நம்ம ஊர் ‘பத்மஸ்ரீ’ பெண்கள்!

இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதினால் கௌரவிக்கப் பட உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பெண்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்!

இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதினால் கௌரவிக்கப் பட உள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பட்டியலில் விவசாயம், விளையாட்டு, இசை ஆகிய துறைகளில் சாதனை புரிந்த மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகளாக விளங்குபவை ‘பத்ம விருதுகள்‘. இவை முறையே ‘பத்ம விபூஷண்’ (உன்னதமான, சிறந்த சேவைக்கான விருது), ‘பத்ம பூஷண்’ (உயர்தரமான சிறந்த சேவை) மற்றும் ‘பத்மஸ்ரீ’ (பரவலாக புகழ்பெற்ற சேவை) ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

2021 இல் பத்ம விருது வென்றுள்ள தமிழர்கள்

தென்னாட்டின் இணையற்ற இசைக்கலைஞரும், நடிகர்-தயாரிப்பாளருமான மறைந்த திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது அளித்து சிறப்பித்துள்ளது இந்திய அரசு.

இந்த வருட பத்மஸ்ரீ விருது வென்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழர்கள் இவர்கள்:
(காலஞ்சென்ற) திரு. பி. சுப்பிரமணியன் (துறை: வர்த்தகம் மற்றும் தொழில்)
(காலஞ்சென்ற) திரு. திருவேங்கடம் வீரராகவன் (துறை: மருத்துவம்)
(காலஞ்சென்ற) திரு.கே.சி. சிவசங்கரன் (கலைத்துறை)
திருமதி. பாப்பம்மாள் அவர்கள் (துறை: விவசாயம்)
திரு. சுப்பு ஆறுமுகம் (கலைத்துறை)
திரு. சாலமன் பப்பையா (துறை:இலக்கியம்,கல்வி மற்றும் பத்திரிக்கை)
திரு. எம். சுப்புராமன், (துறை: சமூகநலப் பணி)
திருமதி. ஜெயஸ்ரீ ராம்நாத் (கலைத்துறை)
திரு. ஸ்ரீதர் வேம்பு (துறை: வர்த்தகம் மற்றும் தொழில்)
திருமதி. அனிதா பால்துரை (துறை: விளையாட்டு)

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நம் ஊர் பெண்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

தேக்கம்பட்டி பாப்பம்மாள் பாட்டி

1914 இல் பிறந்த பாப்பம்மாள், தான் வாழ்ந்த 105 ஆண்டு காலத்தில் இரண்டு உலகப் போர்கள், இந்தியாவின் சுதந்திரப் பிரகடனம், இயற்கை பேரழிவுகள் ஆகியவற்றுடன் கடந்த ஆண்டில் கோவிட்-19 என எண்ணற்ற காலக்கூறுகளையம் சரித்திர நிகழ்வுகளையும் பார்த்து வந்துள்ளார்.

“நான் வளர்ந்த காலத்தில் முறையான பள்ளிகள் எதுவும் இல்லை. நான் கற்றுக்கொண்டது எல்லாம் விளையாட்டுகளின் மூலம் தான் – பல்லாங்குழி ஆடி கணிதம் கற்றுக்கொண்டேன்”, என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ள பாப்பம்மாள் பாட்டி, சிறுவயதிலிருந்தே விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர்.

தன்னை வளர்த்து ஆளாக்கிய தனது தந்தைவழி பாட்டியின் மறைவுக்கு பின் தேக்கம்பட்டியில் ஒரு சிறிய பெட்டிக் கடையை நடத்தி வந்துள்ளார், பாப்பம்மாள்.பின்னர் தின்பண்டங்கள் மற்றும் பானங்களை விற்கும் ஒரு சிறிய உணவகத்தையும் தொடங்கினார்.

“நான் எனது ப்ரொவிஷன் கடையில் சம்பாதித்த பணத்தை மிச்சப்படுத்தி அதிலிருந்து 10 ஏக்கர் நிலத்தை வாங்கி, பராமரித்து பயிரிட்டு வந்தேன்”, கூறியுள்ளார் அவர்.

