Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
வாசிப்பு என்பது ஒரு பிரத்யேக வாழ்க்கை முறை என்றால் வாசிப்பவர்களுக்கெல்லாம் சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு பெருவிழா தான்!
வாசிப்பு என்பது ஒரு பிரத்யேக வாழ்க்கை முறை என்றால் வாசிப்பவர்களுக்கெல்லாம் சென்னை புத்தகக் காட்சி ஒரு பெருவிழா தான்!
உங்கள் ஆரோக்கியம் சீராக இருந்து, விருப்பமும் வாய்ப்பும் அமையப் பெற்றவர்கள் சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் வருகிற மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் 44 வது சென்னை புத்தகக் காட்சிக்கு சென்று வாருங்களேன்.
கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக வழக்கம் போல் கூட்டம் இல்லாவிட்டாலும், 700 அரங்குகள், அருமையான புத்தகக் குவியல்கள், தமிழ், ஆங்கிலம், காப்பியங்கள், புதினங்கள், கவிதை, புனைவுப் புத்தகங்கள், சினிமா, மொழி வரலாறு மற்றும் சமூகவியல் ஆவணப் படைப்புகள், ஆன்மிகம், அரசியல், சுயசரிதை, குழந்தைகளுக்கான பிரத்யேக படைப்புகள், மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் என களை கட்டி நிற்கிறது, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தி வரும் இந்த பெருநிகழ்வு.
காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் அனைத்து புத்தகங்கள் மீதும் 10% தள்ளுபடி போக, பல அரங்குகளில் தனிப்பட்ட முறையில் சலுகைகள் கிடைக்கும் ஏற்பாடும் உள்ளது.
முக்கியமாக, கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளுடன் இந்த வருட புத்தகக் காட்சி அமைக்கப் பட்டுள்ளது சிறப்பு.
எந்தெந்த ஸ்டால் எங்கெங்கு இருக்கிறது என்று தெளிவான விளக்கமளிக்கும் தாள்களை பெற்றுக் கொள்ளலாம், அல்லது ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.
உங்களது அபிமான எழுத்தாளர்களையும் இன்ன பிற பிரபலங்களையும் கூட நீங்கள் சந்திக்கக் கூடும் – வாய்ப்பும் சூழலும் அமைந்தால்.
நேற்று நான் புத்தகக் காட்சிக்கு சென்ற போது உடன் வந்திருந்த குருமூர்த்தி ரத்தினம் என்கிற இளம் வாசக நண்பர் சொன்னது இது:“நான் ஒரு புத்தக ஸ்டாலில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி பூ.கொ. சரவணன் அவர்கள், ‘தமிழ் வாசிப்பாயா தம்பி?’ என்று என்னிடம் கேட்டார். ‘வாசிப்பேன், சார்’, என்று நான் சொல்லவும், ‘எவ்வளவு புத்தகம் வேண்டுமோ எடுத்துக் கொள், அத்தனைக்கும் நான் விலை கொடுத்து விடுகிறேன்’ என்று சொல்லி, வாங்கியும் கொடுத்தார்! ‘புத்தகம் வாசிக்கணும் தம்பி. தமிழ் வாசிக்கணும்’, என்று சொன்னார்!என்னை தவிர்த்து இன்னும் சிலருக்கும் இதே போல் புத்தகம் வாங்கிக் கொடுத்துவிட்டு சென்றார்!”
இது போன்ற சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாத இந்த வருட புத்தகக் காட்சியில், நான் பார்த்ததில் எனக்கு உவந்த சில புத்தக அரங்குகளை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்கிறேன் – ஒரு ஐடியா கிடைக்கும் என்பதற்காக மட்டுமே.
இது பரிந்துரை அல்ல என்பதை குறிப்பிட்டு தெரிவித்து கொள்கிறேன்.
சமூகவியல், தமிழ், சாதீயம் அற்ற சமத்துவம், ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமை மீட்பு, அரசியல், சினிமா, பெண்ணியம், கவிதைத் தொகுப்புகள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் நிறைந்த தளம், நீலம் பதிப்பகம்.
நீங்கள் எந்த வகை புத்தகங்களை தேடுகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டு பொறுமையாக நீங்கள் வேண்டுவதை எடுத்துக் கொடுக்கிறார்கள் – கூட்டம் குறைவாக இருப்பதில் இது ஒரு வசதி! அருமையான படைப்புக் குவியலை தேர்வு செய்து வைத்துள்ளனர். விருப்பமிருந்தால், நீங்களே சென்று பாருங்களேன்.
