‘ஒருதலைக்காதல்’ – இது ஆண்களுக்கு சினிமா கொடுக்கும் ஒரு அனுமதியா?

ஆண்களின் 'ஒருதலை காதலுக்கு' தமிழ் சினிமாவில் சராசரியாக மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது - பெண்களின் சம்மதத்திற்கு ஏன் அதே முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை?

ஆணின் ‘ஒருதலைக்காதலுக்கு’ முக்கியத்துவம் அளிக்கும் தமிழ் சினிமா, பெண்ணின் சம்மதத்திற்கு ஏன் அதே முக்கியத்துவம் அளிப்பதில்லை?

ஒரு ஹீரோ ஹீரோயினை காதலித்தால் அவள் பதிலுக்கு காதலிக்க வேண்டும் என்கிற கட்டாயம் எதற்காக? இதன் விளைவுகள் நிஜ வாழ்க்கையில் என்னவாக இருக்கிறது? 

கோயம்பத்தூரில் காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து. தடுக்க முயன்ற தந்தைக்கும் காயம், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே பெண் பரிதாப மரணம்.

ஜூலை 19/ 2020 காலைச்செய்தி இது என்ன நடக்கிறது இங்கே?

எத்தனை செய்திகள் இப்படி நாள்தோறும் வெளிவருகிறது! பெண்கள் முன்னேற்றமும் சம அந்தஸ்தும் அடைந்த இந்த நூற்றாண்டில் ஏன் இன்னும் இந்த அராஜகங்கள்? இதன் பின்னணியில் சினிமா மாதிரியான மீடியாக்களின் பங்கும் உள்ளதா?

ஒருதலைக்காதல்

அந்நாளில் இருந்து இந்நாள் வரை ஹாட் டாபிக், தமிழ்ப்படங்களின் தவிர்க்க முடியாத ஃபார்மூலா, இந்த ஒரு தலைக் காதல். 

‘ஒருதலை ராகம்’ திரைப்படம் துவங்கி ‘ஷாஜஹான்’ திரைப்படம் வரை ஒருதலைக்காதல் தான் ஒற்றைவரிக் கதையே, நம் திரைப்படங்களுக்கு. 

இது முதலில் காதலா? காதல் என்பது இரு மனங்கள் இணையும் ஒரு உணர்வு என்கையில், ஒருவர் மனதில் மட்டும் தோன்றி அதை வெளிப்படுத்திய நிலையில், அடுத்தவருக்குத் தோன்றாத ஒன்றை திணிப்பதோ, மிரட்டியோ, கெஞ்சியோ பெறவேண்டிய பொருளா காதல்? அது உணர்வில்லையா?

இதற்கும் மேலாய் ஒரு படி சென்று, தன் காதலை ஏற்காத, அல்லது முதலில் ஏற்று, பிறகு பின்வாங்குகின்ற பெண்கள் வன்முறைகளுக்கு உள்ளாவது இன்னுமொரு கொடுமை. தினம் தினம் செய்தித்தாள்களில் வரும் இது சார்ந்த செய்திகள் தற்போது வாடிக்கையாகவே இருக்கிறது.

திரைப்படங்களும் ஒருதலைக்காதலும்…

‘வைதேகி காத்திருந்தாள்’, ‘சின்னா’, ‘குட்டி’, ‘யாரடி நீ மோகினி’, ‘தேவதையைக் கண்டேன்’, ‘மைதிலி என்னைக் காதலி’ என பல திரைப்படங்களின் மையக்கதையே ஒருதலைக்காதல் தான்.

பழைய காலத்தில் இருந்தே இதைக் கருப்பொருளாய் கொண்ட திரைப்படங்கள் இருந்தபோதும், ஒருதலைக்காதல் சொல்லும் திரைப்படங்களில், காலம் செல்ல செல்ல ‘தன்னை காதலிக்கும் ஆணை திரும்ப காதலிக்காமல் இருப்பதே ஒரு பெண்ணின் கர்வம், அலட்சியம்’ எனும் ரீதியில் கதையமைப்புகள் சித்தரிக்க ஆரம்பித்தபோது ஒலித்தது அபாய மணி.

‘திரைப்படங்களில் நல்ல விஷயங்கள் இல்லையா?’ எனக் கேட்டால் உண்மையில் நிறையவே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சகல விஷயங்களையும் சாமானியர்களிடம் சேர்ப்பது சினிமா என்பதில் சந்தேகமே இல்லை. அதனாலேயே தான் அத்துறையினர் காட்சிகளை அமைப்பதிலும் கவனம்செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

வன்முறைகளில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் ஒரு குற்றவாளி, ‘நான் இந்த திரைப்படம் பார்த்தேன், அதனால் ஊக்கப்படுத்தப்பட்டே இந்த தவறை நிகழ்த்தினேன்’ என்று சொன்னால் அது அந்த துறைக்கே இழுக்கு இல்லையா?

உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்

பெண்களை மதிக்கிறோம் என சமுதாயம் சொல்கிறது. திரைத்துறையும் அதனை அக்காலத்திலிருந்தே வழிமொழிந்து வருகிறது. ஆனாலும் ஒரு பெண்-ஆண் பாலின ஈர்ப்பு காதலாகாது என்ற அடிப்படையை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா? 

திரைப்படங்களில் வரும் காட்சியமைப்புகள் அந்த நிமிடங்களுக்கானது மட்டும் இல்லை, அவை காலத்தின் கண்ணாடிகள். ‘காதல் தெய்வீகம்’ எனக் காட்டுவதன் மூலம் பல இளநெஞ்சங்களைக கட்டிப்போடலாம் எனும் கணக்கு புரிகிறது.

