Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
பாலு மகேந்திரா எனும் திரை ஆளுமை போல் மாநிறமான, கருநிறமான பெண்களின் அழகை தமிழ் சினிமாவில் கொண்டாடியவர் யார்?
புத்தகங்களும் திரைப்படங்களும் அதிக ஆதிக்கம் செலுத்திய மனச்சூழல் என்னுடையது. ஏற்கனவே பெயரளவில் தெரிந்து இருந்தாலும் தனித்துவம் ததும்பும் ஒரு திரைக் கலைஞராக பாலு மகேந்திராவின் அறிமுகம் முதன்முறையாக 1998-இல் சன் டிவி’யில் ஒரு முன்னிரவு வேளையில் ‘மூடுபனி’ திரைப்படம் பார்த்த போது தான் கிடைத்தது.
அதற்கு முன்பே ‘மூன்றாம் பிறை’ பல முறை கண்டிருந்தும் ‘இயக்குனர்’ என்ற சிம்மாசனத்தின் அதிகாரம் புரிந்த பின்னே பார்த்த முதல் சில படங்களில் ஒன்றாக ‘மூடுபனி’ அமைந்தது. அன்றிலிருந்து பாலு மகேந்திரா படம் என்றாலே அதில் ஏதோ ஒரு அசாத்தியத்தை எதிர்பார்க்கும் ஒரு வழக்கம் ஒட்டிக் கொண்டது.
வளர வளர சில நுணுக்கங்கள் அவரது திரைப்படங்களில் பிடிப்பட்டன.
குறைந்த கதைமாந்தர்களை கொண்ட ஆழமான கதைச் சூழலுக்குள் 3 மணிநேரம் கட்டுண்டு கிடந்த காலங்கள் அவை. நிறைய படங்களில் கதைக்களம் நிகழும் ஊரும் அங்கு நிலவும் பருவச் சூழலும், இளையராஜாவின் இசையும், சில நேரங்களில் நிசப்தமும் கூட உயிருள்ள கதாபாத்திரங்களாகவே பட்டன.
என்னை முக்கியமாக ஈர்த்த விஷயம் பாலு மகேந்திராவின் கதைநாயகி தேர்வு. கதையோட்டதோடு ஒன்றிப் போகும் வேளையில் தேவதைகளாய் மிளிரும் பெண்கள் அவர்கள்.
‘மூடுபனி’யில் ஷோபா.‘வீடு’ படத்தின் நாயகி, அர்ச்சனா.‘மறுபடியும்‘ ரேவதி. மற்றும் ரோகினி.‘மூன்றாம் பிறை‘ ஸ்ரீதேவி. சில்க் ஸ்மிதா.‘சதிலீலாவதி‘ நாயகிகள் கல்பனா, கோவை சரளா மற்றும் ஹீரா.
இவர்களில் ‘வீடு’ படத்தில் வரும் அர்ச்சனா, ‘மறுபடியும்’ ரேவதி மற்றும் ‘சதிலீலாவதி’ கல்பனா என்னுடைய ஆதர்ச கதாபாத்திரங்கள்.கல்பனா என்ற நடிப்பு ராட்சசி, என் பிள்ளைகள் சொல்வது போல், என்னுடைய “ஃபேவரைட்”!
டூயட் பாடல் அழகிகளாக வந்து போகாமல் புற அழகையும் மீறிய தீர்க்கமான குணசித்திர அமைப்புடைய, உறுதியான, யதார்த்தமான, ஆழமான கதைபாத்திரங்களாக பாலு மகேந்திராவின் கதைநாயகிகள் அமைந்திருப்பார்கள். ‘வீடு’ திரைப்படம், அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைச்சித்திரம் என்பது என்னுடைய பணிவான கருத்து.
உங்களுள் பலர் ‘சிவாஜி’ திரைப்படத்தில் வரும் லஞ்ச ஆதிக்கங்களைக் கண்டு பொருமி, பின்னர் சூப்பர் ஸ்டார் எல்லாத் தடைகளையும் ‘மேஜிக்’ போல உடைத்து, சாவில் இருந்து கூட மீண்டு வரும் காட்சிகளில் பரபரத்து கைத்தட்டி விசில் அடித்திருக்கலாம்!
‘சிவாஜி’ எனும் சூப்பர்-ஹீரோவின் நிலையும் ‘வீடு’ கட்ட விழையும் 22 வயதே ஆன ‘சுதா’ (அர்ச்சனா) என்ற பெண்ணின் நிலையும் அடிப்படையில் ஒன்று தான்.
‘வீடு’ திரைப்படம் ‘மேஜிக்’ எதுவும் இல்லாத, யதார்த்தத்தை, ரியலிசத்தை முன்வைக்கும் நேர்த்தியான கலைப் படையல்.
