விண்ணைத்தாண்டி வருவாயா?

'கிளாசிக் சினிமா'வாக வரிக்கப்படும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் பேசும் நுட்பம் மிகுந்த ஆணாதிக்க அரசியல் பற்றி உரையாடுவோமா?

இளம் தலைமுறையினர் கொண்டாடும் ‘தவிர்க்க முடியாத தமிழ் சினிமா’ பட்டியலில் இடம்பிடித்த திரைப்படம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. ‘கிளாசிக் சினிமா’வாக வரிக்கப்படும் இந்தத் திரைப்படம் எடுத்துரைக்கும் நுட்பம் மிகுந்த ஆணாதிக்க மற்றும் இனம் சார்ந்த அரசியல் பற்றி உரையாடுவோமா?

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நாயகிகளில் ஒருவராக இருக்கிறாள், ஜெஸ்ஸி.

ஜெஸ்ஸி கார்த்திக்கை முதலில் தடுக்கிறாள்; மறுக்கிறாள். பின்பு தானும் அவனை நேசிப்பதை வெளிப்படுத்துகிறாள். தனக்கு நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்திவிடும் அளவுக்கு துணிகிறாள். பின்னே ஒரு கட்டத்தில் அவனை விட்டு விலகிவிடுகிறாள்.

“என்னை விடத் தெளிவான ஒரு பொண்ணா தேடி நீ கல்யாணம் பண்ணிக்கணும் கார்த்திக்”, என்று அவளே கூறுகிறாள் (படத்தின் இறுதிப் பகுதியில் வரும் சம்பாஷணை இது).

இந்த உலகத்தில எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் கார்த்திக் ஏன் ஜெஸ்ஸியை விரும்ப வேண்டும்?

இந்தக் கேள்விக்கு பலவிதமான பதில்கள் இருக்கலாம். ஆனால் இது உண்மை – ஜெஸ்ஸி யதார்த்தமான நடுத்தர நகர்வாழ் பெண்களின் பிரத்யேக பிரதிபலிப்பு.

ஜெஸ்ஸிக்கு கார்த்திக்கை பிடிக்கும். அப்பாவையும் பிடிக்கும். இரண்டு விசைகளின் நடுவே தைத்துக் கொண்ட மலர்ச்செண்டு அவள்.

மனசாட்சிக்கு விரோதமாக, தந்தை சொன்னவனை மணக்கவும் முடியாமல், கார்த்திக்கை மறக்கவும் முடியாமல் நிற்கும் கட்டத்தில், கொரோனாவின் பிடியில் மற்றப் பிரச்சனைகள் கொஞ்சம் பின்தங்கியது போல், ஜெஸ்ஸி தன்னை வாட்டும் விசைகளின் பிடியிலிருந்து சற்றே விடுப்பட்டவளாய், இளவயதில் எல்லோர்க்கும் வரும் ஒரு குருட்டு தைரியம் முன் நிற்க தன் திருமணத்தை தடுத்து நிறுத்துகிறாள். கார்த்திக்கிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறாள்.

வேறொரு இக்கட்டான கட்டத்தில் ‘அப்பாவா கார்த்திக்கா’ என்று நிலை பிறழ்கையில் ஜெஸ்ஸி-கார்த்திக் உறவில் நிதர்சனம் கத்தி வீசுகிறது.

ஒருபுறம், தன்னுடைய பணி சார்ந்த நிர்ப்பந்தத்தில், அழைத்தவுடன் அவளிடம் வர இயலாது தவிக்கும் கார்த்திக்.

மறுபுறம், ‘இந்த நொடி கடந்தால், கார்த்திக் மேல் தான் கொண்ட நேச உணர்வை, தன்னுடைய விருப்பத்தை, அப்பா மீது தான் கொண்ட அன்பும் கடமை உணர்வும் வென்று விடும்’ என்கிற நிர்ப்பந்தத்தில் ஜெஸ்ஸி. கடைசியில் கடமை உணர்வு வெல்கிறது.

குலப்பெருமையும் வீட்டுப்பெண்களும்

ஏனெனில் இந்தியா மட்டுமின்றி தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள், பிறப்பிலிருந்து அவ்வாறே செலுத்தப் படுகிறார்கள். அவர்களது மொத்தக் குடியின் மேன்மையும் பெருமையும் அந்த வீட்டுப் பெண்கள் யாரை மணக்கிறார்கள் என்பதிலேயே வாழ்வாங்கு வாழ்வதாக அவர்களுக்கு சொல்லப் படுகிறது.

குலப்பெருமை காப்பதற்காக, வேற்று இனத்தவன் வேந்தனாகவே இருந்தாலும் அவனை மணம் செய்து கொள்ள மறுத்து ராஜபகை வாங்கி உயிர் நீத்த பெண்கள் தெய்வங்களாய் வணங்கப்படுவது புகட்டப் படுகிறது.

இதை எல்லாம் பருகிப் பருகி வளரும் பெண்களில் பெரும்பாலானவர்கள் , ஏதோ ஒரு கட்டத்தில் இந்த வட்டத்திற்குள் வணங்கிக்கொண்டு விழுகிறார்கள்.

இதற்கு பரிசாக “பொம்பளைங்க காதலை தான் நம்பி விடாதே”, “வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு” என்று பெண்கள் எக்கச்சக்கமாக வாங்கிக் கட்டிக்கொள்வார்கள்.

காலம் காலமாய் இதிகாசம் தொடங்கி தமிழ் சினிமா வரை இந்த யதார்த்தம் பதியப்பட்டு வருகிறது.

கார்த்திக்கிடம் “இது முடிந்து விட்டது” (This is over) என்று இறுதியாக உறவை முறித்துக் கொண்ட பின்னும் அவளது குடும்பத்தினர் அவளை மாதக் கணக்கில் பேசாமலும் பேசியும் வருத்தி வாட்டும் காட்சிகளை எந்தத் திரைப்படம் தீவிரமாகப் பதிவு செய்யப் போகிறது? பெரும்பாலான படங்கள் ஆண்களின் கண்ணோட்டத்திலேயே அமைந்து விடுகின்றன.

உரிய வயதும் மனமுதிர்ச்சியும் அடைந்த பெண்ணுக்கு முழுமையான விருப்பம் இருந்தால் மட்டுமே அவளுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும் நிலை இங்கே வழக்கில் வரும் வரை, ஜெஸ்ஸிக்கள் கார்த்திக்கிற்காக துணிவதும் குடும்ப உறவுகளுக்காகப் பணிவதுமாக கடந்து போவது இங்கே தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

பட ஆதாரம்: “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படம்

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 67,807 Views
All Categories