அதையும் தாண்டி பெண்களை அறைவது, வன்முறையான செயல்களில் ஈடுபடுவது போன்றவை வருத்தத்தற்குரிய விஷயங்கள்.

இப்படி எல்லாம் பொது வெளியில் நடக்கிறது,  கவனமாய் இருந்துகொள்!’ என்பதற்கும், ‘எல்லா இடத்திலும் நடப்பதுதானே’ என மிக எளிதாக,  சாதாரணமான காட்சியாக காட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு.

பெண்களின் மீதான வன்முறையை சாதாரணமான செயலாகக் காட்சிப்படுத்துவதால் தான் இங்கே பல பெண்கள் பலி ஆகின்றனர்.

அடுத்த ஒரு முக்கியமான, பலரால் கவனிக்கப்படாத ஒரு காட்சிபுகுத்தல் இங்கே எளிதாக பரவிக்கொண்டே இருக்கிறது.

பலரால் பாராட்டப்பட்ட ‘கனா’ முதல் ‘பிகில்’ வரை, ஏதோ தன்னம்பிக்கையூட்டும் படங்களாய் காட்சியளித்தபோதும் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணையும் சரிசெய்ய சில ஆண்தேவதூதர்கள் தேவை என்பதைப் போன்ற காட்சிகளை அவை கொண்டுள்ளன.

ஏன் பெண்கள் தாங்களாக எழுந்து நிற்கமாட்டார்களா? யாரையோ ஹீரோவாகக் கொண்டாட பெண்கள் பாடம் படிக்க வேண்டுமோ?!

ஈர்ப்புக்கும் காதலுக்குமான வித்தியாசம்

ஒருவேளை ஒரு பெண் பதின்பருவத்தில் தான் காதலாக உணர்ந்த ஒன்றை, ‘அது வெறும் ஈர்ப்பு’ என்ற புரிதல் ஏற்பட்டால், அதை நேர்மையாக சொல்லி பிரிந்தால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை எத்தனை மனிதர்களிடம் இருக்கிறது? ஏன், திரைப்படங்களில் அப்படி ஒரு காட்சியாவது உண்டா?

அப்படி ஒரு பெண் திடீரென மறுக்க உரிமை அற்றவளாகவும், அப்படி மறுத்தால் அவளை கேவலமான, தவறிழைக்கும் பெண்ணாகவும் சித்தரிப்பது ஏன்?

‘எல்லா பெண்களுமே சரியான வழியில்தான் செல்கிறார்கள்’ என்று சொன்னால் நான் உண்மையில் இருந்து விலகியிருக்கிறேன் என்றே பொருள். சிலர் வேறு சில சுயநல காரணங்களுக்காகக் கூட தன் காதலில் இருந்து விலகலாம் மறுப்பதற்கில்லை. ஆனால் அப்படி ஒரு பெண்ணை வற்புறுத்தி தன் வாழ்க்கையில் இணைப்பதால் அந்த ஆண் அடையப்போவது நல்ல எதிர்காலத்தையா? 

திரைப்படங்கள் நிஜ வாழ்வின் பிரதிபலிப்பு என்றும் சமுதாயத்தின் கண்ணாடி என்றும் உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த கண்ணாடி நிஜம் காட்டாவிட்டாலும் குறைந்த பட்சம் எதையும் மிகையாக காட்டாமல் இருந்தாலே மிக நன்றாக இருக்கும்.

‘அடிடா அவளை; வெட்றா அவளை’ என பாடல் எழுதும் முன்னும், ஒருத்திக்காக உருகி மருகி இறக்கவும் துணியும் கதாபாத்திரங்களை வடிவமைக்கும் முன்பும், சற்று யோசியுங்கள் கதாசிரியர்களே!

இப்படி தன் காதலை சட்டை செய்யாத பெண்களிடம் வன்முறை காட்டும் ஆண்களின் எதிர்காலம் மட்டும் என்ன வளமாகவா போகிறது?!

யோசியுங்கள் இயக்குநர்களே!

நம் படைப்பு அடுத்தவர் வாழ்க்கையில் ஒளியேற்றாவிட்டாலும் பரவாயில்லை. யார் வீட்டிலோ இருள் சூழ காரணமாக இருக்கக்கூடாது.

“முள்ளு மேல சேல பட்டாலும் 
சேல மேல முள்ளு பட்டாலும்
சேலைக்குத்தானே சேதம்”
என கேலிக்கூத்தாய் வசனம் எழுதுவதை நிறுத்திக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

ஆணோ பெண்ணோ, தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் திறமை அவர்களுக்கு உண்டு. அப்படி சரியாக தீர்மானிக்காத போதும் அதற்கான நன்மை தீமைகளுக்கும் அவர்களே தான் பொறுப்பேற்க போகிறார்கள். ‘நீ இப்படித்தான் வாழவேண்டும்’ என இன்னும் சினிமாக்கள் சொல்லித் தெரியும் நிலையில் பெண்கள் இல்லை.

ஒருதலைக்காதல் கருவை மையமாக படம் எடுக்கும் இயக்குநர்கள் இதை கவனத்தில் கொள்வது நல்லது.

Image: ‘யாரடி நீ மோஹினி’ படத்திலிருந்து ஒரு காட்சி

About the Author

Akila Jwala

writer , poetess, educationist and social activist read more...

9 Posts | 16,212 Views
All Categories