நீங்களும் என்னைப்போலவே சுப்பாண்டி காமிக்ஸ் படித்து வளர்ந்தவரா? உங்கள் பிள்ளைகளுக்கு எளிய வகையில் வாசிக்கப் பழக்க விரும்புகிறீர்களா? ஆமென்றால் அமர் சித்திரக் கதை ஸ்டால் உங்களுக்கு பிடித்து போகலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய சித்திரக் கதைகளை, 3 மற்றும் 5 கதைகளின் ஒருங்கிணைந்த 3-இன்-ஒன், 5-இன்-ஒன் தொகுப்புகளாகவும் வாங்கிக் கொள்ளலாம்!
சுயசரிதைகள், வரலாறு, சமூகவியல் சார்ந்த படைப்புகளுக்காக பெயர்பெற்ற கிழக்கு பதிப்பகத்தில், நேற்று நடந்த “வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்” புத்தக அறிமுக விழாவை நேரில் பார்க்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது எனக்கு!
“நம்முடைய வரலாறு பெரும்பாலும் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் கண்வழியாக வாங்கி எழுதப் பட்டு, இன்று பாடப்புத்தகங்கள் வழியாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப் பட்ட ஒன்றாக இருக்கிறது. மேலும் இது பெரும்பாலும் மேல்தட்டு மக்களின் கருத்துகளின் கோர்வையாகவே உள்ளது.உண்மையில், நம்முடைய வரலாறு நம்மால் எழுதப்பட வேண்டிய ஒன்று. அதுவும் அடிப்படை நமது மண் சார்ந்த, அங்கு அன்றாடம் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியல் பதிவாக இருக்க வேண்டியது – அது சார்ந்த முயற்சியே இந்த நூல்” என்று குறிப்பிட்டார் “வடசென்னை: வரலாறும் வாழ்வியலும்” நூலை ஆராய்ச்சியும் எழுத்துமாக வடிவமைத்த தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலரும், எழுத்தாளருமான நிவேதிதா லூயிஸ் அவர்கள்.
என் அம்மாவிற்காக எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன், புதுமைப்பித்தன் ஆகியோரின் அருமையான புத்தகங்களை பாக்கெட்டுக்கு பங்கம் வைக்காத விலையில் இங்கு வாங்கினேன். தலைமுறை தாண்டி புகழ் பெற்ற ஆன்மிகப் படைப்புகள், புதினங்கள், சுய-முன்னேற்ற புத்தகங்கள் என வகை வகையான வரிசைகளை பார்த்து மகிழலாம்.
“ஆசை தான். ஆனால் படிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது?” என்கிறீர்களா. வழி இருக்கிறது: ஒலிப் புத்தகங்கள்!
தமிழ், ஆங்கிலம் என பல மொழிகளில் ஒலிப் புத்தகங்களை வெளியிடப்பட்டுள்ளன. உங்களுக்கு வேண்டும் புத்தகங்களை மொபைல் போனில் குறிப்பிட்ட செயலி/ஆப் (app) மூலமாக கேட்டுக்கொண்டே நீங்கள் உங்கள் சமையல் மற்றும் இதர வேலைகளை செய்யலாம். ரேடியோவில் பாடல், நாடகம் கேட்டுக் கொண்டே வேலையை முடிப்பார்களே, அப்படித் தான். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஸ்டோரிடெல் ஸ்டாலிற்கு சென்று சிறப்பு சலுகைகளுடன் நீங்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
இன்னும் சாகித்திய அகாடெமி விருது வென்ற படைப்புகள், ஆன்மிக படைப்புகளுக்கு பெயர் போன லிஃப்கோ நிறுவனம், இஸ்கான் அமைப்பு, அம்மன் பதிப்பகம், பல சமகால படைப்புகளை வெளியிடும் வாசகசாலை பதிப்பகம், மற்றும் திராவிடம், பொதுவுடைமை சார்ந்த புத்தகங்களுக்கென்றே அமைந்த ஸ்டால்களும் இடம்பெற்றுள்ளன.
இத்துடன் அபாகஸ், டெலெஸ்கோப் போன்ற குழந்தைகளுக்கான ஆக்கப்பூர்வமான விளையாட்டு, கல்வி சாதன பொருட்களுக்கென்றே அமைந்த ஸ்டால்கள், அனைத்து வயதினரும் பங்கேற்று மகிழும் படியான பல சிறப்பு நிகழ்ச்சிகள், மணக்கும் உணவு வகைகள், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என விழாக்கோலம் பூண்டு நிற்கிறது YMCA மைதானம்! கூட்டம் இல்லாதது கூடுதல் போனஸ்.
வருகிற மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் காட்சிக்கு விருப்பமும் வாய்ப்பும் அமைந்தவர்கள் சென்றுவிட்டு உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...
Please enter your email address