Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
துணிச்சல் என்ற உளி கொண்டு சிறுகச் சிறுக பெண்களின் உரிமைக் குரலை வடிவமைத்த சிற்பி, பாரதியார்!
தீரா எழுச்சி, ஓயாக் குரல், மறக்கா சாம்பல் – எனது ஆறு வயதில், இப்படித்தான் முண்டாசு கவி என் மனதில் ஆழமாக பதிந்தார்.
“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு”
இதுவே நான் அவ்வயதில் பாடிய பாரதியார் பாடலாகும். இதில் நெஞ்சில் ஊறிய எண்ணம், வேறுபாடின்றி அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்பது தான்.
மகாகவி எனக்கு வெறும் தமிழ் செய்யுள் பகுதியில் வந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல. துணிச்சல் என்ற உளி கொண்டு சிறுகச் சிறுக என் எண்ணங்களின் உரிமை குரலை வடிவமைத்த சிற்பியும் அவர்தான்!
பாரதி, என் பார்வையில், ஒரு பித்தர். பெண்மையின் உரிமைக்காக போராடிய ஒரு மகா பித்தர்.
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.”
பெண் இனத்தை ஏளனமாக பார்த்த சமுதாயத்தில், பெண்களின் முன்னேற்றத்திற்கு இவன் மட்டும் கும்மி அடித்து பாடினால் இவரை பித்தர் என்று அழைக்காமல் என்ன கூறுவது?
‘பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!’
பள்ளிக்கூடத் துவக்கத்தில் விளையாட்டுத்தனமாக பாடிய பாப்பா பாட்டு, இன்று உண்மையை நெருடலாக கூறிவிட்டு செல்கிறது.
எத்தனையோ கசப்பான நிகழ்ச்சிகளை நாம் வளர்ந்து வரும் நாட்களில் கடந்து வருகிறோம். அதற்கான பலம் மற்றும் நெறியை அன்றே அவர் விதைத்திருக்கிறார் என்பது இப்பொழுது தான் புரிகின்றது.
“ஓடி விளையாடு பாப்பா” என்று கூறியதே, நம் உடல்நலம் பிற்காலத்தில் சீராக இருக்கும் என்பதற்காக தானே.
அலைபேசியின் தாக்கத்தினால் இன்று அந்த உடல்நலத்தையே நிலைகுலைத்து விட்டோம். இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருந்தால், நிச்சயம் வெள்ளையனை விரட்டியடிக்க எழுதிய விரல்களைக் கொண்டு தொழில்நுட்பத்தின் தேவையற்ற வளர்ச்சியை எழுத்துக்களால் விரட்டியடிக்க முற்பட்டிருப்பார். மீண்டும் ‘பித்தன்’ என்ற பெயரையே பதக்கமாக அணிந்திருப்பார்.
அப்பொழுதும் பெருமையாக அவர் கூறியிருக்கும் வரிகள் இவையாகவே இருக்கும்:
“பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?”
சோகம் ஒருவனை வாட்டும் பட்சத்தில் இவர் எழுதிய ‘அச்சமில்லை அச்சமில்லை’ பாடலை படித்தாலே போதும், ஒரு புத்துணர்வு தோன்றும். குறிப்பாக,
“உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே,”
என்று படித்தவுடன், எதை வேண்டுமானாலும் சமாளித்து விடலாம் என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் பாரதியின் பாடல்கள் பொருந்தும். விடுதலை, எழுச்சி போன்றவற்றை தாண்டி பாரதி காதல் கவிஞனும் கூட. இளமை பருவத்திற்கு இவர் ‘கண்ணம்மா’ என்ற பெயர் கொண்டு வர்ணித்த பாடல்கள் ஒரு தனி காதல் சுகத்தை தரும்.
‘சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா’ பாடலில் வரும், “மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம், காத்திருப்பேனோடீ, இது பார் கன்னத்து முத்தமொன்று,” என்ற வரிகளில் அவர் மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆசைகள் ஒன்றின் வெளிப்பாட்டினை ஹாஸ்யமாக கூறியிருப்பார்.
“வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு,” என்று விரல்களுடன் மட்டுமல்ல வார்த்தைகளுடனும் அங்கு விளையாடிவிட்டார்.
தோள் சாய தோள்கள் இல்லாத பொழுதில் இருந்து, கண்ணம்மாவாக நம்மை யாரும் வர்ணித்து விடமாட்டார்களா என்ற ஏக்கம் வரை, பாரதியார் தான் துணை நின்று இருக்கிறார் என் தந்தையின் அந்த பழைய மங்கிய பக்கங்களை கொண்ட புத்தகத்தில் இருந்து.
சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு கனவு உள்ளது. இவரை போன்று வெவ்வேறு மொழிகள் கற்றுவிட்டு, நானும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்,” என்று கூற வேண்டும்.
அவர் வேண்டுமாயின், “யாமறிந்த புலவரிலே…” என்று வேறு பெயர்களை கூறி கொள்ளட்டும். ஆனால் எனக்கு இவர் பெயர் மட்டும் தான் அதில் இடம்பெறும்!
இத்தகைய மாமனிதரை, ஆயிரம் மதம் கொண்ட யானைகளை வீழ்த்திடும் ஆன்ம பலத்தை, வியத்தகு வீரத்தை பெற்றிருந்த பாரதியை, உண்மையில் ஒரு மதம் பிடித்த யானை தான் வீழ்த்தியிருக்க வேண்டுமா?
அது சரி. ஒரு பித்தனை இன்னொரு பித்தனால் தான் சாய்க்க முடியும் போலும்!
An Interior Designer by profession and a Calligrapher, Voiceover artist, Content writer by passion. read more...
Please enter your email address