Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
பத்து வயது சிறுமி முதல் 97 வயது முதியவர் வரை 'நியூ நார்மல்' குறித்து கூறுவது ஒன்றே! வியப்பூட்டும் இந்த COVID-19 சூழ்நிலையில் நாம் கற்றது என்ன?
2020 இல் இந்தியா வல்லரசு நாடாகும் என கனவு கண்ட ஏவுகணை நாயகன், ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார், அதே ஆண்டில் கண்ணுக்கும் புலப்படாத ஒரு கிருமி உலகை ஆட்டிப்படைக்கும் என.
2019 டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா அலை, இந்தியாவிலும் தனது கொடூர ஆட்டத்தை ஆரம்பித்தது.
இந்த வைரஸின் பரவலை தடுக்க பல முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நுண்ணுயிரி பேரளவில் நோய் பரப்பியது.
21 நாட்களுக்கு (முதல் ஊரடங்கு ) மேல் ஊரடங்கை நீட்டிக்க மாட்டார்கள் என ஓவ்வொரு முறையும் நினைத்த சாமான்ய மனிதனுக்கு கடைசியில் கிட்டியது ஏமாற்றம் மட்டுமே.
பத்து வயது சிறுமி முதல் 97 வயது முதியவர் வரை இந்த காலக் கட்டத்தைக் குறித்து கூறுவது ஒன்றே: இது போன்ற சூழ்நிலையை அவர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்டதில்லை என்பதே! சுனாமி, பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதிலும் எந்த ஒரு நாடும் இவ்வளவு பெரிய இழப்பையும், மன உளைச்சலையும் சந்தித்தது கிடையாது.
சரி அப்படி என்ன இந்த கொரோனா வைரஸ் இவ்வளவு வலிமை மிக்கதாக இருக்கிறது? ஏன் எந்தவித மருந்துகளும் நிரந்தர தீர்வு தரவில்லை? மிகப் பெரிய ஆச்சரியமாகத் தோன்றினாலும் அதன் அறிவியல் பின்னனியை அறிந்தால், இதன் அர்த்தம் புரியும்.
“வைரஸ்” என்ற லத்தீன் வார்த்தைக்கு “மெல்லிய திரவம் ” அல்லது விஷம் என்பது பொருள். தனித்து வெளியே வாழும் ஆற்றல் இல்லாத ஒட்டுண்ணியான வைரஸ், உயிர் வாழ விலங்கு மற்றும் மனித உடலை நாடுகின்றது.
எபோலா, சார்ஸ், HIV, HIN1 போன்ற பல வகை வைரஸ் காய்ச்சல் வகைகளை உலகம் பார்த்திருந்த போதிலும், இந்த கொரோனா தொற்று உலகளவில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 1960களில் இருந்தே கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட போதிலும் இந்த COVID-19 என்பது ஒரு தனித்துவமான, புது வகையான STRAIN ஆக கருதப்படுகிறது.
இந்த COVID-19 வகை வைரஸ் மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றலைச் சீர்குலைப்பதால், இதற்கான முழுமையான மருத்துவ தீர்வு சற்றே சவாலாக உள்ளது. எனினும் உலகளவில் இதற்கான பிரத்யேக நோய்தடுப்பு மருந்துகளுக்கான ஆராய்ச்சி முனைப்புடன் நடந்து வருவதால் விரைவில் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையும் ஒரு பக்கம் வளர்கிறது.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தமது கைவசம் ஆற்றல் மிக்க தொழில்நுட்பங்களை வைத்திருந்த போதிலும், சரியான நிர்வாகமின்மையினால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தோற்று போனது. மாறாக, தென் கொரியா, தொழில்நுட்பங்களைச் சரியாக பயன்படுத்தி வெற்றி கண்டதை ஊன்றி நோக்க வேண்டும் .
கொரோனா வைரஸ் கடும் பொருளாதார மந்த நிலையையும் தேக்கத்தையும் உருவாக்கி உள்ளதால் பல முக்கிய/பெரிய நிறுவனங்கள் கூட சற்றே தடுமாறிப் போயுள்ளன. பல நிறுவனங்களில் ஆள் குறைப்பு மற்றும் 30-50% வரை மட்டுமே சம்பளம் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது போன்ற ஒரு அசாதாரமான பொருளாதார சூழலை ஒருவன் சமாளிக்க வேண்டுமெனில், “ஒரு குறிப்பிட்ட தொகையாவது வங்கியில் உள்ளது, சமாளிக்கலாம்” என்ற நிலையில் ஒவ்வொருவரும் கட்டாயம் இருக்க வேண்டும். மாத சம்பளத்தில் சிறிதளவு சேமித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை இந்த சூழல் தெளிவாக உணர்த்தியுள்ளது.