ஒரு கட்டத்தில் முறையாக விவசாயம் கற்பதற்காக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (டி.என்.ஏ.யு) சேர்ந்த அவர், 1959 ஆம் ஆண்டில் தேக்கம்பட்டி பஞ்சாயத்து கவுன்சிலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்!
1958 இல் தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சட்டம் அமலுக்கு வந்த பின் நடத்தப் பட்ட முதல் தேர்தலிலேயே பாப்பம்மாள் பாப்பம்மாள் பாட்டி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி: பாலிமர் செய்தித் தொலைக்காட்சி

நேரம் மற்றும் வேலைப்பளுவின் காரணமாக 10 ஏக்கர் நிலத்தில் சுமார் 2.5 ஏக்கர் நிலம் மட்டுமே இப்போது இவர் வசம் இருந்தாலும், இருக்கும் நிலத்தில் வயதோ களைப்போ, எதையும் காரணம் காட்டாமல் 105 வயதிலும் இடையறாது வேளாண் தொழில் புரிந்து வருகிறார், இந்த சாதனைப் பெண்மணி. அதிலும் குறிப்பாக ஆர்கானிக் விவசாய முறையில் மட்டுமே இவர் பயிரிட்டு வருகிறார் என்பதும் நோக்கத் தக்கது.

அனிதா பால்துரை

பெண்கள் கூடைப்பந்தாட்டத்தில் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பலரது மதிப்பையும் பாராட்டுகளையும் வென்றவர், அனிதா பால்துரை.

2006 காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கூடைப்பந்தாட்டத்திற்கான ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் பாராட்டும்படி விளையாடியவர். தனது 18 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில், ஆசிய 3×3 கூடைப்பந்தில் இரண்டு தங்கப் பதக்கங்கள், ரயில்வே சார்பாக விளையாடி வென்ற 11 தேசிய சாம்பியன்ஷிப்கள் என எண்ணற்ற உச்சங்களைத் தொட்டவர் அனிதா.

நன்றி: நியூஸ் 7 செய்தித் தொலைக்காட்சி

திருமணம், குழந்தைப்பேறு எனப் பெண்கள் கடந்து வரும் அத்தனை கட்டங்களையும் எல்லோரையும் போலவே கடந்தும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து பல சாதனைகள் புரிந்து வரும் வைரமங்கை இவர்.

ஒன்பது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குரிய இவர், ஏழு முறை தேசியப் பெண்கள் கூடைப்பந்தாட்ட சீனியர் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். விடாமுயற்சியும், தனது குடும்பத்தார் தனக்கு அளித்த ஆதரவும் தனக்கு விருது கிடைக்க உதவிய முக்கிய காரணங்கள் என்கிறார் இந்த 35 வயது விளையாட்டு வீராங்கனை.

பாம்பே ஜெயஸ்ரீ

பாம்பே ஜெயஸ்ரீ என்று பிரபலமாக அறியப்படும் திருமதி. ஜெயஸ்ரீ இராம்நாத், பெருமதிப்பிற்கும் புகழுக்கும் உரிய திரு.லால்குடி ஜெயராமன் அவர்களிடம் இசை பயின்றவர் ஆவார்.

கர்நாடக சங்கீதம், திரை இசை என பல பரிணாமங்களில் பல சாதனைகள் புரிந்தவர் இவர், முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், ஹாரிஸ் ஜயராஜ், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையில் பல அருமையான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் வழிநடக்கும் ‘AIM For Seva’ (NGO) சார்பில் மஞ்சக்குடியில் இவர் ஆற்றி வரும் இசைத்தொண்டு, சமூகநலனில் இவருக்கு இருக்கும் அக்கறையை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்றால் அது மிகையல்ல.

தனக்கு கிடைத்த இந்த விருதினை தனது குருமார்களுக்கும் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார், இந்த தேனிசைக் குரலுடையவர்.

இப்படியாக இந்திய நாட்டின் மிக உயரிய விருதினை உழைப்பால் ஈன்ற இந்த சாதனைப் பெண்களின் கதைகளை நம் வீட்டு பிள்ளைகளிடம் கூறி அவர்கள் மனதிலும் சாதனைக் கனவுகளை விதைப்போம்!

பட ஆதாரம்: ட்விட்டர்

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 67,789 Views
All Categories