு யாரும் இல்லை” என்று முன்மொழிகிறார், ஹரிப்ரியா மாதவன்.
“எதுவும் சொல்லாமலே குழந்தையின் மனதில் உள்ளதை புரிந்து கொள்பவளே தாய்.”“நம் நலத்திற்காக தன்னலம் தொலைத்து நாளெல்லாம் உழைத்து கரைபவள், தாய்.”“அம்மா, மல்டி-டாஸ்கிங்* சூப்பர் வுமன்!”“உன்னுடைய எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுபவள், உன் தாய்.”“உலகத்திலேயே களங்கமற்ற, முழுமையான மனிதக்குலத் தோன்றல், என் அம்மா.”“அம்மா, நிபந்தனையற்ற அன்பின் வாழும் வடிவம்!”
இப்படியாக உலகம் உங்களை ‘அம்மா என்றால் இப்படித்தான்; இவளே தாய்’, என்று குறுகிய வட்டங்களுக்குள், பெட்டிகளுக்குள் அடைத்து வைப்பதில் மும்முரமாக உள்ளது. ஏன், உங்கள் பிள்ளைகளே ‘இது தான் தாய் என்பவளுக்கான அடையாளம்’ என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கலாம்.
இந்த வேளையில், அம்மாக்களிடம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
‘அம்மா என்கிற அடையாளத்துடன் தொடர்புப் படுத்தப்படும் இந்த வார்த்தைகள் எனக்கானவை இல்லை, அதற்கான தகுதியை இன்னும் நான் அடையவில்லை. நான் ஒரு நல்ல அம்மா தானா?’ என்ற கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருந்தால், தோழி, இது உங்களுக்காக.
இந்த உலகம் சொல்லும் தாய்மைக்கான பிம்பத்துடன் நீங்கள் பொருந்திப் போகவில்லை என்றால் பரவாயில்லை.வாட்ஸாப் மெசேஜ்களும் யாரோ எழுதி வாய்த்த கோட்பாடுகளும் சொல்லும்படி நீங்கள் இல்லாவிட்டால், நீங்கள் ஒரு மோசமான அம்மா என்று ஆகிவிடாது.
தாய்மைக்கு இலக்கணம் சொல்லும் இந்த குறுஞ்செய்திகள், கவிதை இத்யாதிகள், எவரோ ஒருவரின் உணர்வின் வெளிப்பாடு. நம்மைப் போன்ற மனிதர்களின் வார்த்தைகளும் எண்ணங்களுமே அவை. இவை யாவும் தனிப்பட்ட மனிதர்களின் கருத்துகள், அவ்வளவே. இவற்றுள் எவையும் ‘அம்மா’ என்பதற்கான புனிதக் கோட்பாட்டுகளோ சட்டங்களோ இல்லை என்பதை நாம் உணரவேண்டியது அவசியம்.இவற்றுள் எவையும் அசைக்க முடியாத ‘இப்படி இருந்தால் தான் இவர் அம்மா’ என்று அடித்துச் சொல்லும் அறிவியல் உண்மைகளோ விளக்கங்களோ இல்லை.
நீங்கள் ஒரு நல்ல தாயாக செயல்படுகிறீர்களா என்று உங்களை மதிப்பிட்டு அங்கீகாரம் அளிக்க வல்லவர் இங்கு யாரும் இல்லை. தாய்மைக்கு இலக்கணம், கோட்பாடு என்று எதுவும் கிடையாது.
நாம் ஒவ்வொருவரும் மாறுபட்ட, தனிப்பட்ட மனிதப் பிறவிகள். ஒருவர் போல் இன்னொருவர் இருக்க வாய்ப்பில்லை என்றல், எப்படி எல்லா அம்மாக்களும் தியாகத்தின் பிம்பங்களாக இருக்க முடியும்? நீங்கள் எப்படிப் பட்டவராக இருந்தாலும், நீங்கள் ஒரு தாய். உங்களுடைய தாய்மையை உங்களிடம் இருந்து பிரிக்க முடியாது.