இரண்டு பேருந்துகள் மாறி அலுவலகம் சென்று செய்யும் கணினி சார்ந்த வேலைகள் பலவற்றை வீட்டிலிருந்து செய்து விட முடியும் என்பதை இந்த வைரஸ் உணர்த்தி இருக்கிறது. ” டீ, காபி, கேண்டீன் அரட்டை, வம்பு பேச்சு, தேவையில்லா அலுவலக கூட்டம்” போன்றவை இல்லாமல் வெறும் வேலை மட்டும் நடை பெற்று கொண்டு இருக்கிறது. பல தொழில் நுட்ப நிறுவனங்கள் இதே முறையைப் பின்பற்றவும் பரீசலித்து வருகிறது. “ஆன்லைன்” வகுப்புகள் சற்றே புதியதாக இருந்தாலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மெல்ல மெல்ல இதற்கு பழகி போய் விட்டார்கள்.
ஞாயிற்றுக் கிழமை கூட வீட்டில் தங்காத பல ஆண்களை இந்த கொடிய வைரஸ் ஐந்து மாதங்களாக வீட்டில் முடக்கிப் போட்டு உள்ளது. வேலையைத் தாண்டி வீட்டில் ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய முடியும் என்பதையும் உணர்த்தியிருக்கிறது. வரப்போகும் கடினமான நாட்களை எதிர்கொள்ள மனதளவிலும் உடலளவிலும் நாம் எச்சரிக்கையுடன், வலிமையாக இருப்பது மட்டுமே கைகொடுக்கும் என்பதும் விளங்கியுள்ளது.
வெளியே சென்று வந்தால் கை கால்களை கழுவ வேண்டும், வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் போன்றவை காலங்காலமாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது. எனினும், கொரோனாவிலிருந்து காத்துக் கொள்ள இப்போது தான் புதியதாக கண்டறியப்பட்டது போல இவை எல்லா ஊடகங்களிலும் முழக்கம் இடப்படுகின்றது.
‘Immunity Drink’, ‘DHA’ போன்ற விளம்பரங்களை பின்னுக்கு தள்ளி பாரம்பரிய பாட்டி வைத்தியங்களான மிளகு, மஞ்சள், இஞ்சிச்சாறு மீண்டும் பிரபலம் அடைந்து வருகின்றன.
பக்கத்து வீட்டுக்காரன் நலமாக இருந்தால்தான் நாம் நல்லா இருக்க முடியும் என்பதற்காகவே இப்போது “எல்லோரும் நல்லா இருக்கனும் சாமி” என்ற பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. பல இயற்கை பேரிடர்கள் உணர்த்தியது போலவே இந்த சூழலும் மனிதாபிமானம் குன்றவில்லை என்பதை அறிவுறுத்துகிறது.
உயிர்த்தொழில் நுட்பவியல் (Biotechnology), நுண்ணுயிரியல் (Microbiology) சார்ந்த பாடங்களுக்கு இந்தியாவில் வேலை வாய்ப்பு குறைவு என்ற பரவலான ஒரு கருத்து இருந்து வந்தாலும், தற்போதுள்ள சூழலை சமாளிக்க பல விஞ்ஞானிகள் தேவை படுகிறார்கள். எதிர்காலத்தில் வெறும் பொறியாளர், மருத்துவர், காசாளர் போதுமா என்பதை முடிவு செய்யும் தருணம் இது. விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் பல முயற்சிகள் நம் நாட்டில் கையாளப்பட வேண்டும்.
கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி கண்டறியப்படும் முயற்சியில் பல நாடுகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவின் சார்பாக ICMR உடன் Bharath Biotech இணைந்து Covaxin தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சி செய்து, அதன் முதற்கட்ட பரிசோதனையில் வெற்றியும் கண்டுள்ளது.
இந்த வைரஸின் தாக்கம் குறைந்து, அவரவர் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அவ்வாறே நம் நம்பிக்கையும் கனவும் மெய்ப்படினும் கொரோனா கற்றுக்கொடுத்த பாடத்தை நாம் மறவாதிருப்போம்.
Image credits mohamed Hassan/Pixabay
read more...
Please enter your email address