தமிழ், மரபு, பாரம்பரிய இசை: மதுவந்தி பத்ரி

இசை மற்றும் தமிழ் மரபினை இரு கண்களாகப் போற்றி முழுமையான அர்ப்பணிப்புடன் கலைத் தொண்டு ஆற்றி வருகிறார், மதுவந்தி பத்ரி.

இசை மற்றும் தமிழ் மரபினை தனது இரு கண்களாகப் போற்றி ஆழ்ந்த ப்ரேமையுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் கலைத் தொண்டு ஆற்றி வருகிறார், மதுவந்தி பத்ரி.

ஒரு முன்னணி IT கம்பெனியில் அனைவரும் மெச்சும்படி பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு பொறியியலாளர், ‘இசையில் தான் தனது ஆன்மத் தேடல் உள்ளது’ என்றுணர்ந்து தமிழ் மரபியல் இசைக்கென தன்னை அர்ப்பணித்து தனக்கென தனியிடம் அமைத்துக் கொண்டதன் கதை இது.

பாரம்பரிய கலை, இலக்கியம், மற்றும் கல்வி மூலம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்க‘ செயலாற்றி வரும் திருவையாறு தில்லைஸ்தானத்தின் மரபு அறக்கட்டளையின் தூணாக செயல்பட்டு வருகிறார், மதுவந்தி.

மரபு அறக்கட்டளை, தமிழ் பக்தி-இலக்கியம் மற்றும் இசையின் இன்றியமையாத கூறுகளான தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், மற்றும் திருவருட்பா ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதற்காக, திருவையாறு இசைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், இசையுலகில் பெருமதிப்பை பெற்ற இசையியல் நிபுணரும் (Musicologist), மரபு அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் ராம. கௌசல்யா அவர்களின் நேரடி வழிகாட்டுதலில் தமிழுக்கும் இசைக்கும் அரும்பணி ஆற்றி வருகிறார் மது.
தற்சமயம் ஆன்லைன் வழியாக பல இசைக் கச்சேரிகளையும் சங்கீத அஞ்சலிகளையும் மரபு அறக்கட்டளையின் சார்பாக ஓருங்கிணைத்து நடத்தி வருகிறார்.

‘கர்நாடிக் டேல்ஸ்’

‘இசைக்கலைஞர்கள் என்றாலே கச்சேரிகள்’ என்பதன் அடுத்தக் கட்டமாக, ஆர்வமும் விருப்பமும் கொண்ட அனைவரிடமும் தமிழையும் மரபையும் இசையை எடுத்துச் செல்ல விழைந்தார் மதுவந்தி.

இதன் பயனாக கடந்த 2019-இல், ‘The Traveling Gecko‘ நிறுவனத்துடன் இணைந்து ‘கர்நாடிக் டேல்ஸ்‘ (Carnatic Tales) என்று அழைக்கப்பட்ட ‘க்யூரேட்டட்’ நடைப்பயணங்களை முன்னின்று நடத்தி, பங்கேற்றவர்களுக்கு கர்நாடக இசையுடன் தொடர்புடைய வரலாறுகள், பரிணாமங்கள், மரபுகள், பாணிகள் மற்றும் நுண்ணிய விளக்கங்களை முன்னின்று அளித்து அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றார்.

கற்றது இசை

ஆறு வயதிலிருந்தே இசை பயின்று வரும் மது, பெருமதிப்பிற்குரிய ஜி.என்.பி மற்றும் தஞ்சாவூர் எஸ்.கல்யாணராமன் அவர்கள் வழிவந்த சுத்த பாடாந்தர பாணியின் முதன்மை சீடர் ஆவார். இம் முறையை கலைமாமணி விதூஷி திருமதி. பூஷணி கல்யாணராமன் அவர்களிடம் பயின்ற மது, தற்போது கலைமாமணி விதூஷி திருமதி. எஸ்.ராஜேஸ்வரியிடம் மேம்பட்ட இசைநுணுக்கங்களை (advanced music-ஐ) பயின்று வருகிறார்.

தெய்வத்திரு பாரத ரத்னா M.S. சுப்புலட்சுமியுடன் இளவயது மதுவந்தி

தொடரும் சங்கீத சேவை

தற்சமயம் அட்வான்ஸ்ட் இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மதுவந்தி, ஆர்வலர்களுக்கு இசை மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றிய விரிவுரைகளை நிகழ்த்துவதுடன், விவாதங்களில் பங்கேற்றும், பயிற்சிப் பட்டறைகளை நடத்தியும், குழந்தைகளுக்கு இசை கற்பித்தும் வருகிறார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் வழிநடக்கும் ‘AIM For Seva’ (NGO) சார்பில் மஞ்சக்குடியில் பிரசித்தி பெற்ற பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ ஆற்றி வரும் இசைத் தொண்டுகளிலும் முக்கியப் பங்காற்றி வந்துள்ளார், மதுவந்தி.

பொதிகை தொலைக்காட்சியில் உயர்தர இசை நிகழ்ச்சிகளை வழங்கி வந்த மதுவந்தி, தற்போது கேரளத் தொலைக்காட்சி ஒன்றிலும் தனது குரு, கலைமாமணி விதூஷி திருமதி. பூஷணி கல்யாணராமன் அவர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கி வருகிறார்.

இத்துடன் பொறுப்பான குடும்பத்தலைவியாகவும், அன்பான மகளாக, மனைவியாக, தாயாக, சகியாகவும் பரிணமித்து, சமையல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைத்து உயிர்களிடத்தும் காருண்யம் என ரசித்து, ருசித்து, நன்றியுணர்வுடன் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் தெய்வீகத்தை கொண்டாடி வருகிறார், மதுவந்தி.
ஆச்சர்யமில்லை – இசையின் பயனே, இறைவன் தானே!

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 67,822 Views
All Categories