நெட்டிசன்களே மஹாஜனங்களே! இது சரியா, தவறா?

'சமூக வலைத்தளங்களில் பதிவு இடு்பவர் நமக்கு பிடிக்காதவர் என்றால் எதிர்க்க வேண்டும் என்று இல்லை, நெட்டிசன்களே', என்கிறார், நம் வாசகி .

‘சமூக வலைத்தளங்களில் பதிவு இடுபவர் நம் வட்டத்தில் இருந்தால் ஆதரிக்க வேண்டும்; நமக்கு பிடிக்காதவர் என்றால் எதிர்க்க வேண்டும் என்று எதுவும் இல்லை,நெட்டிசன்களே!’ என்று அடிப்படை இங்கிதம் பற்றி எழுதுகிறார், நம் வாசகி கல்பனா.

வணக்கம்! மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமூக வலைத்தளங்களுக்கு வந்தவள் நான்! கொரோனா கொடுத்த வீட்டுக் காவலுக்கு அழகிய சாளரங்கள் அவை!

“சரி! எட்டிப் பார்த்துவிட்டு கிளம்ப வேண்டியது தானே? இப்போ எதுக்கு ஒரு பட்டிமன்றம்?” என்று கேட்கிறீர்களா? தேவைப் படுதே!

நீங்க நெட்டிசனா?

நீங்க எல்லாருமே உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு வாழ்த்துவது மற்றபடி மேலும் கீழும் செல்லும் நெட்டிசனா? அல்லது பதிவுகள் போடுபவர்களா? ஒரு சில பதிவுகளின் கீழ் வரும் விமர்சனங்களைப் படிப்பது உண்டா? உங்கள் பதின்ம பருவ பிள்ளைகள், உங்கள் வீட்டு
பெரியவர்களும் இதே தளங்களைப் பயன்படுத்துகிறார்களா?

இதில் ஏதேனும் ஒரு கேள்விக்கு நீங்கள் ‘ஆமாம்’ என்றிருந்தால்…

இதோ வந்துவிட்டேன்! என் கவனத்தை, இல்லை, கவலையை ஈர்த்தது கருத்து மோதல்கள் மற்றும் விமர்சனங்கள்!

விமர்சனங்கள்!

அப்பப்பா, எத்தனை உணர்ச்சி ஊற்றுக்கள்!! பொங்கி வழியும் சொற்கள். அதில் சிதறிக் கிடைக்கும் உடைந்த மனங்கள். சுந்தர் பிட்சை முதல் நடராஜன் வரை யாரை பற்றி,எதுவாக
இருந்தாலும், வண்டி வண்டியாக வடிகட்டாத வார்த்தைகள்.

“விமர்சனங்கள் நல்லது தானே!” ஆம். அவசியமும் கூட.
“பின்ன என்ன?” என்று கேட்டால்…நிறைய இருக்கிறது. பார்ப்போம் வாருங்கள்.

பதிவை விட்டு பதிவரை முன்னிலைப் படுத்துவது

முதலில், பதிவை விட்டு பதிவரை முன்னிலைப் படுத்துவது. நம் வட்டத்தில் இருப்பவரை நாம் தான் ஆதரிக்க வேண்டும். புரிகிறது. ஆனால், பதிவர் நம் வட்டத்தில் இல்லை என்றாலோ, நமக்கு பிடிக்காதவர் என்றாலோ அதை எதிர்க்க வேண்டும் என்று எதுவும் இல்லை.

வெந்நீர் வைப்பது எப்படி என்று சித்தப்பா மகள் போட்டால், அது அருமையான பதிவு.
ஒரு மணி நேரத்தில் ஒரு முழு விருந்து சமைப்பது என்று யாரோ போட்டால், அதில் “பச்சடியை விட்டுட்டிங்க?!” என்று பதிவு.

தேவை இல்லாமல் குறை கூறுவது, ஆற்றாமையின் வெளிப்பாடு. நல்லதை உரக்கச் சொல்லி, மற்றதை நேரில் சொல்லுதலே பண்பு. சரி தானே?

