தவறே செய்யாவிட்டாலும் பெண் ஏன் பாதிக்கப்படுகிறாள்?

தவறே செய்யாவிட்டாலும், பெண் சர்ச்சையில் சிக்கினால், பிரச்சனையில் சம்பந்தப்பட்ட ஆணை விட அவளே அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

தவறே செய்யாவிட்டாலும், பெண் சர்ச்சையில் சிக்கினால், பிரச்சனையில் சம்பந்தப்பட்ட ஆணை விட அவளே அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

ஒரு கிராமத்தில் ஒரு மிகப் பெரிய மனிதர் இருக்கிறார். அவரிடம் யாரும் அவ்வளவு சுலபமாக நெருங்க முடியாது. எப்போதாவது கோயில், பஞ்சாயத்து போன்ற இடங்களில் மட்டும் தான் அவரை அருகில், நேரில் பார்ப்பார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். பொதுஜனம் பார்க்கும் போதெல்லாம் அவர் யாருக்கோ உதவுவதும், நல்லது செய்வதுமாக இருக்கவே, பெருமதிப்பு ஏற்பட்டு போகிறது.

பின் ஒரு நாள், அவர் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர் என்று யாரோ ஒரு பெண் அழுது கேவிக் கொண்டு சொல்ல, அதை கேட்டு இன்னொரு பெண்ணும், “ஆம், அது உண்மை தான், என்னிடமும் அப்படி தவறாக அத்துமீற முயற்சித்தார்” என்று சொல்ல, இன்னும் ஒரு 6-7 பெண்கள் அவர்களுக்கு நடந்ததையும் சொல்ல…

அதற்கு பின் என்ன – பஞ்சாயத்து, வழக்கு, நியாயம் என்று போக…அந்த கிராமத்து ஹீரோ தலைமையில், இளைஞர்கள் அவரை ஊருக்கு நடுவில் நிற்க வைத்து நியாயம் கேட்க/தண்டனை வழங்க, அப்படியே பாதிக்கப் பட்ட பெண்களில் ஒருவரான ஹீரோயின் ஹீரோவிடம் சொக்கிப் போக…

இப்படி ஒரு படம் எடுத்தால், இன்றும் கூட ஓரளவேனும் நன்றாக ஓடி விடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் நிஜத்தில்?

‘ரீல்’ வேறு, ‘ரியல்’ வேறு

2018 ஆம் ஆண்டில் பாடகி, டப்பிங் குரல் கலைஞர், பிசினஸ்வுமன், மனைவி, மகள் என பன்முகம் கொண்ட சின்மயி, சினிமா துறையில் எத்தனையோ பேருக்கு இல்லாத தைரியத்துடன் முன்வந்து, ‘கவிப்பேரரசு’ வைரமுத்து தன்னிடம் அத்துமீற முயன்றதாக முன்வந்து பதிவு செய்தார்.

அவரை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து அவர்களை குறித்த புகார்களுடன் வெளிவந்தனர். சமூக ஊடகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடித்துக் கொண்டது.

போதாதற்கு, நடிகர் ராதாரவியின் முடிவின் பெயரில், சின்மயி மீது டப்பிங் யூனியன் தடை விதித்தது.

இயக்குனர்-நடிகர் ஜி மாரிமுத்து, ‘வைரமுத்து சின்மயியிடம் கேட்டதில் அப்படி என்ன தப்பு இருக்கிறது? ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் இயல்பாக கேட்பது தானே? விருப்பமில்லாவிட்டால் விட்டுவிட்டு போக வேண்டியது தானே? இதை ஏன் இவளவு பெரிய விஷயம் ஆக்கவேண்டும்?’ என்று வெளிப்படையாகவே கேட்கும் அதிசயமும் இங்கே நிகழ்ந்தது.

‘மகளிர் தின’ கட்டுரை?!