‘நீ எல்லாம் ஒரு அம்மாவா’ என்று யாரும் கேட்க முடியாது. ‘இப்படி இருப்பவர் மட்டும் தான் நல்ல தாய்’ என்று சான்றிதழ் அளிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
ஒரு தாயாக நீங்கள் எதிர்கொள்ளும் சந்தோஷங்கள், சவால்கள், சங்கடங்கள் என யாவும் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவை. உங்களை, உங்கள் விருப்பங்களை முன்நிறுத்தி நடப்பது ஒன்றும் பாவச்செயல் அல்ல.
ஒரு தாயாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான சமன்பாடும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மட்டுமேயான தனிப்பட்ட விஷயங்கள்.
ஒரு வேளை இதை வாசிப்பவர் தாயாக இன்றி பிள்ளையாக இருப்பின், உங்களிடம் இதைக் கூற விரும்புகிறேன்.
வீட்டில் உள்ள எல்லாருடைய எதிர்பார்ப்புகளையும் திருப்தி செய்து, ஒரு குறையும் சொல்லமுடியாதவளாக இருப்பதற்கு உங்கள் அம்மா என்பவர் ஏதோ இன்டர்நெட்டில் ஆர்டர் செய்யப்படும் பொருள் அல்ல.
‘அம்மா என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்று ஊர் சொல்லும் வரையறைக்குள், வட்டத்துக்குள் நீங்களும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இது உங்களுக்கு உதவக் கூடும்.
உங்களை உங்கள் தாயின் பிள்ளையாக அல்ல, தாயின் உற்ற நட்புறவாகப் பார்க்கத் தொடங்குங்கள். தாயை தோழியாக பாருங்கள். இந்தக் கண்ணோட்டம் உங்கள் உறவுக்குள், மனதுக்குள் ஒரு அமைதியை, புத்துணர்ச்சியை, புதிய சுதந்திரத்தை கொண்டு வரும். எதிர்பார்ப்புகளுக்குள் சிக்காத சுதந்திரம், மிகவும் இதமான ஒன்று அல்லவா?
எல்லாவற்றிற்கும் மேலாக, அம்மா என்பவள் இரத்தமும் சதையுமான மனுஷி. தவறுகள் செய்வது, தன்னை நேசிப்பது, பலவீனம், தன் மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லமுடியாத தடுமாற்றம், கட்டுப்படுத்த முடியாமல் உணர்வுகளை வெளிப்படுத்துதல், நிறைகள், குறைகள் என பிற மனிதர்களையும் போல அம்மாவின் இயல்பிலும் அனைத்தும் உண்டு.
எனவே, நீங்கள் ஒரு தாயாக இருப்பின், உங்களிடம் நான் சொல்ல விரும்புவது இதுவே: முதலில் உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் நீங்கள் கனிவுடன் அன்பு பாராட்டுங்கள். உங்கள் பயணம் உங்களுக்கானது, அதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்.
இப்படிக்கு,‘தாய் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்கிற கடந்த கால எதிர்பார்ப்புகளை விடுத்து, என்னுடைய தாய்க்கும் எனக்குமான உறவை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும் பயணத்தில் உள்ள ஒரு அம்மா.
(இந்தப் பயணம் ஒன்றும் சுலபமானது அல்ல. ஆனாலும் அலாதியானது!)
*மல்டி-டாஸ்கிங் : பல்பணியாக்கம்; ஒரே நேரத்தில் பல பணிகளை நிறைவாக செய்பவர் என்று பொருள்.
பட ஆதாரம்: ‘காற்றின் மொழி’ திரைப்படம்
Mother of a two year old, with lots of dreams and aspirations for myself and my daughter. Learnt some lessons the hard way in life that have made me who I am today and the read more...
Please enter your email address