அடுத்தது, ‘காய்ந்தால் கடுவெளி, பெய்தால் பெருமழை’

கண்-மண் தெரியாமல், புகழ்ந்து தள்ளுவது அல்லது வாரித் தூற்றுவது. நீங்கள் நினைப்பதையே நானும் சொல்ல வருகிறேன். Fan followers எனப்படும் நட்சத்திர விசிறிகள் செய்வது பற்றி தான் சொல்கிறேன்.

ஒரே ஒரு வரி, ஒரு அறிக்கை அல்லது ஒரு காணொளி. முடிந்தது கதை. “அருமை, பெருமை” என்று ஒன்றிரண்டு பதிவுகள் தாண்டி கீழே போனால், தரம் அதல பாதாளம். “நீ யாரு எனக்கு தெரியாதா, உன் தலைவன் மோசம், உங்க தலைவி மூக்கு சப்பை..” என்று ஒரே காச் மூச் கத்தல்கள்!

தனி நபர் முன்னிலைப் படுத்துதல்

வானிலை அறிக்கை திரு. ரமணன் முதல் கொரோனா அறிக்கை திருமதி. பீலா ராஜேஷ் வரை யாரும் விதிவிலக்கில்லை! அவர்கள் நம்மிடம் பட்ட பாடு, சொல்லி முடியாது.

செய்தி வேறு, கருத்து வேறு – இல்லையா? பச்சை வண்ண சட்டை போட்டுக் கொண்டு சொன்னாலும், மழை பெய்து தான் தீரும். பருத்தி உடையோ பட்டுப் புடவையோ எதை உடுத்திக் கொண்டு வந்தாலும் அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி தான்.

‘இதெல்லாம் ஒரு பெரிய சர்ச்சையா? எதோ வரப் போக ஜாலியா போடறாங்க. அவ்ளோ தானே!’ என்கிறீர்களா?

கண்டிப்பாக இல்லை. ஒரு வீட்டில் ஒரே ஒரு சாளரம் மட்டுமே இல்லை, இன்னும் சரியாக சொல்லப் போனால், ஒவ்வொருவரும் ஒரு சாளரம்.

அடுத்த தலைமுறை நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறது!

காவலர் இல்லை, வாகனமும் இல்லை. என்றாலும் இரவில் வண்டி ஓட்டும் நாம், கூட நம் குழந்தையை வைத்து கொண்டு, சிவப்புக் குறியீட்டைத் தாண்டிச் செல்வதில்லை. ஏனென்றால், கடவுள் மட்டுமல்ல – நம் அடுத்த தலைமுறையும் நம்மை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறது என்ற கவனம்.

சமூக வெளியில், செய்தி என்பது பெரும்பாலும் ஒரு விவரம்; ஒரு நிகழ்வு, ஒரு அறிவிப்பு. சமூகவெளியில், ஒரு கலைப் பதிவு ரசனைக்கு உரியது; கற்றல் – கேட்டல் – அழகியல் உடையது.

தவறான பதிவு என்றால் சரியானவற்றை முன்வைத்து திருத்தச் சொல்லுங்கள்; முடியவில்லையா? புறக்கணியுங்கள். பல நேரங்களில் கவனிக்கப் படாதவை காணாமல் போகின்றன – எனவே விட்டுத்தள்ளுங்கள்.
எந்த பதிவிற்கும், நிகழ்விற்கும் மெய்ப் பொருள் காண விழையுங்கள்.

நாம் விரும்பும் ஒருவர் சொல்லுவது சில நேரம் தவறாகவும் இருக்கலாம்; அதே போல நம்மை வெகுவாக கவராதவர் ஆகச் சிறந்த கருத்தையும் முன் வைக்கலாம்.

குளிருக்கும், நெருப்புக்கும் நடுவில் நிற்க இது காதல் இல்லை, கருத்து அறிதல். வானத்திற்கு வேண்டுமானால் எல்லை இல்லாமல் போகலாம், வார்த்தைகளுக்கு வரைமுறை உண்டு.

ஆகவே வெறுப்பு ஏளனம் தவிர்த்து, வாழ்த்துங்கள். வளம் சேருங்கள்.

About the Author

3 Posts | 6,470 Views
All Categories