இதெல்லாம் இப்படியே கிடக்க, இந்த வருட மகளிர் தினத்தன்று தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று, “பெண்கள் கூட்டுப் புழுவா? பட்டுப்பூச்சியா? கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள்” என்று துளியும் தர்மசங்கடம் இன்றி அவரை முன்னிறுத்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“என்னைச் சார்ந்த எல்லா செய்திகளிலும் நான் ‘மீ டூ (#MeToo) சர்ச்சையின்’ ஒரு பகுதியாக இருந்தேன் என்பது குறிப்பிடப்படும் நிலையில், கவிஞர் வைரமுத்து பற்றிய கட்டுரையை வெளியிட்ட (அந்த) நாளிதழ், 17 பெண்கள் கவிஞர் வைரமுத்து தங்களிடம் அவர் பாலியல்ரீதியாக அத்துமீற முயன்றார் என்று முன்வந்து கூறியதை குறிப்பிட மறந்து விட்டதா?

மகளிர் தினமும் அதுவுமாக, நான் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கிறேன்- நடிகர் ராதா ரவி மற்றும் அவர் நிர்வகிக்கும் டப்பிங் யூனியன் என் மீது விதித்த பணியாற்றுவதற்கான தடையை நீக்கக் கோரி கோர்ட் வாசலை மிதித்திருக்கிறேன். என்னிடம் அத்துமீற முயன்ற அரசியல் செல்வாக்கு மிகுந்த மனிதரால் பறிக்கப்பட்ட எனது வேலை உரிமைக்காக இங்கு அமர்ந்திருக்கிறேன். ஆகட்டும், இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், சின்மயி.

இப்பொழுது தான் பிரியா ரமணி வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து, ‘யாராக இருப்பினும் குற்றம் குற்றமே’ என்று பாலியல் ரீதியாக பெண்களிடம் அத்துமீறியதாக சொல்லப்படும் முன்னாள் அமைச்சர் எம்.ஜெ.அக்பர் மீது நீதிச் சாட்டையை சொடுக்க, நம்பிக்கை ஒரு ஓரமாக எட்டிப் பார்த்தது.
அதில் ஒரு குழப்பத்தை முளைக்க வைத்திருக்கிறது, இந்த நிகழ்வு.

இதையும் வாசித்துவிட்டு, நாலு ‘உச்’ கொட்டிவிட்டு, நாம் எப்போதும் போல் நம் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறோமா?

இயன்ற வழியில் ஆதரவாய் இருப்போம்

யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் கேள்வி இது தான்:
தவறு செய்த மனிதர்கள், செல்வாக்கும் அதிகாரமும் இருக்கும் வரையில், தவறை தொடர்ந்து இலைமறைவு காய்மறைவாக செய்து கொண்டே தான் இருக்கப் போகிறார்களா?

“அவரெல்லாம் இல்ல. அப்படித்தான்” என்று இவர்களை பார்த்து ஊரில் உள்ள மற்றவர்களும் துளிர்விட்டு, தவறை துணிந்து செய்யும் நிலை தொடர்ந்தால்?

அப்புறம் எங்கே பெண்கள் மலர்வது? வளர்வது? சின்மயி போன்ற யாரோ ஒருவர் பார்த்துக் கொள்ளட்டும் என்று இருப்பவர் இருந்து விடுவோம். மற்றவர் இது போன்ற சம்பவங்களுக்கு இயன்ற வழியில் நியாயம் தேடுவோம், விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். பிள்ளைகளுக்கு நல்லதை சொல்லி வளர்ப்போம்.

எந்த விதத்திலேனும் இது போன்ற சீண்டலுக்கு, அத்துமீறலுக்கு ஆளான பெண், ஆண், குழந்தை, மூன்றாம் பாலினத்தவர் என யாராக இருந்தாலும், நமக்கு முடியும் பட்சத்தில், இயன்ற வழியில் அவருக்கு ஆதரவாய் இருப்போம்.

“தீமை நடக்கிறது என்று சொல்லி அதை தடுக்காமல் அதன் கூடவே பயணிக்கிறவர்கள், தீமையின் ஒரு பகுதியாகவே ஆகிறார்கள். எதிர்த்து நிற்கிறவர்களே வரலாறு ஆகிறார்கள்.”
(ராட்சசி, 2019)

பட ஆதாரம்: Pexels.com

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 67,794 Views
All Categories