பிரம்மாண்ட செலவில் பாடல் செட்டுகள், ‘வாங்க… பழகலாம்’ காமெடி என்று நம்மை ‘அட’ போட வைத்த பல விஷயங்கள் கிடையாது..‘வீடு’ திரைப்படத்தில் இளையராஜாவின் இசை இருக்கிறது. ‘முருகேசன் தாத்தாவாக’ வரும் சொக்கலிங்க பாகவதர், உங்கள் மனதில் ஒட்டிக் கொள்வார்.
வாடகை வீட்டில் குடியிருக்கும் மூன்று பேர் (சுதா, அவள் தங்கை இந்து, தாத்தா முருகேசன்) கொண்ட ஒரு நடுத்தர வர்க்க குடும்பம், அண்ட் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் சொந்த வீடு கட்டி அதில் வாழ்வது என்று முடிவு செய்கிறார், சுதா.
நேர்மையற்ற நபர்கள், லஞ்சம் கேட்கும் அதிகாரிகள், கடன் தர இழுத்தடிக்கும் வங்கி, ‘நீ ஒரு பெண், நான் ஒரு ஆண்…’அட்ஜஸ்ட்’ செய்து கொண்டால் உதவுகிறேன்’ என எல்லை மீறப் பார்க்கும் பெண்வெறி ஊறிய மேலதிகாரி…என பல தடைகள்.
இவர்களைத் தாண்டி, சில நல்ல மனிதர்களின் துணையோடு, சுதா வீட்டைக் கட்டி முடித்து தாத்தா தங்கையுடன் சொந்த வீட்டில் குடிபோனாரா என்று விரிகிறது கதை.
‘சுதா’வாகவே வாழ்ந்த அர்ச்சனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கித் தந்த படம் (சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் வென்ற படம்!) இது. 1980களில் பெண்ணை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த கதைக்கான ‘இன்ஸ்பிரேஷன்’, தன்னுடைய அம்மா சொந்த வீடு கட்டும் போது எதிர்கொண்ட சவால்கள் தான் என்று பாலு மகேந்திரா குறிப்பிட்டு இருக்கிறார்.
சுதா(அர்ச்சனா)வின் நிலை யதார்த்தத்தில் ஊறி இருப்பதால், உங்களால் அவளது கனவை, வலியை, இன்னும் ஆழமாக உணர முடியும். அண்ணன், தந்தை என்று வீட்டு ஆண்களின் துணை எதுவும் இன்றி, கிட்டத்தட்ட தனியாகவே எல்லா இடர்களையும் எதிர்கொண்டு, இறுதி வரை விடாமல் போராடும் சுதாவின் உறுதி, உங்கள் மனதில் நிற்கும்.
மாநிறமான கருநிறமான பெண்களின் அழகை பாலு மகேந்திராவை போல் தமிழ் சினிமாவில் கொண்டாடியவர்கள் மிகச் சிலரே.
இதற்கு ‘வீடு’ படத்தில் வரும் அர்ச்சனாவின் ஒப்பனையில்லாத இயற்கையான எழிலின் பதிவு ஒன்றே போதும்.
சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவி ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் “கருநிறமுடைய மற்றும் மாநிறமுடைய பெண்களே எனக்கு அழகிகளாக படுகிறார்கள்” என்று ஸ்திரமாக தன் கருத்தினை அவர் முன்வைத்த பொழுது முன்பை விடவும் அவரை அதிகமாக பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை.
(நான் கருப்பு. “உங்க அம்மா நிறம் உங்களுக்கு வரலை… இல்ல..? பாவம்” என்று கேட்டுக் கேட்டு புளித்துப் போன காதுகளில் கம்மல்கள் பூட்டியவள் நான்!)
வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி ஆகியோரின் படைப்புகளும் முன்பே மிகவும் பிடித்திருந்தாலும், அவர்களின் விளைநிலம் பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ என்றறிந்த பின் அவர்கள் மீதான அபிமானமும் எதிர்பார்ப்பும் மேலும் உயர்ந்தன. இதுவே பாலு மகேந்திரா என்ற மனிதரின் தனித்தன்மைக்கான முத்திரை.
‘வடசென்னை’யில் வரும் சந்திரா, ‘தரமணி’ஆல்தியா ஆகிய பெண்கள் தாங்கி வரும் அந்த பெண்மையின் மென்மை, நளினம் கலந்த தைரியம், நேர்த்தி, உறுதி எல்லாம் சுரந்த ஊற்றின் அடிவாரத்தில் பாலு மகேந்திரா என்கிற ஆளுமை இருந்திருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
பிப்ரவரி 13, 2014 – இல் மண்ணுலகை விட்டு மறைந்தார் பாலு மகேந்திரா. பெண்களைத் திரையில் யதார்த்தமாக பிரதிபலித்த கலைஞனுக்கு இந்தக் கட்டுரை ஒரு எளிய சமர்ப்பணம்.
பட ஆதாரம்: YouTube
Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...
Please enter your email address